Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலியாவில் மூன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் விக்டோரிய மாநில உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது..

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவராஜா யாதவன், விநாயகமூர்த்தி ஆரூரன், ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரான இறுதி வழக்கு விசாரணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்றுவருகின்றன.

ஆரம்பத்தில் அரச தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்கள் இடம்பெற்று முடிவடைந்ததை அடுத்து, இன்றையை தினம் இறுதி அமர்வில் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிவான் போல் ஹொக்லன், தீர்ப்பை அறிவிப்பதற்கு தனக்கு இரண்டு மாத காலம் தேவை என்று கூறி மார்ச் 31 ஆம் திகதி தனது முடிவை அறிவிப்பதாக கூறினார்.

கடந்த செவ்வாயன்று ஆரம்பமான அரசதரப்பு வாதத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் 2002 - 2005 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நிதிசேகரித்தும் பொருட்கள் வாங்கியும் விடுதலைப்புலிகளுக்கு அனுப்பினார்கள் என்றும் .நா. சாசனத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கி, அந்த அமைப்புக்கு நிதி சேகரித்தமை பாரதூரமான குற்றம் என்றும் அதற்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நீதிவான் கருத்து தெரிவிக்கையில், முன்னொரு காலத்தில் விடுதலைக்காக போராடிய அமைப்புக்களுக்கு உதவிசெய்வது பெருமையாக கருதப்பட்டது என்றும் அமெரிக்காவில் நியூயோர்க் வீதிகளில் ஐரிஷ் போராட்டக்குழுவினருக்கு ஐரிஷ் அமெரிக்கர்கள் பகிரங்கமாகவே நிதி சேகரித்தனர். ஆனால், அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதலுக்கு பின்னரான அரசியல் சூழல் உலகளாவிய ரீதியில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்றும் அவ்வாறு பார்க்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதும் துரதிஷ்டவசமானதும் என்று குறிப்பிட்டார்.

இதனைஅடுத்து, கடைசி இரண்டு நாட்களாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் -

ஆஸ்திரேலியாவிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு நிதி மற்றும் பொருளுதவி செய்தார்கள் என்று மூவருக்கும் எதிராக அரசு குற்றஞ்சாட்டியிருக்கும் 2002 - 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவில் போர் நடைபெறவில்லை. 2002 ஆம் ஆண்டு அங்கு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர், தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இவற்றுக்கு மேலாக 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் தமிழர் பிரதேசம் பாரிய அழிவுக்குட்பட்டது. இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பெருமளவிலான நிவாரணநிதி அனுப்பப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் நிதி அங்கு விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்பின் ஊடகவே அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது - என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழர் தாயக பகுதியில் காணப்பட்ட நிர்வாக கட்டமைப்புக்கள், அங்கு மக்கள் நல்வாழ்வுக்கும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் விடுதலைப்புலிகள் கட்டமைத்திருந்த நிர்வாக அலகுகள் குறித்தும் 2004 - 2005 காலப்பகுதியில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் மருத்துவராக பணியாற்றி அங்குள்ள மருத்துவப்பிரிவினருக்கு பயிற்சியளித்த மருத்துவர் வைட் ஹோல் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்து விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை, சிறிலங்கா தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை லண்டனிலிருந்து கிறிஸ் ஸ்மித் என்பவரும் நீதிமன்றுக்கு நேரடியாக இன்று வழங்கியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான் தீர்ப்பினை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அறிவிப்பதாக கூறி, அதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தற்போது நடைமுறையிலுள்ள பிணையில் செல்லவும் அனுமதியளித்து வழக்கினை ஒத்திவைத்தார்.

0 Responses to ஆஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்கள் மூவருக்கு எதிரான வழக்கு: மார்ச் 31 ஆம் திகதி தீர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com