ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது என்று உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறினார்.கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள்தான் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில்உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவருகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அவரவர் வாழ்வுரிமை, மொழி ஆகியவற்றுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைகளை, விவகாரங்களை இந்த மாநாட்டின் வழியாக நாம் விவாதிக்க வேண்டும்.
தமிழின பாதுகாப்புக்காக உலக அளவில் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முதல்படிதான் இந்த மாநாடு. தமிழ் இனத்தின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தனிநாடு என்னும் தாகம் இன்னும் தணியவில்லை. தமிழர்களுக்கு என தனிநாடு ஒன்று வேண்டும். அது தனி ஈழமாக அமையும். ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். தமிழர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தலைவர்கள் தேவை என்றார்.



0 Responses to ஈழத்தில் சுதந்திர தாகம் ஓயாது: பினாங்கு துணை முதல்வர்