எதிர்வரும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை கண்காணிப்பில் ஈடுபட அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது.ஜீஎஸ்பி வரிச்சலுகை வழங்குவதனை இழுத்தடித்து வருவதற்காகவே இந்த அனுமதி மறுப்பை சிறிலங்கா அரசாங்கம் வழங்க மறுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும், உண்மையான காரணம் வேறு என அறிய முடிகின்றது.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரணிலின் கட்சி சிறிலங்காவில் ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை வாக்களிப்பதற்கு அனுமதிக்காமையே தமிழ் மக்களின் வாக்குகளின்றி ரணில் தோற்றுப் போனமைக்கு காரணம் என இந்நாடுகள் சீற்றமடைந்திருந்தமை வெளிப்படை.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில், ரணிலை ஆட்சிக்கு கொண்டுவரலாம் என்று இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன. இதற்காகவே சரத் பொன்சேகா திட்டமிட்ட ரீதியில் மகிந்த அரசில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் சுவிசில் நடைபெற்ற தமிழ்க் குழுக்களின் இரககசியக் கூட்டமும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆனால், இவற்றை எல்லாம் முறியடித்து தேர்தல் வெற்றிக்காக பல்வேறு தேர்தல் மோசடிகளை மகிந்தவும் அவரது சகோதரர்களும் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை அனுமதித்தால் தாங்கள் மேற்கொள்ளப்போகும் தேர்தல் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாகவே ஜீஎஸ்பி வரிச்சலுகையைக் காரணமாக்கி ஐரோப்பிய ஒன்றியத்தை கண்காணிப்பில் இருந்து வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் தரப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டால் தேர்தல் கண்காணிப்பில் பயங்கர நிலையை தோற்றுவிக்கும் என்று உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழு ஒன்றின் பேச்சாளர் ஒருவர் எச்சரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



0 Responses to மகிந்தவின் வெற்றிக்காக தேர்தல் கண்காணிப்பில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியேற்றம்