பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகளே!!எமது இனத்தின் அடிமை வாழ்வை உடைத்தெறிந்து தமிழர் தாயகாமாம் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டியது எம் ஒவ்வொருவருக்கும் உள்ள கட்டாய கடமை. எமது விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை தீவிரவாத போராட்டமாக சாயம் பூசி, அதை தனியொரு தீவிரவாத அமைப்பின் போராட்டமாக சித்தரித்து கொச்சைப்படுத்தி அதை முடிவிற்கு கொண்டுவந்து, எமது விடுதலை பயணத்தை பின்தங்க வைத்துள்ளது இந்த வெளியுலக வல்லாதிக்க நாடுகள்.
ஆனால் அந்த ஆயுத போராட்டமோ 1977ம் ஆண்டு எமது மக்கள் வழங்கிய ஆணையை கோரிக்கையாக வைத்தே நடந்தது என்பதை பலர் இன்னமும் ஏற்றுக்கொள்ள்வில்லை. அப்போது மக்கள் வழங்கிய ஆணையை இந்த வெளி உலகு அறிந்திராமல் இருக்கலாம் அல்லது அறிந்தும் பாராமுகமாக நடந்துகொள்ளலாம். ஆனால் தற்பொழுது உலகெங்கும் நடந்துவரும், இந்த மீள் வாக்கெடுப்பை அப்படி அவர்கள் தட்டிக்களிக்க முடியாது.
இது நாங்கள் ஜனநாயக முறையில் எங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். இது நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லப்போகும் செய்தி. இந்த விடுதலை போராட்டம் ஒரு அஞ்சல் ஓட்டம். இது தற்பொழுது புலம்பெயர் தமிழர்களாகிய எங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று எங்கள் முன் உள்ள சந்தர்ப்பம் 1977ம் ஆண்டு முப்பத்தி மூன்று வருடங்களிற்கு முன் வாக்களித்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையாகிய எங்களிடமும் வந்துள்ளது. இந்த மீள்வாக்கெடுப்பில் வாக்களித்து இறையான்மையுடைய சுதந்திர தமிழீழத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த வெளி உலகிற்கு நாங்கள் தெளிவான ஒரு செய்தியை ஆணித்தனமாக அடித்துக் கூறமுடியும்.
அதாவது தலைமுறை தலைமுறையாக நாம் வேண்டி நிற்பது தனித் தமிழீழமே அன்றி வேறொன்றும் இல்லையென்பது. நோர்வே, பிரான்ஸ், கனடா, சுவிஸ், ஜேர்மனி, நெதர்லாந்து மக்கள் வாக்களித்து சாதைனை புரிந்தது போல் பிரித்தானிய வாழ் தமிழர் நாமும் ஒருங்கிணைந்து இந்த தமிழீழத் தனியரசை ஆதரித்து சனிக்கிழமை 30.01.2010 அன்றும், ஞாயிற்றுக்கிழமை 31.01.2010 அன்றும் நடைபெறும் வாக்கெடுப்பில் வாக்களித்து புதிய சகாப்த்தம் படைக்க வாரீர்.
இந்த சாதனையை படைப்பதற்கு, தமிழ் ஊடகங்கள், கழகங்கள், தமிழ்ப் பாடசாலைகள் அனைவரையும் மக்களை, ஒன்றுசேர்க்கும் பணியில் ஈடுபடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை பகைவனும், உலக நாடுகளும் தீர்மானிக்கட்டும்.......
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
பிரித்தானியத் தமிழ் இளையோர்



0 Responses to பிரித்தானிய வாழ் தமிழர் ஒருங்கிணைந்து வாக்கெடுப்பில் வாக்களித்து புதிய சகாப்தம் படைக்க வாரீர்: பிரித்தானியத் தமிழ் இளையோர்