Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெற்றிக்களிப்பில் இருப்பீர்கள் மகிந்தர்-ஆனாலும்
உங்களை வாழ்த்தத்தோன்ற வில்லை எனக்கு.. ..முத்து

வெற்றிக்களிப்பில் இருப்பீர்கள் மகிந்தர்-ஆனாலும்
உங்களை வாழ்த்தத்தோன்ற வில்லை எனக்கு..
உமக்குப் பக்கத்தேசம்..தமிழீழத்தவன் நான்.
நேற்று நீர் குருதிபிழிந்தெடுத்து குதறியெறிந்த
மனிதர்களின் உறவுநான்.

நீர் குண்டெறிந்து குடியெழுப்பிக் கொண்டுபோய்
சிறைவைத்து கொடுமைசெய்த யாரோ ஒருத்தியின்
அண்ணணோ,தம்பியோ,அருமை மகனோதான் நான்.
ஆகையால் வெற்றிக்களிப்பில் மிதக்கும் உமக்கு
சும்மா பேருக்குத்தன்னும் வாழ்த்துச்சொல்லி
முள்ளிவாய்க்காலில் யாருமற்ற மணல்பரப்பில்
என்தேசம் கதறியழுத ஓலத்தை கறைபடுத்த நான்
விரும்பவில்லை.-ஆனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு.
எம் நெஞ்சுள்ளெரியும் வார்த்தைகளை உமக்கு
சொல்லுகிறோம்.திக்கித் திக்கி உமக்கு தமிழ்பேசக்
கற்றுத் தந்த கருணாவிடமோ டக்கியிடமோ
கேட்டுப் படித்துக்கொள்.-இதோ..
மகிந்தருக்கு,
இன்னுமொரு ஆறுவருடம் அரசோச்சும்
அற்புதவாய்ப்பு.
இனிப்பாக இருக்கும் உமக்கு.-நீர்
இன்றே போய் காவிஉடை போர்த்த
கோரமனிதர்களின் காலடி தொட்டு கண்ணில் ஒற்றியிருப்பீர்- நல்லது.
அவர்களின் ஆசிஇருந்தால்தான் நீர்
அடுத்த ஆறுவருடத்துக்கு ஆறுதலாக
ஆட்சியில் உழளலாம்.
உமக்கு உலகத்து திசையெங்குமிருந்து வரும்
வாழ்த்துக்களையும் மலர்ச்செண்டு மாலைகளையும்
விலத்திவிட்டு விழுந்த வாக்குகளைக்
கொஞ்சம் ஆய்வுசெய்து பாரும்.
ஈழம் என்ற தேசம் உம்மை முற்றாக
நிராகரித்து சேதி ஒன்றை சொன்னவிதம்
பார்த்திருப்பீர்.
நீர் நல்லு}ர்க் கந்தனுக்கு போனதும்
நாலு வார்த்தை தமிழில் திக்கிப் பேசியதும்
எதுவுமே அவர்களுக்கு தேவையில்லை.-மொத்தத்தில்
அவர்களுக்கு நீரே தேவையில்லை என்றே
தெளிவாக வாக்குப்பெட்டிக்குள்
சொல்லிவிட்டார்.-பிறகென்ன
கைத்தொலைபேசி மாலைபோட்டு உலாவரும்
தோழர்(?) டக்கியும்,
முன்னாள் அம்மான் கருணாவும் செல்லாக்
காசு என இப்போது புரிந்திருக்கும்.
ஐயா சிங்களத்து ஜனாதிபதியே,
முள்ளிவாய்க்காலில் எல்லாப்படைஉதவியுடன்
நீர் வென்று சிதைத்தது வெறும் ஆயுதங்களையும்
எம் உறவுகளையுமே.-ஆனால் உள்ளிருந்து
கனலும் விடுதலைவிருப்பையும் அதைக்
கொண்டுதிரியும் அவர்களின் மனங்களையும் நீர்
ஒன்றும் வென்றுவிடவில்லை.-ஒன்றைப்
புரிந்துகொள்ளவேணும் நீர்.-வடக்கிலும்
கிழக்கிலும் தமிழ்மனிதர்கள் நெஞ்சுநிறைய
நெருப்புக்காவியபடியே திரிகின்றனர்.
ஏதோ ஒருநாளில் அது பற்றிஎரியும்.-அது
சிங்களதேசத்தையும் சிலவேளை
தணலில்போட்டு வாட்டும்.-தப்பிக்க
முடியாதபடி சுற்றிவளைத்து கொழுந்துவிடும்.
பின்னென்ன புஞ்சிபண்டா எத்தனை நாளைக்கு
பொன்னம்பலத்தாரை துப்பாக்கிமுனையிpல்
துரத்தமுடியும்.-வெள்ளையன் போனபின்னர்
உமது அப்பனும் சித்தப்பனும் எமது
தந்தையை தாயை துரத்திதுரத்தி அடித்த
கதைகேட்டு ஒருவன் புறப்பட்டுவந்து
உமது தேசத்தை முப்பதுவருடங்கள்
நித்தம் அச்சத்திலும் அவதியிலும்
உச்சத்து தயார்நிலையிலும் வைத்திருந்த
பொழுதுகளை கொஞ்சம் நினைத்துப்
பார்த்தால் வரும்காலத்துக்கு ஆட்சிசெய்ய
உதவியாய் இருக்கும் மகிந்தரே.
சிங்களத்து கடைக்கோடி மனிதனுக்கும்
இருக்கும் சொல்லும் சுதந்திரமும்,
தொழில்புரியும் வசதிகளும்,நன்றாக
கல்விகற்கும் உரிமையும் அதனிலும்
உயிர்வாழும் உரித்தும் எமக்கும்
வேண்டும் என்றுதானே நாங்கள்
கேட்டுநிற்கிறோம்.-தினமும்
ஆளைமறித்து சோதனை போடுவதும்
அடையாளஅட்டை கேட்பதுவும்
ஆட்களை அடைத்துவைப்பதுவும்
ஆமியே எங்கள் தேசமுழுதும் நிறைவதும்
அவ்வளவு நன்றாகதெரியவில்லையா மகிந்த.
இப்போது வந்துகொண்டிருக்கும் வாச
மலர்ச்செண்டு வாழ்த்துகளுக்கிடையில் ஒரு
சின்னக்குழந்தையின் கதறலும் சிதறிக்
கிடக்கும் தாயின் அழுகையும் எப்போதும்
உம் காதுக்குள் கேட்கும்.-அது
வாழ்த்து இல்லை.-எப்போதும்
உமக்குள் எதிரொலிக்கும் தமிழரின் சாபம்!!

0 Responses to மீண்டும் வென்றுவந்த சிங்களத்து மகிந்தருக்கு: ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com