Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அது தொண்ணுற்றி மூன்றுகளின் நடுப்பகுதி... நண்பன் செல்வனுடன் அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன்..அங்கு உணவருந்திக்கொண்டு இருக்கும் போது ஒரு ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமி ஓடி வந்து செல்வனை பார்த்து ... "ஏன் வீட்டுக்கு வரேல்ல செல்வண்ணா.. வாங்கோ,," என்று கேட்டாள். அவனும் "சாப்பிட்டு வாறனம்மா..." என்றதும்... என்னையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.. என்னைப்பார்த்து புன்னகைத்து விட்டு "அண்ணா உங்கட பேரென்ன.." என்றாள்.. நான் "தமிழரசன்" என்றேன்.."இயக்கப்பெயரா.." என்றாள்..நானும் "ம்ம்ம்.." என்றுவிட்டு " தங்கச்சிக்கு என்ன பெயர்.." என்றேன் சிரித்தபடி "செல்வி" என்றாள். "இயக்கப்பெயரோ.." என்று கேட்டு சிரித்தேன்.."ம்ம்ம்.." இந்த பெயர் சரியில்லை என்னோட இயக்க பெயர் "செந்தமிழரசி.." என்றாள். எனக்கு ஆச்சரியம்...!
செல்வன் " இவள் என்னோட மச்சாளடா... நான் வாற நேரமெல்லாம் என்னையும் கூட்டிட்டு போங்கோ எண்டு பெரிய கரைச்சல்..பெரிய ஒரு உணர்வாளி... சரி சரி வாவன் உனக்கு இவளின்ட பொக்கிசங்களை காட்டுறன்.." எண்டு அவளின் வீட்டுக்கு கூட்டி சென்றான். வழி நெடுக அவள் செல்வனின் கையைப்பற்றியபடி ஏதோ கேட்டபடி வந்தாள்...அவனும் வீட்டுக்கு போய் தாறேன் என்றான்.நானும் செல்வனையும் அவனது குட்டி மச்சாளையும் பார்த்து ரசித்தபடி வந்தேன்..

அவளின் வீட்டிற்கு சென்றோம்.. அங்கே அவரது தந்தையோடு உரையாடிக்கொண்டு இருந்த போது... அவள் செல்வனின் மடியில் ஏறி தாங்கோ தாங்கோ என்று நச்சரித்தபடி இருந்தாள்... அவனும் சைகையால், தந்தை இருக்கின்றார் என்று எச்சரிக்கை செய்கின்றான். எனக்கு ஒரே ஆர்வம் இவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று...
"சரி சரி செல்வி உங்கட அல்பத்தை கொண்டு வந்து இந்த அண்ணாக்கு காட்டுங்கோ.." என்று செல்வன் கூறியதும் அவள் மின்னலாக சென்று இரு அல்பங்களை கொண்டு வந்து தந்தாள்..,

தேசியத்தலைவர்: புன்னகையுடன் , சிறுத்தையுடன் , மனைவியுடன் , தளபதிகளுடன் என்று ஏராளமான புகைப்படங்கள்..
அவளும் மிக்க ஆசையுடன் எனக்கு விபரித்து கொண்டிருந்தாள்..
நானும் பார்த்து விட்டு "இதுவா உங்கள் பொக்கிஷம்.." என்றேன்...

"ம்ம்ம் இதுவும் தான் இன்னும் இருக்கு அண்ணா.." என்றவாறு ஒரு பெரிய புத்தக கட்டு போன்று கொண்டு வந்தாள்..
ஆம்... அன்றைய ஈழநாதத்தோடு இணைப்பாக வருகின்ற திலீபன் , அன்னை பூபதி, மற்றும் கரும்புலிகளின் உருவப்படங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது... அச்சிறுமி ஒவ்வொரு படங்களையும் மிக உணர்வோடும் நெகிழ்வோடும் எனக்கு காட்டியபடி " இது அங்கயற்கண்ணி அக்கா முதல் கடற்கரும்புலி பெண்.., இது கொலின்ஸ் , இது வினோத் டோரா படகிற்கு அடிச்சவங்க.." என்றபடி தொடர்ந்தாள்...
அவளுடைய தாயார் கூறினார்,,, "யார் வீட்டுக்கு வந்தாலும் இவளுக்கு இதுதான் வேலை தம்பி... அவளின்ர கொப்பி, புத்தகத்தை கிழிச்சாலும் கவலைப்பட மாட்டாள், இதுகளை யாரும் தொட்டால் அவ்வளவுதான்...."
"தங்கச்சி அப்ப அண்ணோவோட வாறியளோ போவம்...." என்றேன். "அப்பாவும் என்னை விடுகிறார் இல்லை.. செல்வண்ணாவும் கூட்டி போக மாட்டானாம்..என்ன செய்கிறது...நான் வளர்ந்தாப்பிறகு கூட்டிட்டு போங்கோ...ஆனால் எனக்கு செந்தமிழரசி எண்டு தான் இயக்கப்பெயர் வைக்க வேணும் சரியா.." என்றாள். "ம்ம்ம்.. நிச்சயமாக.." என்று கூறி விட்டு விடை பெற்றோம்.. வழியில் கேட்டேன் செல்வனை... "என்னடா மச்சான் அவள் உன்னட்ட கேட்டவள்.."
"ஐயோ அவள் என்னோட குப்பியை தரட்டாம் தான் கழுத்திலை கொளுவ போறாளாம்..
அதான் அப்பா அடிப்பார் என்று கண்ணை காட்டினேன்.." என்று கூறி விட்டு "இப்ப பாரன் அவள் பின்னால ஓடி வராட்டி.." என்று சொல்லி விட்டு திரும்ப,, அவள் நிற்கின்றாள்.
எனக்கு என்னமோ அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் போலிருந்தது..
என் குப்பியை கழற்றி அவளுக்கு அணிவித்தேன். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
என் கையை பிடித்தபடி நடந்து வந்தவள் சொன்னாள் .."சே எனக்கு ஒரு பொக்கற்று இல்லாம போட்டுது.. இல்லாட்டி இப்பிடி எடுத்து,, இப்பிடி விட்டிருப்பேன்.." என்று குப்பியை எடுத்து காட்டினாள்...
அந்த அழகிய வீரச்சிறுமியின் உணர்வை நினைத்து பெருமிதப்பட்டபடி அவளை முத்தமிட்டு அவளிடம் இருந்து விடை பெற்றோம் இருவரும்..கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவள் நின்று கை அசைத்து கொண்டே இருந்தாள்..

இரு மாதங்களின், பின் மீண்டும் அவளை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம்...!
ஆம்.. செல்வனின் இறுதி ஊர்வலத்தின் போது..! அவனுடைய வித்துடல் கிடைக்க பெறவில்லை.... நானும் பல போராளிகளும் அவன் இல்லத்தில் கூடி இருந்தோம். செல்வனின் அன்னை ,தந்தை உறவினர்கள் எல்லோரும் கதறிய படி அவன் திருவுருவ படத்தை தொட்டு அழுது கொண்டிருக்க...அந்த சிறு பெண்.. ஓடி ஓடி பூக்கள் பறித்து மாலை கட்டிக்கொண்டு இருந்தாள்... அவள் முகத்தில் எந்த வித சோகமும் இல்லை...நான் எழுந்து சென்று அவள் அருகில் உட்கார்ந்தேன். என்னை நிமிர்ந்தது பார்த்தவள்.. "அப்போ அண்ணாக்கு கல்லறை கட்ட மாட்டிங்களோ.. தனிய பெயர்ப்பலகை மட்டுந்தானா.." என்றாள். எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது... " உனக்கு அழுகை வரலையா... உன் செல்வண்ணா இனி வர மாட்டான்.. உனக்கு கவலை இல்லையா.." என்றேன்..
"ஏன் கவலை..? அண்ணா தான் வீரச்சாவு அடைஞ்சிட்டாரே... அவர் மாவீரர்,, எனக்கு பெருமையாக இருக்கு... நானும் ஒரு நாளைக்கு மாவீரர் ஆவேன் எனக்கும் இப்பிடி இறுதி ஊர்வலத்தோடு மாலை போட்டு அஞ்சலி செய்வாங்கள்...!" என்று ஒரு உத்வேகத்துடன் கூறி விட்டு எழுந்தாள். துயிலும் இல்லத்திற்கும் வருகை தந்து மாலையிட்டு அஞ்சலி செலுத்தினாள்..

அன்று மட்டுமல்ல அதன் பின்னும் அவள்,, துயிலும் இல்லம் வந்து அஞ்சலி செலுத்துவதை பல தடவை நான் பார்த்திருக்கின்றேன்.

அந்த ஒன்பது வயது சிறுமி... என் இதயத்தில் ஊன்றி போன, அழியா ஒரு வேர்...!
மூன்று வருடங்களின் பின் மீண்டும் அவளை பார்த்தேன். அஞ்சா நெஞ்சுள்ள அந்த வீரச்சிறுமி, கண்களில் கண்ணீருடன்.., என் முன்னே மீசாலையில்..., ம்ம்ம் இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி மக்களை உள்வாங்கிய சமயம்...., " அண்ணா.." என்று ஓடி வந்தாள்..தூக்கி அணைத்து " என்னம்மா என் அழுகின்றாய்.." என்றவாறு சுற்று முற்றும் பார்த்தேன் யாரும் தென்படவில்லை..அவள் அழுதவாறே... "தலைவர் மாமா வின்ர படங்கள் , அண்ணாக்களின்ர படங்களை நிலத்தில தோண்டி தாட்டு போட்டா அம்மா... எனக்கு அது வேணும் அண்ணா நான் உங்களோட வர போறன் என்னை கூட்டிட்டு போங்கோ..அம்மா வேண்டாம்.. எங்களுக்கு தமிழீழம் கிடைக்கும் எண்டு சொன்னீங்கள் இப்ப ஆமி வந்திட்டான் நான் போக மாட்டன்..." எண்டு அடம் பிடித்தாள்... ஒரு சிறு பெண் தன சொந்தங்களை உதறி தலைவரின் படம் வேணும் எண்டு கூறுவது ஆச்சரியம் தான்... மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் அவளை அவளின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தேன்..அவளின் அன்னை "ஆமியின்ர கட்டுப்பாட்டு பகுதிக்குள் எப்படி அவற்றை கொண்டு போவது... பொலித்தீன் சுற்றி கவனமாகத்தான் மண்ணுக்குள் புதைச்சு இருக்கு.. தம்பி இவள் எங்களை விட்டிட்டு ஓடி போறாள் அந்த மண்ணை தோண்டி படங்களை எடுக்க.. அடி போட்டு கூட்டி வந்தேன்.. அதுதான் இந்த கோபம்.." என்றார்கள்..
கண்ணில் கண்ணீருடன் அவளை வழி அனுப்பி வைத்தேன்.. அந்த தேவதை பின் என்ன ஆனாள் என்று எனக்கு தெரியவில்லை. அவளை சந்திக்க மாட்டேனா என்று அங்கலாய்த்தபடி...புலம் பெயர் மண்ணில்.. இருந்து இன்று தேடுகின்றேன்...
இன்று அவளுக்கு இருபத்து நான்கு அல்லது இருபத்தைந்து வயது இருக்கும்...
அவள் ஒரு போராளியாக..அல்லது ஒரு குடும்பத்தலைவியாக அல்லது மாவீரராகி இருக்கலாம்..!

அவளது கனவு மாவீரக்கனவு..!!! அவளது ஆசை தமிழீழம்...!!!

தமிழீழத்திலிருந்து ஒரு தமிழிச்சி

0 Responses to அவளது கனவு மாவீரக்கனவு..!!! அவளது ஆசை தமிழீழம்...!!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com