பரீட்சார்த்தமாக செய்து பார்த்தால் போரற்ற சுபீட்சமான இலங்கையை உருவாக்க புது வழி கிடைக்கும்…ஐந்து வருடங்களல்ல ஒரேயொரு மாதம் மட்டும் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி…
மகிந்த ராஜபக்ஷவிற்கும் – விடுதலைப் புலிகளுக்கும் கடவுள் மிகச்சிறந்த எச்சரிக்கையை 2005 ம் ஆண்டு சுனாமி மூலம் கொடுத்திருந்தது. சுனாமிக்கு முன்னால் தமிழர் – சிங்களவர் – முஸ்லீம் என்ற பேதம் கிடையாது. இந்த உண்மையை சுனாமியினால் ஏற்பட்ட மரணங்களைப் பார்த்தாவது திருந்துங்கள் என்றும் எச்சரித்திருந்தது. சுனாமியை ஆதாரமாக வைத்து சர்வதேச நாடுகளின் தவறான வழி நடாத்தலில் இருந்து சுதாகரித்துக் கொண்டு இருதரப்பும் மீண்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் நாட்டைக் காப்பாற்றுவோம் என்று கூறி சர்வதேசப் பிடியில் இருந்து தந்திரமாக இரு தரப்பும் தப்பித்திருக்க வேண்டும். – பரிதாபமான முறையில் இரு தரப்பும் அதைக் கோட்டை விட்டார்கள்.
நான் பெரிதா நீ பெரிதா என்று சிந்திக்க வேண்டாமென மக்களுக்கு போதனை செய்த இரு தரப்பும் அதே புத்திமதியை தாங்கள் சுயமாகக் கடைப்பிடித்து போரை நிறுத்தி புதுவாழ்வு காண வேண்டுமென எண்ணியது கிடையாது.
ஆனால் பாவம் சுனாமி.. அதற்காக சேர்த்த பணம் புதுமாத்தளனில் இன்னொரு சுனாமியை ஏற்படுத்துமென தெரிந்திருந்தால் அது வராமலே படுத்திருக்கும். சுனாமி வந்த மண்ணில் போர் வெடித்த கொடுமை உலக வரலாற்றில் சிறீலங்காவிலேயே நடைபெற்றது சரித்திரப் பதிவு.
இப்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இதன் பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தல் நாட்டை அமைதியான பாதையில் கொண்டு போகும் என்று பலரும் கனவு கண்டார்கள். ஆனால் சிறீலங்கா மீட்க முடியாத மறு பக்கத்தில் போகப் போகிறது என்பதை தேர்தலில் நடந்த நிகழ்வுகளும், அதற்குப் பின்னர் ஏற்படும் நிகழ்வுகளும் காட்டுகின்றன.
மூன்றாம் உலக நாடுகளுக்கு இரண்டே இரண்டு பாதைகளைத்தான் ஐ.நா மீதம் வைத்திருக்கிறது. ஒன்று சிம்பாப்பே பாதையில் செல்ல வேண்டும், அல்லது பர்மாவின் ஜிந்தா பாதையில் செல்ல வேண்டும். இப்போது சிறீலங்காவின் ஆட்சி முள்ளு சிம்பாப்பே நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் கொண்டுள்ள வக்கிரமான மோதல் இந்தத் திசைக்குள்ளேயே நாட்டை உதைத்துத் தள்ளப் போகிறது.
இவை இரண்டையும் தவிர்த்தால் ஜப்பான் – சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளின் முழுமையான பொருளாதாரப் பிடிக்குள் உள்ள நாடாக மாற இன்னொரு வழி இருக்கிறது. அதற்குரிய வாய்ப்பு சிறீலங்காவிற்கு இல்லை இந்தியா அருகில் இருப்பதால் அந்த வாய்ப்பு கிடையாது.
இவற்றை எல்லாம் உணர்ந்து நடப்பது அவசியம் -
முதலில் சுயநலங்களையும் – ஈகோ பிரச்சனைகளையும் – அளவிற்கு மிஞ்சிய ஆசைகளையும் விடுத்து இலங்கையை மீட்டெடுக்க வேண்டுமென தலைவர்கள் நினைக்க வேண்டும்.
சிங்கள – தமிழ் – முஸ்லீம் தலைவர்கள் இது குறித்து உடனடியாக சிந்திக்காவிட்டால், உலகப் பொருளாதார வீழ்ச்சிப் புயலில் சிறீலங்கா அறுந்த பட்டமாகப் பறக்க நேரலாம். புதுமாத்தளனில் தமிழர்கள் பட்ட அவலத்தை நாடு முழுவதும் பட நேரிடும். ஆகவே சட்டென பாதையைத் திருப்பி நல் நம்பிக்கை அரசியலை அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
கெடுகுடி சொற்கேளாது என்பார்கள்.
சிறீலங்கா அரசு திருந்த நினைத்தாலும், திருந்த முடியாதளவிற்கு நிலமை இருக்கிறது. போதை வஸ்தால் அழிந்த ஒருவன் கடைசி நேரத்தில் திருந்த நினைத்தாலும் போதையின் தாக்கம் அவனை விடாது.
ஆற்றில் அடிபட்டுப் போன கரடியை கம்பளி மூட்டை என்று எண்ணி பாய்ந்த வியாபாரி நான் விட்டுவிட்டேன் , கரடி என்னை விடுகிறதில்லையே என்று கதறினானாம். அதுபோன்ற நிலையிலேயே சிறீலங்கா அரசு இருக்கிறது.
ஆனாலும் கரடியுடன் இணைந்து பாதாளத்தில் விழ முடியாது என்பதால் இக்கருத்தை முன் வைக்கிறோம்.
அனைவரும் ஒரு கணம் யோசித்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழர் – சிங்களவரல்ல பிரச்சனை அடுத்த சந்ததியைக் காப்பதே அனைவரதும் கடமை. இதை அதிகாரத்தின் கதிரையில் இருப்போர் புரிந்து நடக்க வேண்டும்.
கலிங்கப் போரின் பின்னர் ஆயுதத்தை தூக்கி எறிந்து, வேண்டாம் போரெனக் கூறியவர் அசோகச் சக்கரவர்த்தி. புத்தமதத்திற்காக பாடலிபுரத்தில் பெரும் மாநாடு நடாத்தி அகிம்சையை உலகம் முழுதும் கொண்டு சென்றவரும் அவர்தான். அவருடைய மகனுடைய பெயர்தான் மகிந்த.
இன்றைய சிறீலங்கா அதிபர் போரை வெறுத்த அசோகச் சக்கரவர்த்தியின் மகனின் பெயரைச் சூட்டிக் கொண்டு, அசோகன் பரப்புவித்த புத்த மதத்தையும் தழுவிக்கொண்டு புது மாத்தளன் போரை நடாத்தியிருக்கிறார்.
இருந்தாலும்..
அன்று நடந்த தவறான போர் அசோகச் சக்கரவர்த்தியை திருத்தியது..
அதுபோல இன்று சிறீலங்காவில் நடைபெற்ற தவறான போரை புரிந்து கொண்டு மகிந்த ராஜபக்ஷ – யூ ரேண் – எடுக்க வேண்டும்.
ஆலோசனை கேட்க டெல்கிக்கு ஓடவேண்டிய தேவை இல்லை அசோகச் சக்கரவர்த்தியின் கோட்பாட்டை பின்பற்றி புது வழி காண வேண்டும்.
அது என்ன புது வழி ?
தமிழரின் உரிமைகளை அவர்கள் கேட்பதைவிட அதிகமாக ஒரு மாத காலத்திற்கு கொடுத்துப் பாருங்கள்…
அப்போது…
இந்தியா.. ஐ.நா… ஐரோப்பிய ஒன்றியம்…பொதுநலவாயம்.. அமெரிக்கா.. என்ன செய்கிறதென பரீட்சித்துப் பாருங்கள்…
ஐந்து வருடம், ஆறு வருடமல்ல…
ஒரேயொரு மாதம் பாPட்சார்த்தமாக வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சியை கொடுத்துப் பாருங்கள்…
தமிழரைப்போல சிங்களவருக்கு உற்ற நண்பர் யாருமில்லை என்ற உண்மை அப்போது தெரியவரும்…
தமிழரும் சிங்களவரும் போரிட்டு மடிந்தது மடைத்தனமான செயல் என்ற உண்மையும் தெரியவரும்..
போரற்ற அமைதியான இலங்கையை ஏற்படுத்த வழி பிறக்கும்..
இலங்கையை ஆபத்தில் இருந்து விடுவிக்க இதுதான் சரியான முயற்சி..
முடிந்தால் செய்து பாருங்கள்…
ஒரேயொரு மாதம் மட்டும்….
வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி – ஒரேயொரு மாதம் மட்டும்…
இராணுவத்தை முகாமிற்குள் வைத்து, உப குழுக்களை கட்டுப்பாட்டில் வைத்து, மக்களுக்கு உரிமை கொடுத்து இயல்பாக ஒரு மாதம் வாழவிட்டுப்பாருங்கள்..
அதன் பிறகு மிகுதியை யோசிக்கலாம்…
நன்றி: அலைகள்



VERY GOOD IDEA, THE SINGALA PEOPLE WILL ACCEPT BUT THE SRILANKAN GOVERMENT DON'T WAN'T.IF PRESIDENT MR.RAJAPAKSA REALY WANT TO MAKE SRILANKA AS PARADISE HE MUST DO THIS,THEN ONLY THEY KNOW WHO IS THE VERY BEST RELATION OF SINGALA PEOPLE.DON'T WASTE A SINGEL SECOND PLEASE.THANKYOU. A.SRITHARAN.