Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலையாகிறார் நளினி?

பதிந்தவர்: தம்பியன் 21 January 2010

இந்தியாவின முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சிறைச்சாலை ஆலோசனைக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசின் நம்பகரமான தகவல்களை மேற்கோள்காட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நளினியை விடுதலை செய்யலாம் என சிறைச்சாலை ஆலோசனைக் குழு தீர்மானித்திருப்பதாகவும் அரசிடம் தனது அறிக்கையை இன்று சிறை ஆலோசனைக் குழு அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறைவாசத்தின்போது நளினி நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து வந்துள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் தனது அறிக்கையில், சிறை ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இதுதவிர நளினி சிறையில் 19 ஆண்டுகளைக் கழித்துள்ளதையும் சிறை ஆலோசனைக் குழு தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இதுதவிர நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதையும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் குழு பரிசீலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நளினியின் கணவர் முருகன் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் பரிசீலித்து நளினியை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு குழு தெரிவிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த அறிக்கையின் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தப் பரிந்துரையை அரசு கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு முதல்வர் கருணாநிதியின் முடிவை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

நளினியை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தால் அதற்கு தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே தமிழக அரசின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சிறை ஆலோசனைக் குழுக்கள் நளினியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் அறிக்கை கொடுத்து வந்தன. தற்போதுதான் முதல் முறையாக சாதகமான முறையில் பரி்ந்துரைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்ட நளினிக்கும் ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஏனைய 25 பேருக்கும் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி மரண தண்டனை விதிப்பதாக சென்னை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின்னர், நளினி உட்பட நால்வருக்கு மட்டுமே மரண தண்டனை விதிப்பதாக 1999 ஆம் ஆண்டு மே 11 இல் தீர்ப்பை மீளறிவிப்பு செய்தது. சிறைச்சாலையில் நளினியின் நன்னடைத்தையை அவதானித்த சிறைச்சாலை ஆணைக்குழு தமிழக அரசுக்கு மேற்கொண்ட பரிந்துரைக்கமைய கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி தனது விடுதலைக்கு முறையிட்ட நளினியின் மனு சிறப்பு பரிந்துரைக்குழுவால் நிராகரிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி நளினியை ராஜீவின் மகள் பிரியங்கா காந்தி இரகசியமாக சந்தித்ததை அடுத்து நளினியின் பெயர் மீண்டும் பரபரப்பாக அடிபட்டது.

இதன்பின்னர், தற்போது - நேற்று புதன்கிழமை - மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் கூடிய சிறைச்சாலை ஆலோசனைக்குழு நளினியின் விடுதலை குறித்து சாதகமாக பரிசீலித்திருப்பதாகவும் இந்த ஆலோசனைக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் பரிந்துரை நளினியின் விடுதலையை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விடுதலையாகிறார் நளினி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com