இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி அரசியல் பேசியது கண்டிக்கத்தக்கது. நதிகளை இணைப்பது என்ற கருத்து நேரு காலத்தில் உருவானது. நதிகளை இணைக்க இந்திரா காந்தி முயற்சி மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்திட்டத்தில் நதிகள் இணைப்பு இடம் பெற்றது. வரலாறு தெரியாமல் பேசுகிறார் ராகுல்காந்தி. இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என்றார்.
சென்னையில் இலங்கை பிரச்சினை தொடர்பாக நேற்று ராகுல்காந்தி அளித்த பேட்டி விவரம் வருமாறு:
கேள்வி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுபோல், இலங்கையில் முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளும் கவலை தருவதாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு உரிய நியாயத்தை வழங்கவில்லை என்ற நம்பிக்கை தமிழகத்தில் பரவலாக உள்ளதே?
பதில்: எங்கள் குடும்பத்தை பொருத்தவரை, தமிழக மக்கள் மீது எப்போதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். இலங்கைக்கு மூத்த தலைவர்களை அனுப்பி, இலங்கை தமிழ் மக்கள் நிலை தொடர்பாக இலங்கை அரசுக்கு, மத்திய அரசு ஏற்கனவே நெருக்கடி கொடுத்துள்ளது. பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (எம்.கே.நாராயணன்) ஆகியோரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இலங்கை தமிழர்களுக்கு தரப்படவேண்டிய உரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இதற்கு மாறாக அங்கு வேறு ஏதேனும் நிகழ்ந்தால், இந்திய அரசும், பிரதமரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
கேள்வி: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக, மத்திய அரசுக்கு எந்தவிதமான நெருக்குதலை தாங்கள் கொடுப்பீர்கள்?
பதில்: தனிப்பட்ட முறையில், மத்திய அரசுக்கு நான் எந்தவிதமான நெருக்கடியை தரமுடியாது. நான் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது கருத்தை மட்டுமே சொல்ல முடியும். நான் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது.
கேள்வி: நேற்றுகூட 4 பேரை நிர்வாணமாக்கி கொன்றிருக்கிறார்களே?
பதில்: இலங்கை அரசுக்கு, இந்திய அரசு, தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது.
கேள்வி: ஆனால், பலன் ஒன்றும் ஏற்படவில்லையே. பிரபாகரனின் மரணத்துக்கு பிறகும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரசும், மத்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை என்றுதான் அவர் கேட்கிறார்.
பதில்: மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று அவர் சொல்கிறார். அது தவறு. மத்திய அரசும், இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது. இந்திய அரசின் சார்பில் 2 மூத்த அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். நானே கூட தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோரிடம் இது பற்றி பேசியுள்ளேன்.
கேள்வி: ஆனால், ஐ.நா. சபையில், போர்க்குற்றம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டபோது, இலங்கைக்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது ஏன்?
பதில்: இலங்கை தமிழர்களின் உரிமை பற்றியதே இப்பிரச்சினை. இது புதிய பிரச்சினை அல்ல. இப்பிரச்சினை கடந்த பல ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எனது குடும்பத்தார் இப்பிரச்சினையில் தங்களை நீண்டகாலமாகவே தீவிரமான வகையில் தங்கள் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். எனது பாட்டி, எனது தந்தை ஆகியோர் இப்பிரச்சினையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மீதும் எங்களது குடும்பத்துக்கு மிகுந்த அக்கறை இருந்து வந்திருக்கிறது. இது இப்போதும், எப்போதும் தொடரும். தமிழ் மக்களின் நலனை காக்க தேவையான எந்தவித நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம். இதில் கேள்விக்கே இடமில்லை.
இப்பிரச்சினையில், இலங்கை அரசுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியமோ, அவ்வளவு நெருக்கடியை இந்திய அரசும் கொடுத்து வருகிறது.
கேள்வி: இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: இந்த கேள்வியை நீங்கள் பிரதமரிடத்திலும், வெளியுறவுத்துறை மந்திரியிடமும் கேட்கவேண்டும்.
கேள்வி: இதில், உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் தரப்படவேண்டும். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
கேள்வி: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் 25 ஆயிரம் இலங்கை தமிழர்கள், மோசமான நிலையில் இருந்து வருகிறார்கள். அதற்காக குரல் எழுப்பப்படவில்லையே? (இதற்கு தங்கபாலு பதில் அளித்தார்)
தங்கபாலு பதில்: இது மாநில அரசின் பிரச்சினை. நாங்கள் தலையிட முடியாது. மாநில அரசு அவர்களால் முடிந்தவரை சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கேள்வி: வேலூர் சிறையில் இருக்கும் நளினியை நீங்கள் சந்தித்தீர்கள் என கூறப்படுகிறதே. நீங்கள் நளினியை நேற்று பார்த்தீர்களா? மூன்றாவது பிரமுகர் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதா?
பதில்: இது ஊடகங்களின் கற்பனை. நான் சந்திக்கவில்லை. எந்த தகவல் பரிமாற்றமும் நடைபெறவில்லை. நளினியை சந்திக்கும் திட்டமே கிடையாது.
கேள்வி: நேரு, இந்திரா குடும்பத்தினருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது பகைமையோ, பழிவாங்கும் நோக்கமோ இருந்தது இல்லை. நேற்று கூட இலங்கையில், 4 தமிழர்களை கொன்றுவிட்டார்கள். இது குறித்து காங்கிரசோ, மத்திய அரசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்?''
பதில்: இந்திய அரசு, இலங்கையில் நடைபெறும் பிரச்சினை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். இந்திய அரசு, 2 மூத்த அமைச்சர்களை அனுப்பி உரிய நடவடிக்கையை எடுத்தது தங்களுக்கு தெரியுமா?''



0 Responses to ஈழத்தமிழர் விஷயத்தில் ராகுல்காந்தி கூறுவதெல்லாம் தவறு: வைகோ