எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமது விஞ்ஞாபனங்களில் நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்துள்ள சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷை தொடர்பிலான தீர்வை முன்வைக்காததை சுட்டிக்காட்டியுள்ள சிறிலங்காவை சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று தேசிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விடயத்துக்கு தீர்வு காணத்தவறுவது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதகமாக அமையும் என்று எச்சரித்துள்ளது.முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட 28 புத்திஜீவிகளை கொண்ட வெள்ளிக்கிழமை மன்றம் என்ற இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவர்கள் அனுப்பிய அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தேசிய ரீதியில் முக்கியமான விவகாரங்கள் தொடர்பாகக் கருத்துகளைத் தெரிவிக்க தன்னிச்சையாக ஒன்று சேர்ந்து முன்வந்திருக்கும் அக்கறைகொண்ட பிரஜைகளின் உத்தியோகப்பற்றற்ற அமைப்பாக இந்த வெள்ளிக்கிழமை மன்றம் உள்ளது. இந்த மன்றமானது பல்வேறு தனித்துவமான ஆற்றல்களுடன் நாட்டுக்கு சேவையாற்றிய மூத்த பிரஜைகளைக் கணிசமான அளவு உள்ளடக்கிய அமைப்பாக உள்ளது.
அழிவை ஏற்படுத்திய யுத்தத்திலிருந்தும் நாடு மேலெழுந்திருக்கும் நிலையில் இடம்பெறும் முதலாவது தேசியத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான தங்கள் இருவருக்கும் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. உங்களின் விஞ்ஞாபனங்களை மிகவும் கவனமாகப் பரிசீலித்திருக்கும் நிலையில் விண்ணப்பமாக இதனை நாங்கள் தங்களுக்கு எழுதுகிறோம்.
எமது நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான 60 வருட கால வரலாற்றில் மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பாக தொலைநோக்கையும் தலைமைத்துவப் பண்பையும் வெளிப்படுத்துமாறு நாம் தங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
அண்மைய யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு நீங்கள் இருவரும் பங்களிப்புச் செலுத்தியுள்ளீர்கள். அதேசமயம் சமாதானத்தை இழந்துவிடும் ஆபத்து குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் காணப்படும் பாரிய வெற்றிடம் குறித்து நாம் கவலையுடன் அவதானித்துள்ளோம். இலங்கையில் வசிக்கும் பல சமூகங்களின் அடிப்படை உரிமைகள் பற்றி போதியளவுக்கு பேசப்பட்ட தன்மை இரு விஞ்ஞாபனங்களிலும் இல்லை. குறிப்பாகத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். நீண்டகாலமாக நீடித்திருக்கும் அவர்களின் துன்பங்கள், அபிலாஷைகள் தொடர்பாக உரிய முறையில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
எமது நாட்டை மீள்கட்டமைப்புக்குட்படுத்துவதற்கான நம்பகரமான நடவடிக்கைகளை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை. பன்முகமானதும் ஒட்டுதலான பிணைப்பைக் கொண்டதுமான சமூகமொன்றை இறுதியில் அடைவதற்காக எமது அரசியலமைப்பை எழுதுவதற்கான நடவடிக்கைகளையும் நீங்கள் இருவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதாவது தேசிய வாழ்வில் எமது மக்கள் யாவரும் சமத்துவம், நீதியுடன் பங்கேற்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் பன்முகத்தன்மையும் ஒட்டுதலுமான சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
பாரியளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த விடயத்திற்குத் தீர்வுகாணத் தவறுவதானது எமது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல சகுனமாக அமையாது. இந்தத் தருணத்திலாவது இதய சுத்தியுடனான அர்த்தபுஷ்டியுடனான அரசியல் ரீதியான உத்தரவாதங்களை ஏற்படுத்தாதுவிடின் எதிர்வரும் பல வருடங்களுக்கு சமூகங்களிடையிலான பதற்றம் மற்றும் பிளவுபட்ட சமூகம் என்ற நிலைமைக்கு இடமளித்ததற்கான நிபந்தனைக்கு ஆளாவோம்.
ஆதலால் காலம் பிந்திய இந்தத் தருணத்திலாவது அந்த மாதிரியானதொரு அரசியல் யோசனைகளை உள்ளீர்க்குமாறு நாம் வலியுறுத்துகிறோம். நாடு எதிர்நோக்கும் இந்த மிக முக்கியமான விடயம் குறித்து நீங்கள் இருவரும் அதிகளவுக்கு பரிசீலனைக்கு எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
எமது அரசியலமைப்பு, எமது நாடு, எமது சமூகம் தொடர்பான விடயங்கள் குறித்து பல்வேறுபட்ட விவாதங்களும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் பரிசீலனைக்காக அரசியல் யோசனைகளை முன்வைப்பதற்கு இவை போதியளவுக்கு வளமானவையாக இருக்கும் என்பது எமது அபிப்பிராயமாகும்.
இந்த வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக்கூடாது.இது வெறுமனே சிறுபான்மை குழுக்களின் சார்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் அல்ல என்பதை நாம் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் சுயமரியாதை, சுயபெறுமானம் என்பனவற்றின் அடிப்படையிலான எமது சொந்த உணர்வின் நன்மைக்காகவும் சகல இலங்கையரும் நீதி, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக வாழ்வதற்கான விருப்பம் மற்றும் மிகவும் அவசியமாக ஏற்பட்டிருக்கும் தேவை கருதியுமே இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
தேசிய ரீதியில் கரிசனையுடைய இந்த விவகாரம் தொடர்பாக அக்கறையுடைய பிரஜைகளின் கட்சி சாராத குழுவினால் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளை கவனத்திற்கு எடுங்கள்.
இவ்வாறு இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கறை கொண்ட பிரஜைகள் குழுவின் சார்பில் ஜயந்த தனபால கைசாத்திட்டுள்ளார்.வண.பெலன்விலவிமலரட்ணதேரர், பேராயர் ஒஸ்வோல்ட் கோமில், ஆயர் டிலிப்டி சிகேரா, தேவநேசன் நேசையா, ஜெஸிமா இஸ்மாயில், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கே.நீலகண்டன், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், ரஞ்சித் பெர்னாண்டோ, சித்திதிருச்செல்வம், கே.சி.வெலியமுன்ன, டாக்டர் ஏ.சி.விஸ்வலிங்கம், மனோரி முத்தட்டுவேகம, நாமல் வீரமுனி, பேராசிரியர் ஞானநாத் ஒபயசேகர, பேராசிரியர் அர்ஜுன அலுவிகார, டாக்டர் அநுர ஏக்கநாயக்க, மகேன் தயானந்த, டாக்டர் தீபிகா உடகம, திருமதி சூரியா விக்கிரமசிங்க, டாக்டர் கயம்பதி விக்கிரமரட்ண, சுரேஷ் டி மெல், பிரஷான் டி விஷர், அகிலன் கதிர்காமர், டாக்டர் செல்வி திருச்சந்திரன், ஆர்.சுரேந்திரன், சி.ஜயரட்ண ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்



0 Responses to தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடாத தீர்வு திட்டத்தை இனியாவது வெளியிடவேண்டும்: இரு பிரதான வேட்பாளர்களுக்கும் புத்திஜீவிகள் கடிதம்