சிங்கள இனவாதத்தை விழிக்கச் செய்த கூட்டமைப்புசரத் பொன்சேகாவிற்கு சமாதானப் பணிகளில் பதவி கொடுத்து பழிவாங்கும் அரசியலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.
அன்னத்திற்கும் கழுகிற்கும் வித்தியாசம் தெரியாத யாழ். வாக்காளர் நிலை
தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றுவிட்டார். இனி தேர்தலில் மோசடி நடைபெற்றுவிட்டதாகவோ அல்லது ஆர்பாட்டங்கள் மூலமாகவோ நிலமையை மாற்ற முடியாதவாறு சரத் பொன்சேகாவின் தங்குமிடம் முற்றுகையிடப்பட்டு, மெல்லிய பதட்டம் உருவாக்கப்பட்டு நிலமையை கட்டுப்பாட்டிலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இப்போது அவருடைய காலடியில்தான் பந்து நிற்கிறது..
முன்னைய காலங்களைப்போல பல கட்சிக்குழு அமைத்து காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் தானே தீர்வை அறிவிக்க இருப்பதாக மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது அத்தகைய வாக்குறுதிக்கு ஆதரவாக 60 வீதமான சிங்கள வாக்காளர் அனுமதியளித்துள்ளனர்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷவின் ஆணையை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று கூட்டமைப்பு சம்மந்தர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மகிந்த ராஜபக்ஷ வடக்குக் கிழக்கை இணைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.
இனி அடுத்து என்ன…?
01. அன்று தமிழீழத்தைத் தவிர எதை வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார் காலஞ்சென்ற பிரேமதாச புலிகள் அதற்கு உடன்படவில்லை.
02. நோர்வேயில் அன்ரன் பாலசிங்கம், சுப. தமிழ்செல்வன், கருணா ஏற்றுக் கொள்வதாகக் கூறிக் கையொப்பமிட்ட தீர்வுத்திட்டம் இன்னமும் மை காயாமல் இருக்கிறது.
03. முன்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் தான் வழங்கிய தீர்வை விட அதிக அதிகாரம் கொண்ட தீர்வை வழங்கவேண்டுமென்று இந்தியா கூறுகிறது.
மகிந்த ராஜபக்ஷ என்ன செய்யப்போகிறார்…
தேர்தலில்..
மகிந்த ராஜபக்ஷ 6015934 வாக்குகள் – 57.88 வீதம்
ஜெனரல் சரத். பொன்சேகா வாக்குகள் 4173185 – 40.15 வீதம்
சுயேட்சைகள் 24494 வாக்குகள் – 1.97 வீதமும் பெற்றுள்ளனர்.
சுயேட்சைகளில் நமக்கு முக்கிய வேட்பாளர் க. சிவாஜிலிங்கமாகும். இவர் போட்டியிட்ட 22 பேரில் 9662 வாக்குகளை பெற்று 9 வது இடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட மேலும் இரண்டு சிங்கள வேட்பாளரே இவரை முந்தியுள்ளனர். இதற்கு பிரதான காரணம், இந்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவருக்கு கழுகு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கழுகும், சரத்தின் அன்னத்திற்கும் வித்தியாசம் தெரியாத காரணத்தால் சரத்தின் அன்னமென நினைத்து கழுகிற்கு 3000 பேர்வரை வாக்களித்துள்ளனர். மேலும் யாழில் குண்டு வீச்சு நடாத்தி, வல்வெட்டித்துறையில் வாக்களிக்கப் போவோரை இராணுவம் வீடியோ படம் பிடித்த காரணத்தினால் மக்கள் அச்சமடைந்ததாக க.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை பகிரங்கமாக ஆதரித்து சிங்கள பேரினவாதத்தை கிளர்ந்தெழ செய்து விட்டது. இது கூட்டமைப்பின் மதிகெட்ட செயல் என்றும் க.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். எவ்வாறாயினும் சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோருடைய பிரச்சாரங்கள் வெற்றியடையவில்லை என்பதற்கு அவர்கள் பெற்ற குறைவான வாக்குகளே போதிய ஆதாரமாக இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள ஐரோப்பிய அரச ஊடகங்கள் அமைதியாக தேர்தல் நடந்து மகிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்றைய செய்திகளை வாசித்துள்ளன. தேர்தல் மோசடிகள் குறித்து யாதொரு அதிர்வுகளையும் அவை வெளியிடவில்லை. இவர்களுடன் ஒப்பிட்டால் புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பு இயல்பிற்கு மாறாகவே அமைந்துவிட்டதை காண முடிகிறது.
எல்லாவற்றையும் விட சரத் பொன்சேகா வகுத்த தேர்தல் வியூகம் முற்றிலும் தவறாக அமைந்ததாலேயே அவர் அரிய வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
அவர் இழைத்த பத்து இமாலயத் தவறுகள்..
01. தமிழர் கூட்டமைப்பை பகிரங்கமாக ஆதரவு வழங்குகிறோமென வாய் திறக்க விட்டிருக்கக் கூடாது. (இதை அலைகளில் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தோம்)
02. தீர்வுத்திட்டம் ஒன்றை கையொப்பமிட்டு கொடுத்துவிட்டதாக முன்னரே அறிவித்திருக்கக் கூடாது.
03. போர் குறித்த சில செய்திகளை அவர் வெளியிட்டிருக்கக் கூடாது. வெளியிட்ட செய்தியும் உப்புச் சப்பில்லாத செய்தியாகவே இருந்தது. அதனால் போர்க்குற்ற விசாரணை என்று வெளியான செய்திகள் சிங்கள மக்களை சினம் கொள்ள வைத்தன.
04. சரத் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளவரல்ல, ஒரு மேடைப்பேச்சைக் கூட அவரால் ஒழுங்காக நடாத்த முடியவில்லை.
05. மகிந்தவிற்காக 50 இந்திய தேர்தல் நிபுணர்கள் பணியாற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் சரத்திற்கு ஜே.ஆர் காலத்து தேர்தல் முறையே தெரிந்துள்ளது அவருக்கு நவீன யுத்திகளை ரணில் அடையாளம் காட்டவில்லை.
06. கடந்த தடவை இந்திய தேர்தலில் இந்திரா காங்கிரஸ், தி.மு.க போன்றன மக்கள் பலத்தால் வெற்றி பெறவில்லை, தேர்தல் வியூகத்தாலேயே வெற்றி பெற்றன. அதை மகிந்த புரிந்துள்ளதுபோல சரத் புரியவில்லை.
07. இன்றைய தேர்தலை வெல்ல நவீன உத்திகள் பல உண்டு. அன்னத்திற்கும், கழுகிற்கும் வித்தியாசம் தெரியாமல் வாக்கு சீட்டு அச்சடிப்பதிலிருந்து பல தந்திரங்களை மகிந்தவின் தேர்தல் நிபுணர்கள் வகுத்துள்ளார்கள். அதனால்தான் இரண்டு தினங்களுக்கு முன்னரே மகிந்த தனது வெற்றியை திடகாத்திரமாக வெளியிட்டார்.
08. எல்லாவற்றையும் விட கடைசி முக்கியம், அதிகாரமும், பணமும் கையில் இருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாவிட்டால் எவருமே தேர்தலில் வெற்றிபெற முடியாது. இன்றைய ஜனநாயம் மிகப்பெரிய ஓட்டையுடன் இருக்கிறது. அதற்குள்ளால் எப்படி நுழைந்து போவதென தெரிவதே வெற்றியின் இரகசியம். மக்கள் ஆதரவும், தர்மமும், உண்மையும் இன்றய தேர்தலுக்கு அவசியமில்லை என்பதை சரத் குழுவினர் உணரவில்லை.
09. சரத்தின் அணியில் இருந்து குரல் கொடுத்த அனைவருமே கிணற்றுத் தவளைகள் போல பொறுப்பற்று உளறி அவரை பாதாளத்தில் வீழ்த்தியுள்ளார்கள். மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்றவர்களை அடக்கி வாசிக்க செய்திருக்க வேண்டும்.
10. மகிந்த வெற்றி பெற்றது 25 வீதம், சரத்தை சுற்றியிருந்தவர்களே 75 வீத வெற்றியை மகிந்தவிற்கு கச்சிதமாக வழங்கிவிட்டார்கள் என்பதை அவர் அறிய சில காலமாகும்.
புலம் பெயர் தமிழரின் நிலை என்ன?
வன்னியில் விடுதலைப் புலிகள் கொலை தொடர்பாக சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்தின் பின்னர் ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் சிறீலங்கா மீது குறை கூறின. போர்க்குற்ற விசாரணையை சந்திக்க வேண்டுமென முழக்கமிட்டன. அயர்லாந்தில் சிலர் கூடி சிறீலங்கா போர்க்குற்றமிழைத்ததாக கூறினார்கள்.
இவ்வளவு குற்றங்களையும் கேட்டு மகிந்த அரசு அடக்கி வாசித்தது. புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் ஆகா ஓகோ என்று பொழிந்து தள்ளின. சரத்தின் புகழ் பாடின.
இந்தச் செய்திகள் வெளிவர வெளிவர சரத் சிங்களப் பகுதியில் தோல்வியைத் தழுவத் தொடங்கினார்…
தேர்தல் முடிந்துவிட்டது..
இனி ஐ.நா உட்பட போர்க் குற்றம்பற்றி பேச யாரும் வர மாட்டார்கள்.
இவர்களை போர்க் குற்றம்பற்றி முழங்கும்படி தூண்டியது யார் என்பதை எடை போடும் ஆற்றல் புலம் பெயர் நாடுகளில் இருக்கவில்லை.
இத்தனை ஊர்வலங்கள் போயும் புலம் பெயர் தமிழர் இவர்களை அடையாளம் காணவில்லை.
போனதெல்லாம் போய்த் தொலையட்டும் இனி தேர்தலின் அடுத்த கட்டம் என்ன ?
1. மகிந்த தரப்போகும் பாரிசவாதம் குத்திய தீர்வை யார் தலைமைதாங்கி ஏற்பது..
2. தமிழ் மக்களின் எதிர் காலத்தை கொண்டு நடாத்த தலைமை இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது .. இதை நிரவ நம்பிக்கையான யாரும் இல்லாத நிலை.
3. பொருளாதார ரீதியாக இலங்கைத் தீவு மீட்டக முடியாத தொலைவிற்குள் போய்விட்டது…அவர்களிடம் கொடுக்க கோவணத்தைத் தவிர எதுவும் இருப்பதாக தெரியவில்லை. பிரபாகரன் போல காட்டிய ஒரு சடலத்திற்கு அவர்கள் கோவணம் கட்டியது அதற்காகத்தான்.
4. நடந்த நிகழ்வுகளால் சிங்களவர், தமிழர் இருவருமே அறுந்த பட்டங்களாகி மாட்டக் கூடாத கொப்பில் மாட்டிவிட்டார்கள்.
இனியாவது இலங்கை என்ற டைட்டானிக் கப்பலை பனிப் பாறையுடன் மோதவிடாமல் ஓட்டிச் செல்ல அனைவரும் முயல வேண்டும். சரத் பொன்சேகாவிற்கு சமாதானப் பணிகளில் பதவி கொடுத்து பழிவாங்கும் அரசியலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.
இலங்கை என்ற தாழப்போகும் அபாயத்தி;ல் உள்ள கப்பலில் பயணிப்போர் தமக்குள் போர் நடாத்தி என்ன பயன் என்ற கோணத்தில் சிந்தித்து, அனைவரும் ஏற்கும் தீர்வை அனைத்துக் கட்சிகளும் இணைந்து முன் வைப்பதே யதார்த்தமாகும்.



0 Responses to மகிந்த வெளியிடப் போகும் தீர்வு என்ன?.