ஊடகங்களின் ஊடாக பல்வேறு நபர்களைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிடாது, எதிர்வரும் நான்கு தினங்களுக்குள் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு சனாதிபதிக்கு மீண்டும் சவால் விடுத்திருக்கிறார் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா.அக்குரெஸ்ஸ மற்றும் வலஸ்முல்ல பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் இந்தச் சவாலை முன்வைத்தார். விவாதத்தில் கலந்தகொண்டால் தம் மீது சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க முடியுமெனத் தெரிவித்துள்ளார்.
பொன்சேகா, இதன்போது தாம் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கத் தயாராக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். சனநாயகத்தை மேம்படுத்தும் நோக்கில் தாம் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தை எந்தச் சக்திகளாலும், எவ்விதத்திலும் தடுக்க முடியாது என்பதையும் அவர் அங்கு உறுதியாகத் தெரிவித்தார்.
சர்வாதிகார வெறியுடன் கூடிய சனாதிபதியையும், அவரது குடும்பக் கூட்டுத்தாபனத்தையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு சனநாயகத்தையும், சட்டத்தையும், சமாதானத்தையும் உறுதிப்படுத்திய பின்னரே தாம் இந்தப் பயணத்தை நிறுத்துவார் எனவும் சரத் மேலும் கூறினார்.
தோல்வியை உணர்ந்துகொண்டுள்ள அரசு பல்வேறு கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது அவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. எனக்கு எந்த வகையில் இடையூறு விளைவிக்கலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
நான் இராணுவத் தளபதியாக பணியாற்றிய காலத்தில் அரச மாளிகைகளை அமைத்து, சகோதர நிறுவனங்களைக் கட்டியெழுப்பி, குடும்பக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கி நாடு முழுவதும் சொத்துக்களைக் கொள்வனவு செய்யவில்லை.
எனவே இவர்களுடைய நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றியளிக்காது. கடந்த காலத்தில் மக்களின் பாதுகாப்பையும், வாழ்க்கையையும் சிந்தித்து அர்ப்பணிப்புடன் நான் செயற்பட்டுள்ளேன். எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படுவேன். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, குடும்பங்களை வலுப்படுத்தும் வரை எனது இந்தப் பயணம் முடியாது என்றார்.



0 Responses to பகிரங்க விவாதத்துக்கு மகிந்தவுக்கு பொன்சேகா அழைப்பு