கற்பனையில்கூட கட்சிக்கு துரோகம் நினைக்காத என்னை கொலைப் பழி சுமத்தி தூக்கி எறிந்தவர் கருணாநிதி. அவரை காலம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து மறுகுடியமர்த்தக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் திருச்சியில் நடந்தது.
அதில் பேசிய வைகோ,
இலங்கையில் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீண்டும் குடியேற செய்ய வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. அதுவே நிரந்தரத் தீர்வு அல்ல. இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 6 மாதங்களாக போடப்பட்டுள்ள முள்வேலியும் 50 ஆண்டுகளாக போடப்பட்ட முள்வேலியும் உடைத்தெறியப்பட வேண்டும். தமிழர்களை கொன்று அழித்த கொடூர குற்றவாளி ராஜபக்சே.
இதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் உதவியது மன்மோகன் சிங் அரசு. இப்போது கருணாநிதி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார். இப்போது இன்ப நாள் என்று கவிதை எழுதுகிறார். எது இன்ப நாள்?.
சகோதர யுத்தம் நடத்தினார் என்று பிரபாகரனை பற்றி கூறுகிறார். அதைப்பற்றி யார் பேசுவது?.
கம்யூனிஸ்ட், பாமக, முஸ்லிம் லீக்கை உடைத்தவர் கருணாநிதி. கற்பனையில்கூட கட்சிக்கு துரோகம் நினைக்காத என்னை கொலைப் பழி சுமத்தி தூக்கி எறிந்தவர் கருணாநிதி. இப்போது கருணாநிதியிடம் செல்வாக்கு இருக்கலாம். ஆனால் காலம் மன்னிக்காது.
தமிழக இளைஞர்கள், உணர்ச்சி பெற வேண்டும். புலிகளுக்கு நாம் எல்லா உதவிகளையும் செய்வோம். மீண்டும் இலங்கையில் போர் மூளும். குருசேத்திரம் மீண்டும் தொடரும் என்றார் வைகோ.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் 72 கட்சிகள் உள்ளன. ஆனால் இங்கு மேடையில் உள்ள கட்சிகளை தவிர வேறெந்த கட்சிக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கிடையாது.
இலங்கையில் போர் முடிந்து விட்டது என கூறினால் ஈழத் தமிழர்களுக்கு அரசியில் அங்கீகாரம் என்ன?, அரசியல் தீர்வு என்ன?. 3 லட்சம் மக்களை ராஜபக்சே அரசு முள்வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்கிறது. ஏப்ரல் மாதம் இலங்கையில் தேர்தல் நடக்கிறது. அதுவரை இதைக்காட்டி ஓட்டை பெற ராஜபக்சே அரசு தமிழர்களை கொடுமைப்படுத்துகிறது.
இலங்கையில் 4ம் கட்ட போர் முடிவுக்கு வந்தாலும் 5ம் கட்ட போரை நடத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். விடுதலைப் போர் என்பது அந்த இனத்துக்கு தனிநாடு கிடைத்தால் மட்டுமே முடிவுக்கு வரும்.
5ம் கட்ட போர் தமிழ்ஈழம் மலர வேண்டும் அதற்காக நாம் போராடுவோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,
முள்வேலி முகாம்களில் உள்ள இளம் பெண்களின் கர்ப்பப் பைகளை அறுத்து எறியும் அவலத்தை நடத்தியுள்ளது சிங்கள அரசு. தேதி குறிப்பிட்டு முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிக்காவிட்டால் இங்குள்ள தமிழர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகள் என்று கூறி 12,500 தமிழர்களை தனியாக ஒரு முகாமில் வைத்துள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று தெரியாது. இலங்கை சென்ற குழு இதை பற்றி விசாரிக்க வேண்டாமா?.
வேடிக்கை பார்த்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. எந்தெந்த வழிகளில் உதவி வேண்டுமோ அந்த வழிகளில் உதவ வேண்டும் என்றார்.



My support will be there
i would like to publish on my site and dedicate to tamilan , http://foreigntamilan.com, send mail to admin@foreigntamilan.com