Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சனி மற்றும் ஞாயிறு தைத்திருநாட்களில் (23, 24. 01. 2010) சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையிலான மீள்வாக்கெடுப்பு நடைபெற்று பெறுபேறுகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். இதுவே வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட கேள்வியாகும்:

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனி தமிழீழ அரசு உருவாகவேண்டும் என நான் விரும்புகிறேன்.

சுவிசில் வசிக்கும் 40 ஆயிரம் ஈழத்தமிழர்களில் அண்ணளவாக25 000 வாக்களிக்கும் உரித்துடைய மக்கள் தொகையில் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) 16 441 பேர் இத்தேர்தலில் தமது வாக்குகளை சுவிசின் சகல மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த 50 வாக்குச்சாவடிகளில் வழங்கியிருந்தனர்.

இவர்களில் 16357 பேர் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவாகவும் 32 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். மேலும் 13 வாக்குகள் வெற்று வாக்குகளாகவும் 39 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாகவும் பெறுபேறுகள் கணிப்பிடப்பட்டுள்ளன. புலம்பெயர் நாடுகளில் நடைபெற்று வரும் இவ்வாக்கெடுப்பானது தமிழர் வரலாற்றில் ஒரு புத்தம் புதிய நிகழ்வாகும்.

அத்துடன் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்குப் பின்னர் தமிழர்கள் முழுக்க முழுக்க சுதந்திரமாக வாக்களிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் இங்கு புலம்பெயர் தேசத்தில் தான் உருவாகி உள்ளது என்பது பல வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களில் பேசிய வாசகமாகும். ஒரு மூதாட்டி தான் 1977 ஆண்டிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது வாக்களித்ததாகவும் மீண்டும் தான் அதே தீர்மானத்திற்காக வாக்களிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இத்தேர்தலானது முழுக்க முழுக்க சுவிஸ் நாட்டு கண்காணிப்பாளர்களின் முழுநேர பிரசன்னத்தில் நடைபெற்றது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். அடையாள அட்டையை உறுதிசெய்து ஒவ்வொருவரும் எந்தவித இடையூறுமின்றி தமது சொந்த விருப்பை வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டு வாக்குப்பெட்டிக்குள் போடுவதை இந்த 150 ற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் உறுதி செய்திருந்தனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியும் தேர்தல் குழுவினரது பணிப்புரைகளுக்கிணங்க தேர்தல் நடைமுறைகளை செவ்வனே கடைப்பிடித்து இவ்வாக்கெடுப்பை மிகவும் நேர்த்தியான முறையில் முடித்துள்ளமையை வாக்குச் சாவடிகளுக்கு சென்று பார்வையிட்ட தேர்தல் குழுவினர் மூலம் அறிய கூடியதாக இருந்தது. ஞாயிறு பிற்பகல் வாக்குச்சாவடி மூடும் நேரத்திற்கு பிந்தி வந்த மக்கள் பணியாளர்களின் செம்மையான நேரக்கடைப்பிடிப்பால் திரும்ப வேண்டிய சம்பவங்களும் சில நிகழ்ந்துள்ளமையானது இத்தேர்தல் சகல தரப்பினராலும் உயரிய தரத்தில் கையாளப்பட்டது என்பதை பறை சாற்றி நிற்கின்றது.

பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பை பேணும் பொருட்டு அனுமதியின்றிய ஒலி ஒளிப்பதிவுகள் யாவும் தடைசெய்யப்பட்டு பூரண கட்டுப்பாட்டுடன் தேர்தல் நடைபெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.தேர்தல் முடிவுகளை அறியும் பொருட்டு சுவிஸ் நாட்டின் முக்கிய ஊடகங்கள் முன்கூட்டியே எம்முடன் தொடர்பு கொண்டு தேர்தல் முடிவுகளை பெற்று தமது அறிக்கைகளை விரிவாக பிரசுரித்துள்ளமை இந்த ஐனநாயக முயற்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகவும் பார்க்கப்படலாம்.

தேர்தல் குழுவின் இணையத்தளத்தில் சகல பெறுபேறுகளும் மாநில வாரியாக நிரல்படுத்தப்பட்டுள்ளன. இத்தேர்தலிற்கான வரவு செலவு அறிக்கையும் தேர்தல் குழுவினரால் மிக விரைவில் பூரணப்படுத்தப்பட்டு அவ்இணையத்தளத்தில் அறிவிக்கப்படும்.மக்களுக்கு ஒழிவு மறைவற்ற நடைமுறையை கடைப்பிடிப்பதில் தேர்தல் குழு ஆரம்பம் முதல் தன்னால் இயன்றவரை கவனம் செலுத்தி வருகின்றது.

இத்தேர்தல் குழவில் பணியாற்றிய பல்கலை பீட மாணவர்கள் தமது பரீட்சைகளை முடிக்க வேண்டி இருப்பதால் தேர்தல் குழுவுடன் தொடர்பு கொள்ள விரும்பும் அனைவரும் எமது இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தமிழர்களின் எதிர்கால சுபீட்ச வாழ்விற்கு புலம் பெயர் மக்கள் ஐனநாயக வழியிலான அரசியல் வழிகளிற்கு அமோக ஆதரவு தெரிவித்துள்ளமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களை பிரதி நிதித்த புறப்படும் சகலருக்கும் தெளிவான ஒரு அரசியல் பாதையை காட்டும் செயலாகும். அந்த வகையில் தேர்தல் குழுவானது சுவிஸ்தமிழரின் இந்த அரசியல் அபிலாசையை அசட்டை செய்யாது கண்ணும் கருத்துமாக காத்து தேர்தல் முடிவுகளிற்கு இணங்க தமது அரசியல் செயல்பாட்டை வரித்துக் கொள்ளுமாறு கடமையுணர்வுடன் கேட்டுக் கொள்கின்றது.

இப்டிக்கு

சுவிஸ் தேர்தல் ஒன்றியம்

0 Responses to சுவிஸ் கருத்துக்கணிப்பு தொடர்பாக, சுவிஸ் தேர்தல் ஒன்றியத்தின் அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com