சிறீலங்கா அரசு மீள்குடியேற்றம் என்று கூறி பன்னாடுகளை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அப்பட்டமாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு பிரதிநிதிகள் சிறீலங்காவிற்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி, பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து காணொளிகளை எடுத்து விளம்பரப்படுத்துகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுகின்றனர். பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புகின்றனர்.
முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் மாவட்டங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறிக்கொண்டு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறைக்கு அனுப்பப்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையினர் இன்றுவரை அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை. அவர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள படை முகாம்களுக்கு அருகில் தடுத்து வைத்துள்ளனர்.
கடந்த 04 ம் நாள், வலயம் - 04 தடுப்பு முகாமில் குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் வாசித்து அவர்களை அவர்களது இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக பெயர் வாசிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு உடனே தயாராகுமாறும் ஒலி பெருக்கியில் கூறப்பட்டது. இவ்வாறாக பெயர் குறிப்பிட்ட மக்களின் பொருட்களை ஒரு பார ஊர்தியில் ஏற்றிக்கொண்டும், மக்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டும் சென்ற அரச படைகள் அவர்களைக் புதுக்குளம் மகா வித்யாலய முகாமிலும், கோமரசங்குளம் மகா வித்தியாலய முகாமிலும் தடுத்து வைத்தனர்.
புதுக்குளத்திற்கு வந்த குறித்த மக்கள் வீதியிலே இறங்கி முகாமுக்குள் செல்ல மறுத்ததுடன் தங்களது பொருட்களை பார ஊர்திகளிலிருந்து இறக்க விடாமலும் தடுத்தனர். அச்சமயம் அதிகளவு படையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மக்கள் பலவந்தமாக துன்புறத்தப்பட்டு தாக்கப்பட்டு புதுக்குளம் மகாவித்யாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், சிலர் வவுனியா நகரிலிருந்து தொலைவில் உள்ள சிங்கள குடியேற்றங்கள் உள்ள தர்மபுரம், சுமதிபுரம், வீரபுரம் முகாம்களுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். குறித்த முகாம்களில் தர்மபுரம் தடுப்பு முகாமானது போக்குவரத்து வசதிகள் அற்ற காட்டுக்குப் பகுதியில் முஸ்லிம் சிங்கள ஊர்காவற்படைகளின் சுற்றுவளைப்புக்கு மத்தியில் 4844 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சில பெண்களை ஊர்காவற்படையினர் அரச புலனாய்வு பிரிவு போன்று வந்து கடத்தி செல்வதாகவும் இதனை அறிந்து சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித விசாரணைகளும் நடக்கவில்லை என்றும் தடுப்பு முகாமில் உள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தர்மபுரம் முகாமானது அனுராதபுர நிர்வாக அலகிற்கு உட்பட்டு இருப்பதனால் மக்களுக்கு பயனுள்ள சில பதிவுகளை செய்ய முடியாதுள்ளதாகவும் வவுனியா அரசசெயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று கடந்த கிழமை 56 குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதாக கூறி அழைத்துவரப்பட்டு வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் நடு இரவில் இறக்கிவிடப்பட்டனர். இவர்கள் கோவில்குளம் சிவன்கோவிலில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
சிறீலங்கா அரசின் இந்நடவடிக்கையானது இரு விடயங்களை நோக்கமாக கொண்டதாகும்.
ஒன்று, முகாமில் உள்ளவர்கள் ஏதோஒரு வகையில் தாங்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர் எனவும் எதிர்வரும் நாட்களில் தங்களையும் விட்டு விடுவார்கள் என்ற மன ஆறுதலை அடைவார்கள் இதன் காரணமாக சிறீலங்கா அரசு மீதான எதிர்ப்புகள் குறைக்கப்படும் என்று அரசாங்கம் நம்புகின்றது.
இரண்டாவது, தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் வெளி விடயங்களை அறிவதற்கான பத்திரிகைகள் போன்ற ஊடக வசதிகள் வதை முகாம்களில் இல்லாத காரணத்தால் உண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர் என்றே தடுப்பு முகாமிலுள்ள ஏனைய மக்கள் நம்புகின்றனர்.
எனவே, சிறீலங்கா அரசு மக்களை தாங்கள் விடுவிப்பதாக பன்னாடுகளுக்கு காட்டிக்கொள்வதற்கும், பன்னாட்டு அழுத்தங்களை குறைக்கவும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவருகின்றது. அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பெடுக்கும் பட்சத்தில் அவர்களை அக்குடும்பத்திடம் கையளிப்பதாக அரச செயலகம் ஊடாக சில நடவடிக்கைகளை கையாளுகின்றது.
அரச செயலகத்தால் வெளியிடப்படும் அப்படிவத்தில் பொறுப்பெடுக்கும் குடும்பங்களுக்கு உணவு முத்திரைகள் உள்ளடங்கலுடன் எதுவித அரச உதவிகளும் கிடைக்கப்படமாட்டது என்பதற்கு சம்மதித்து கையொப்பம் இட்டால் மாத்திரமே முகாமில் உள்ள குடும்பங்களை பெறுப்பெடுக்க முடியும் எனவும் தொவிக்கப்படுகின்றது.
இதேவேளை தடுப்பு முகாம்களில் உள்ள குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் அதிகளவில் போசாக்கின்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் சிறீலங்கா அரச புலனாய்வுத்துறையினரின் பணத்திற்கு சோரம் போய், முகாம்களில் படம் பிடிக்கும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்களையும், மக்களுடன் அதிகளவில் உறவாடுபவர்களையும் காட்டிக்கொடுத்தும் வருகின்றனர். முகாம்களில் உள்ளவர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கு விலைக்கும் வாங்கி கொடுக்கும் கீழ்த்தரமான இழிவு செயலை ஒட்டுக் குழுக்கள் செய்து வருகின்றனர்.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் இடவசதிக்கு, நீருக்கு, உணவுக்கு, உடைக்கு, மருத்துவத்திற்கு மற்றும் ஏனைய வசதிகளுக்காக ஏங்கித்தவிக்கின்றனர். எதிர்வரும் மாதங்களில் ஏற்படும் மழை காரணமாகவும் பாரிய இடர்களை எதிர்கொள்ளவேண்டியுமுள்ளது.
இவ்வாறு சிங்கள அரசாங்கமானது மக்களை விடுவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் கருத்தில் கொள்ளாது கபட நாடகத்தை நடாத்துகின்றது. எதிர்கால தமிழ்ச் சந்ததிகளில் பிரிவினைகளை உருவாக்கி உடல் ஆரோக்கியமற்ற நலிவுற்ற கல்வியற்ற பொருளாதார வசதியற்ற சமூகமாக உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.
பன்னாட்டு அரசுகள், புலம்பெயர் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுப்பு முகாமில் உள்ள மக்களின் மீட்புக்காகவும், அம்மக்களை வைத்து சிறீலங்கா அரசாங்கம் சுற்றியுள்ள முட்கம்பி வேலிகளை நீக்குவதற்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
தடுப்பு முகாம்களில் தமிழ்மக்களை பிரித்தாளும் தந்திரத்தை சிறிலங்கா அரசு கையாள்கின்றது
பதிந்தவர்:
தம்பியன்
27 October 2009



0 Responses to தடுப்பு முகாம்களில் தமிழ்மக்களை பிரித்தாளும் தந்திரத்தை சிறிலங்கா அரசு கையாள்கின்றது