கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக 18 கோடி ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்ஷ தனது அலுவலகத்தில் வைத்தே விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர்களில் ஒருவரான எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டில் தாம் முதலில் எமில்காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார்.
அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள ஒருவரை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் அவரிடம் தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் அலஸ் தெரிவித்துள்ளார்.
எமில் – பசில் முதல் சந்திப்பு
இதன்பின்னர், தாம் எமில்காந்தனை பசில் ராஜபக்ஷவிற்கு அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பசில் ராஜபக்ஷ அடிக்கடி எமில்காந்தனை தனது அலுவலகத்தில் சந்தித்ததாகவும் இருவருக்கிடையில் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தேவையானதைக் கேட்குமாறு பசில் ராஜபக்ஷ எமில் காந்தனுக்கு தெரிவித்தார்
இப்படியாக சந்திப்பு நடைபெற்ற போது ஒருநாள் பசில் ராஜபக்ஷ, பிரதமர் மகிந்தவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகளை உறுதிப்படுத்த புலிகள் எதனை எதிர்பார்க்கின்றனர் என எமில்காந்தனிடம் கேட்டார்.
அப்போது எதனையும் கூறாத எமில்காந்தன் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் பேசிவிட்டு அறிவிப்பதாக உறுதிவழங்கினார். இதன்மூலம் விடுதலைப்புலிகள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் உதவியை மாத்திரம் பசில் ராஜபக்ஷவினர் எதிர்பார்த்தனர்.
18 கோடி ரூபாவுடன் பசில், எமில்காந்தனைச் சந்தித்தார்
அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையின்போது கலந்துகொண்ட எமில்காந்தன் விடுதலைப் புலிகளுக்கு கப்பல் ஒன்று தேவையெனவும் அதற்கு 18 கோடி ரூபா செலவாகும் எனக் கூறியதாக தெரிவித்த டிரான் அலஸ், பணத்தைக் கொடுப்பதற்கு சில தினங்கள் தாமதமாகும் எனவும் பணத்தைத் தருவதாக எமிலிடம் கூறுமாறு பசில் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செலவுகளுக்காகக் கிடைத்த டொலர்கள் மற்றும் ரூபா ஆகியவை இரண்டு பயணப் பொதிகளில் எடுத்துவரப்பட்டு வழங்கப்பட்டன. தான் கைதுசெய்யப்படும் போது இந்தத் தகவல் அனைத்தையும் வெளியிட்டதாகவும் இதனையடுத்து தகவல் வெளியாவதைத் தவிர்ப்பதற்காக சட்டமா அதிபர் தனக்கெதிராக சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுக்களையும் விலகிக் கொள்வதாக அறிவித்தார் எனவும் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ‘மௌபிம’ பத்திரிகையின் துஷ்யந்த பஸ்நாயக்கவை கைதுசெய்து அவரைப் பணயமாக வைத்துக்கொண்டு தான் கூறிய தகவல்கள் பொய்யானவை என கடிதமொன்றைப் பெற்றுக்கொள்ள அப்போது இரகசிய காவல்துறைக்குப் பொறுப்பாக இருந்த பிரதாப் சிங்க முயற்சித்ததாகவும் டிரான் அலஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவை அனைத்தையும் உடுவே தம்மாலோக்க அறிந்துள்ளார்
இந்த விடயம் சம்பந்தமான சகல தகவல்களும் 2007 பெப்ரவரி 10 ஆம் திகதி சத்தியக் கடிதமொன்றின் மூலம் அரசதலைவர் மகிந்தவிடம் வழங்கியதாகவும் அதில் தற்போது மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிவரும் உடுவே தம்மாலோக்க தேரர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்
அரசதலைவர் மகிந்தவும், பசில் ராஜபக்ஷவும் தன்னைக் கொலை செய்ய முயற்சித்து வருவதால் இந்த விடயங்களை தான் ஊடகங்களுக்கு வெளியிடுவதாகவும் தன்னைக் கொலை செய்யும் முயற்சியின் முதற்கட்டமாகவே தனது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார்.
மேலும் பல சாட்சியங்கள் உள்ளன.தேவை ஏற்படின் வெளியிடப்படும்
விடுதலைப் புலிகளுக்கும் அரசதலைவர் மகிந்தவுக்கும் இடையில் கடந்த அரசதலைவர் தேர்தலில் ஏற்பட்ட தொடர்புகள் குறித்த தனது வாக்குமூலத்தைத் தவிர பல சாட்சியங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள டிரான் அலஸ் தேவை ஏற்பட்டால் அவற்றை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.
எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு காரணம் மகிந்த மாத்திரமே
அதேவேளை, தமது குடும்பத்தினருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால் அது மகிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே ஏற்படுத்தப்படும் எனவும் தனது மரணத்தை மகிந்தவினால் தீர்மானிக்க முடியாது எனவும் அது பிறக்கும்போது தீர்மானிக்கப்படுகின்ற விடயம் எனவும் டிரான் அலஸ் கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார்.



0 Responses to கடந்த தேர்தலில் மகிந்த செய்தது என்ன? டிரான் அலஸ் அம்பலம்