* பெப்பிரவரி 14ஆம் நாள் வரை கனடா தழுவிய யாப்புக் குறித்த மக்கள் கருத்தாடல்கள்.* தேசியப்பட்டியல், மாநிலப்பட்டியல், தமிழர் அமைப்புக்களின் தெரிவவை எனப் பிரதிநிதிகள் தெரிவாவர்.
கனடாவில் அமையவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான யாப்பு மக்கள் பார்வைக்காக கனடிய தமிழர் தேசிய அவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி தேசிய அவைக்கு 33 பிரதிநிதிகள் தெரிவாவர். இவர்களில் 12 பேர் தேசியப்டடியல் மூலம் கனடா தழுவிய வாக்குக்கள் மூலம் தெரிவாவர். இதில் 3 பிரிதிநிதித்துவம் பெண்களுக்கும், 3 பிரிதிநிதித்துவம் இளையோருக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கனடா தழுவிய தமிழ் மக்களின் பிரிதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் 16 பேர் மாநிலங்கள் ரீதியாக தெரிவாவர். இவ்வகையில் ஒன்ராரியோ மாநிலத்தில் இருந்து 10 பேரும், அதில் 2 பெண்கள் 2 இளையோர் எனவும், கியூபெக் மாநிலத்தில் இருந்து நால்வரும், அதில் ஒரு பெண், ஒரு இளையோர் எனவும், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேட்டா, மனிட்டோபா, சஸ்கச்சுவான் சார்பில் ஒருவரும், நியூ பின்லண்ட், நவஸ்கோசியா, நியூபுரொன்விக்ஸ், பிரின்ஸ் எட்வேட் தீவு சார்பில் ஒருவரும் என மாநிலங்கள் ரீதியாக அவ்வவ் பகுதிகளில் அளிக்கப்படும் வாக்குக்களின் அடிப்படையில் தெரிவாவர்.
இவ்வாறு மக்களால் தேசியப் பட்டியல் மற்றும் மாநிலப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுபவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கனடா தழுவி உள்ள தமிழர் அமைப்புக்களின் ஒன்றிணைப்பினூடாக அவற்றின் தெரிவினூடாக ஐவர் தமிழர் அமைப்புக்களின் தெரிவவைக்கு தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழர் தேசிய அவையில் பிரிதிநிதித்துவம் செலுத்துவர்.
இவர்கள் ஒவ்வொரு வருடமும் அமைப்புக்களின் ஆணையைப் பெறவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிராந்திய ரீதியாக மக்களின் அன்றாட விடங்களை கவனத்தில் கொண்டு செயலாற்றும் வகையில் பிராந்தியங்கள் ரீதியாக அமையக்கூடிய பிராந்திய அவைகளுக்கான தேர்தலும் ஒன்றாக நடைபெறவுள்ளது.
ரொரன்ரோ மேற்கு ரொரன்ரோ கிழக்கு, யோர்க் பிரதேசம், பீல் பிரதேசம், டேகம் பிரதேசம், ஒட்டாவா, மொன்றியல், வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், கிச்சினர்-வோட்டலூ-குவெல்வ்-கேம்பிரிச், லண்டன், கலிபக்ஸ் போன்ற பிராந்திய சபைகளும் தெரிவினூடாக அமையவுள்ளன.
மேற்கண்ட விடயங்களை உள்வாங்கி யாப்பு மக்கள் பார்வைக்காக வெளியிடப்படவுள்ளது. பெப்பிரவரி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வரை மக்கள் கருத்துக்கள் நேரடி சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், கடிதங்கள், மின்அஞ்சல்கள் மூலம் பெறப்படும் எனவும், அக்கருத்துக்கள் யாப்பு வரைவு சிறப்புக் குழுவிடன் சமர்பிக்கப்பட்டு மக்கள் கருத்துகளின் அடிப்படையில் யாப்பு இறுதி வடிவம் பெறும் எனவும், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு மேலும் அறிவித்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் யாப்பில், கனடாவில் பெருவாரியாக வாழும் ஈழத்தமிழ் மக்களுடன், கனடாவில் வாழும் ஏனைய நாடுகளில் இருந்தான தமிழ் பேசும் மக்களையும் இத் தேசிய சபையில் உள்வாங்குவதன் மூலம் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பெண்கள், இளையவர்களுக்கு குறைந்தபட்சம் 20 விழுக்காடு பிரதிநிதித்துவம்; தேசிய சபையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 16 அகவைக்கு மேற்பட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் இவ் வாக்களிப்பில் மற்றும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படுதல் போன்ற பல முன்னேற்றமான விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளதாவும், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
யாப்புக் குறித்த கனடா தழுவிய மக்கள் கருத்தாடல்கள் நடாத்தப்படும் எனவும் இது குறித்த விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும் எனவும் ஒருங்கிணைப்புக்குழ அறிவித்துள்ளது. மார்ச் 27ஆம் நாள் சனிக்கிழமை கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் கனடா தழுவி நடைபெறும் எனவும் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு மேலும் அறிவித்துள்ளது.
இவ் மக்களாட்சி முறைமைத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் அவை, கனடாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து, கனடிய தமிழர்களின் உள்ளுர், மற்றும் சர்வதேச அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு செயற்பாடுகளை வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ந்தும் உறுதியுடன் முன்னெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான கனடா தழுவிய வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்தித்தந்த பக்கச்சார்பற்ற, நீதியான கனடிய தமிழர் தேர்தல் அமைப்பான, தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டடைப்பே இத்தேர்தலையும் நடாத்த வேண்டப்பட்டதாகவும், அதனை அவ்வமைப்பு ஏற்று இத் தேர்தலுக்கான ஆரம்ப வேலைகளை தொடங்கியுள்ளதாகவும், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு மேலும் அறிவித்துள்ளது.



0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவைக்கு 33 பேர் தெரிவாவர்