கனடியத் தமிழர் தேசிய அவையின் மக்கள் பார்வைக்கான யாப்பு கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவினால் மக்கள் கருத்தறிதலுக்காக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.மக்கள் கருத்தறிதலுக்காக பெப்பிரவரி 14ஆம் நாள் வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் மக்கள் தம் கருத்துக்களை, இது குறித்த மக்கள் கருத்தாடல்கள் நடைபெறும் இடங்களிலும் info@tamilelections.ca என்ற மின்அஞ்சல் வாயிலாகவும் தெரியப்படுத்தலாம்.
கனடாத் தமிழர் தேசிய அவை மக்களுடனான கருத்தாடல்
கனடாத் தமிழர் தேசிய அவைக்குத் தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கூட்டம் கனடியத் தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
காலம்: பெப்ரவரி 13ம் திகதி சனிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: ஸ்காபரோ
Agincourt Community Centre
31 Glen Watford Drive,
Scarborough, Ontario
Midland& Sheppard
மக்கள் கருத்தறிதலுக்காக பெப்ரவரி 14ஆம் நாள் வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் கனடியத் தமிழர் தேசிய அவைக்கான யாப்பு வருமாறு.
முதல் வரைவு (14.1.2010 12:00 மதியம்)
கனடியத் தமிழர் தேசிய அவை (க.த.தே.அ)
யாப்பு
1. அறிமுகம்:
கனடியத் தமிழர் தேசிய அவை
கனடா வாழ்த்; தமிழர்களின் சனநாயக, மக்கள் மயப்படுத்தப்பட்ட பங்கேற்புடன், அவர்களின் விவகாரங்களுக்காக கனடா நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் செயலாற்றுகின்ற அதேவேளை தங்கள் தாய் மண்ணில் உள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதற்குமான ஆணை பெற்ற கனடா நாடுதழுவிய ஓர் அவையாக க.த.தே.அ அமைகிறது. இந்த அவையானது கனடா நாட்டின் சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகச் செயலாற்றும்.
2. அடிப்படைக் குறிக்கோள்கள்:
அ) புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்கள்சார் விவகாரங்கள்:
இந்த அவையானது கனடாத் தமிழரின் பண்பாட்டடையாளத்தையும், நலநிறைவையும், இந் நாட்டுடனான அவர்தம் நல்லிணக்கத்தையும், உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார,
பண்பாட்டு விவகாரங்களை மேம்படுத்தும்வகையில் செயற்படும். தமிழ் அடையாளம் (மொழியும் பாரம்பரியமும்), பண்பாடு, கல்வி;, இன-நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு போன்ற இன்னோரன்ன விவகாரங்களின் பல்வேறுபட்ட அம்சங்களைக் கவனத்திலெடுத்து அவற்றின் நலன்களை முன் நிறுத்திக் குரல்கொடுக்கும் செயற்பாடுகளில் இந்த அவை ஈடுபடும்.
ஆ) புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் சார் அனைத்துலக விவகாரங்கள்:
சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்ளப்படவேண்டிய தமிழர் விவகாரங்களை மற்றைய நாடுகளிலுள்ள தமிழரோடும் அவர் தம் சர்வதேச கட்டுமானங்களுடனும் இந்த அவை ஒருங்கிணைத்துச் செயலாற்றும்.
இ) தம் தாய் மண்ணில் வாழும் ஈழத்தமிழர்களின் சுதந்திரம், இறைமை, மற்றும் மேம்பாட்டிற்காகப் பாடுபடல்:
1977ம் ஆண்டில் இலங்கைத் தீவில் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் வழங்கப்பட்ட மக்கள் ஆணையின் பிரகாரம் அத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாரம்பரியமான தாயகம் உண்டு, அவர்கள் ஒரு தனித்துவமான தேசியம், அத் தேசியத்திற்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படைகளினூடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை தொடரறாத வடக்குக் கிழக்கில் அமைத்துக்கொள்வதே ஈழத்தமிழரால் மக்கள் ஆணையூடாக வெளிப்படுத்தப்பட்ட அரசியல் அபிலாசை என்பதையும், இந்த மக்களாணையின் முக்கிய அடிப்படைகளை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில் 2009 டிசம்பர் 19ஆம் நாள் கனடாவில் இடம் பெற்ற வாக்குக்கணிப்பில் 99.82 சதவீதமான கனடிய ஈழத்தமிழரால் வாக்களிக்கப்பட்ட கனடிய தமிழ் ஆணை-2009 (க.த.ஆ-2009) இன் மீளுறுதிப்படுத்தலின் அடிப்படையிலும் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உருவாக்கப்படவேண்டும் என்று இந்த அவை தெளிவாகக் குரல் கொடுக்கும். சர்வதேச சமூகம் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவதோடு ஈழத்தமிழர்கள் தமது இறைமையைச் சரணாகதி;யடையச்செய்யவேண்டும் என்ற தோரணையிலான முயற்சிகளை எந்தக் கோணத்திலிருந்து யார் முன்னெடுப்பினும் அவற்றை சனநாயகரீதியில் எதிர்கொண்டு ஈழத்தமிழரின் இறைமைக்காக இந்த அவை உறுதியாகச் செயற்படும்.
3) துணைக் குறிக்கோள்களும் வழிகாட்டல் கோட்பாடுகளும்
அ) கனடிய சமுதாயத்தில் தமிழர்களின் இன நல்லிணக்கத்தைப் பலப்படுத்துதல்.
ஆ) கருத்து, மதம், பால், இனம், நிறம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் எழுகின்ற அடக்குமுறைகள் எதுவும் இல்லாமல் கனடாவின் பொது விவகாரங்களில் பங்கேற்கும் தனிமனித உரிமையைப் பலப்படுத்தல்.
இ) பல்லினப் பண்பாட்டு கனடாவில், தமிழ் அடையாளம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை சுமுகமாக இயைந்துபோவதை ஊக்கப்படுத்தல்.
ஈ) கனடாவில் தமிழரிடையே கருத்தியல் ரீதியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் மற்றும் சனநாயக ரீதியாக முடிவுகளை மேற்கொள்ளும் ஆற்றல் போன்றவற்றை ஊக்குவித்தல்.
உ) கனடாவிலுள்ள தமிழ் அமைப்புக்களை ஒருகிணைத்து சுமுகமான கருத்தாடலைப் பேணி, ஒருங்கிணைந்த செயற்பாட்டையும், பன்முகப்படுத்தப்பட்ட செயற்திறன் முன்னெடுப்புக்களையும் ஊக்குவித்தல், ஒருங்கமைத்தல்.
ஊ) கனடா வாழ் தமிழரின் சமூக, அரசியல் அடையாளத்தைப் பேணவேண்டும் என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்துகின்ற தளத்தில் நின்றவாறு இங்குள்ள அரசியற்கட்சிகளுடன் தொடாச்சியான உறவுகளை வளர்த்துக்கொள்ளல்.
எ) இலங்கைத்தீவிற்கான பின்வரும் தமிழ்த் தேசியத் திட்டத்தை (த.தே.தி) அங்கீகரித்தல்:
1) இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தனித்துவமான ஒரு தேசியம் என்பது,
2) தனித்துவமான தேசியம் என்ற அடிப்படையில் ஈழத்தமிழர் முழுமையான சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பது,
3) அத்தீவின் தொடரறாத வடக்கு கிழக்கில் அமைந்துள்ள அவர்களின் பாரம்பரிய தாயகத்திற்கான உரிமத்தை ஈழத்தமிழர்கள் தம்மகத்தே கொண்டுள்ளனர் என்பது,
4 ) தமிழ்த் தேசியம் தனது இறைமையை ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசிடம் ஒருபோதும் கையளிக்கவில்லை, அத்துடன் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளுக்கு 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழரால் சனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட மக்களாணையின் அடிப்படையில் இறைமையும் சுதந்திரமுமுள்ள தேச-அரசில் அவர்களது இறைமை மீளநிலைநிறுத்தப்படவேண்டும் என்பதான கொள்கைக் கருத்துநிலை. எனினும், மேற்கூறிய நான்கு உபபிரிவுகளில் கூறப்பட்ட எதுவும் ஈழத்தமிழர்கள் தமது முழுமையான சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்தினையும் புறக்கணிப்பதாக அமைந்துநிற்காது.
ஏ) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் போராளிகளும் பொது மக்களும் செய்த அளப்பரிய அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளித்துச் செயற்படல்.
ஐ) தமிழீழ நடைமுறை அரசு சாதித்துள்ள ஆக்கப+ர்வமான அரசியல் நீதி, சமூக, பண்பாட்டு விழுமியங்களை அங்கீகரித்துச் செயற்படல்.
ஒ) 1) சமயசார்பற்ற தன்மை, 2) தாராள சனநாயக பண்புடைமை, 3) மக்கள் பங்கேற்புடனான அரசியல், 4) ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தன்மை, 5) முறையான சட்டவாட்சியை நிலைநிறுத்தல், 5) பரந்த ஐனநாயகப் பண்புகளைக் கொண்டிருத்தல், 6) ஏனைய நாடுகளில் மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளித்தல் ஆகிய தன்மைகள் பொருந்திய தமிழீழத்தை உருவாக்குவதற்காக ஈழத்தமிழ்த் தேசியம் பாடுபடவேண்டும் என்பதை அங்கீகரித்துச் செயற்படல்.
ஓ) இந்த அவையானது ஈழத்தமிழ் மற்றும் தமிழரது தேசிய, இறைமைச் சின்னங்களை ஏற்று ஊக்குவித்தல் வேண்டும்.
ஒள) ஈழத்தமிழர் தாயகத்தில் சாதி வேறுபாடற்ற, சமயவாதமற்ற சமூகத்திற்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுடன், சமூக அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், பொருண்மிய பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், மற்றும் ஏனைய சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக தொடரறாத வடக்கு கிழக்கு பாரம்பரிய தமிழர் தாயகத்திலும், தீவின் ஏனைய பகுதிகளிலும் உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை மேம்படுத்தல்.
ஃ) ஸ்ரீலங்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள மனிதவிரோத சட்டங்களை ஆதரிக்கின்ற அல்லது தமிழர்களை இராணுவத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்குவதை ஆதரிக்கின்ற குழுக்கள் கட்சிகள் போன்றவற்றிலிருந்து விலகிநிற்றல்.
க் ) தமிழீழத்தை அமைப்பதற்கான சகலவிதமான சனநாயக வழிமுறைகளையும் கையாளுதல்.
ங் ) மேற்குறித்த நோக்குகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஏதுவாக க.த.தே.அ தனக்குத் தேவையான வளங்களை இணைத்து வினைத்திறனோடு செயலாற்றும் முறையில் செயலகம் ஒன்றினை நிறுவிச் செயற்படவேண்டும்.
4) தேசிய அவை
அ) தேசிய அவையானது இரண்டு அவைகளைக் கொண்டிருக்கும்: கனடாத் தமிழர் மக்களவை (மக்களவை) மற்றும் கனடா தமிழர் அமைப்புக்களின் தெரிவவை (தெரிவவை)
ஆ) உருவாக்கப்படும் முதலாவது தேசிய அவையானது மேற்கூறிய இரண்டு அவைகளுக்கும் நிர்வாகக் குழுவிற்குமுரிய நடைமுறை விதிகளை உருவாக்கவேண்டும்.
இ) மக்களவைக்கான தேர்தலை நடாத்தும் பொறுப்பு, க.த.ஆ-2009 வாக்குக்கணிப்பிற்கான தேர்தலை (வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு: டிசம்பர் 19, 2009) நடாத்திய தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு என்ற சுயாதீனமான தேர்தல் ஆணையத்திடம் கையளித்து நடாத்தவேண்டும்.
ஈ) ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவர் எழுத்து மூலமான முன் அறிவித்தலூடாக கனடியத் தமிழர் தேசிய அவையில் தனது செயற்பாட்டை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுமிடத்து அவருக்குப் பதிலாக புதிய அங்கத்தவர் ஒருவரை அவர் ஏற்கனவே பங்குபெற்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையமானது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ஆவணப்படுத்தல் வேண்டும்.
உ) தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களில் கனடா ரீதியிலும் உலகளாவிய மட்டத்திலும் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பாக மக்களவையும் தெரிவவையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும், பிரிவு (2) அடிப்படைக் குறிக்கோள்களின் உபபிரிவு (ஆ) மற்றும் (இ) தொடர்புபட்ட தீர்மானம் எதையும் தேசிய அவையின் பெரும்பான்மையுடன் மேற்கொள்ளும் பட்சத்திலேயே அத்தீர்மானம் தமிழர் தேசிய அவையின் தீர்மானமாகச் செல்லுபடியாகும்.
ஊ) பிரிவு (2) அடிப்படைக் குறிக்கோள்கள் உபபிரிவு (1) தொடர்பான விடயங்களில் தெரிவவையின் பங்கு பற்றுதல் இன்றி மக்களவை தானாகவே தீர்மானங்களை மேற்கொள்ளும்.
எ) இரண்டு அவைகளும் தனித்தனியே அமர்வுகளை நடாத்தும். எனினும் இரண்டு அவைகளும் வருடத்தில் குறைந்தது நான்கு தடவையாவது (அரையிறுதி ஆண்டிலும், ஆண்டின் இறுதியிலும்) முழு அவையினதும் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்கும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் பற்றி விவாதிப்பதற்குமாக இணைந்த அமர்வுகளை நடத்தவேண்டும்.
ஏ) தேசிய அவைக்கான தலைவர் மற்றும் உபதலைவரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்தல் வேண்டும், தலைவர் தேசியப்பட்டியலில்; இருந்து தெரிவு செய்யப்பட்டால் உப தலைவர் மாகாணப்பட்டியல் ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும்.
ஐ) மக்களவையும் தெரிவவையும் குறிப்பிட்ட ஒவ்வோர் அவையையும் தலைமை தாங்குவதற்குரிய பிரதிநிதியை தனக்குள்ளிருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.
ஒ) அனைத்துலக மட்டங்களில் கனடா தமிழர் தேசிய அவையை அவையினால் தெரிவு செய்யப்பட்ட ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பிரதிநிதித்துவம் செய்வர்.
ஓ) சகல அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பலப்படுத்தும் வகையில் உள்நாட்டு விவகாரங்களில் அரசியல் பக்கச்சார்பின்மை பேணப்படல் வேண்டும், ஏதேனும் அரசியல் கட்சி ஒன்றில் பதவி நிலை வகிக்கும் ஒருவர் அல்லது கட்சி ஒன்றின் சார்பில் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது உள்ளுராட்சி சபை உறுப்பினராகவோ பதவி வகிக்கும் ஒருவர் கனடா தமிழர் தேசிய அவை சார்பாகவோ அல்லது அதன் மக்களவை மற்றும் தெரிவவை என்பவற்றின் சார்பாகவோ வெளிநோக்கிய உத்தியோக பூர்வமான பதவிகளை வகிக்க முடியாது, ஆனால் க.த.தே.அ வில் தேர்தலில் பங்குபற்றி அதன் அவைகளினுள் தீர்மானங்களை மேற்கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்.
ஒள) கனடாத் தமிழர் மக்களவை
1. பிரதிநிதிகளின் எண்ணிக்கை: 28 பிரதிநிதிகள், இவர்களில் 16 பிரதிநிதிகள் பிராந்திய ரீதியாகவும், 12 பிரதிநிதிகள் தேசிய ரீதியாகவும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
2. வேட்பாளர்கள் : - ஒரு நபர் எந்தவொரு நாட்டில் பிறந்தவராயிருப்பினும் கனடாவில் வதிவதற்கான சட்டபூர்வமான உரிமை கொண்டவராகவும் 18 வயதினை பூர்த்தி செய்தவராகவும் இருப்பின் முதலாவது தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியுடைய வேட்பாளராவார். வேட்பாளர் ஒருவர் இந்த யாப்பில் கூறப்பட்டுள்ள தமிழ்த் தேசிய இலக்குக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டு க.த.தே.அ வின் அங்கத்தவராக இணைதல் வேண்டும். 2010 ஆண்டின் தேர்தல் தவிர அடுத்து வரும் தேர்தல்களில் பங்குபற்ற விரும்பும் வேட்பாளர் ஒருவர் க.த.தே.அ வின் அங்கத்தவராக இரண்டு (2) வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கவேண்டும். வேட்பாளர் ஒருவர் ஒரே நேரத்தில் பிராந்திய ரீதியிலும் தேசிய மட்டத்திலும் போட்டியிட முடியாது.
3. பதவிக்காலம் : 3 ஆண்டுகள்
4. வாக்களிக்கத் தகுதியுடையோர் : கனடாவில்; வதியும் தமிழர்கள்.
5. தமிழர்கள் என்பதற்கான வரைவிலக்கணம் : வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்
கனடாவில் வதியும் தமிழராகவும், 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் அல்லது தேர்தல் நடைபெறும் ஆண்டில் 16 வயதினை பூர்த்தி செய்பவராகவும் இருத்தல் வேண்டும் அத்தோடு பின்வரும் தகைமைகளில் ஒன்றினையாவது கொண்டிருத்தல் வேண்டும்: 1) இலங்கைத்தீவு அல்லது தமிழகம் அல்லது தமிழர்கள் வாழும் நாடொன்றை பிறப்பிடமாக கொண்டிருப்பதுடன் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருத்தல். 2) வாழ்க்கைத் துணை இலங்கைத்தீவு அல்லது தமிழகம் அல்லது தமிழர்கள் வாழும் நாடொன்றில் பிறந்திருத்தல் அத்துடன் அவர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருத்தல். 3) மேற் கூறிய 1), 2) வகையினரின் வம்சாவழியினர் (வழித் தோன்றல்கள்).
6. வாக்காளர்களின் தகைமையை நிரூபித்தல் : இலங்கைத்தீவு அல்லது தமிழகம் அல்லது தமிழர்கள் வாழும் நாடொன்றில் பிறந்ததை நிரூபிக்கும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற செல்லுபடியாகக்கூடிய ஆவணங்கள் (உ.ம்:- கடவுச்சீட்டு) வாக்களிப்பு வேளையில் சமர்ப்பிக்க வேண்டும். கனடாவில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர்கள் பிறந்த நாட்டினை உறுதிப்படுத்தும் ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி ஆவணங்களை தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு தமிழ் மொழி அறிவுள்ள உதவியாளர் - மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நிரூபித்தல்.
7) மாகாணப்பட்டியல் : கனடா தமிழர் தேசிய அவையினை அமைக்கும் நோக்கங்களுக்காக ஈழத்தமிழ் மக்களின் குடித்தொகை பரம்பலின் பிரகாரம் கனடா நான்கு பாகங்களாக மாகாண ரீதியாக வகுக்கப்படுகின்றது. 1) ஒன்ராரியோ 2) கியூபெக் 3) கிழக்கு – நியூபுரென்ஸ்விக், நவஸ்கோசியா, பிரின்ஸ் எட்வேட் தீவு, நியூபின்லண்ட் 4) மேற்கு – சஸ்கஸ்சூன், மனிட்டேபா, அல்பேட்டா, பிரிட்டிஸ் கொலம்பியா. இதில் ஒன்ராரியோவில் - 10 பிரிதிநிதிகளும், அதில் இரண்டு பெண்கள், இரண்டு இளையோரும், கியூபெக்கில் - 4 பிரிதிநிதிகளும், அதில் ஒரு பெண்ணும், ஒரு இளையவரும், கிழக்கு மாகாணங்கள் ஒரு பிரிதிநிதி, மேற்கு மாகாணங்கள் ஒரு பிரிதிநிதி என்றும் அமையும்.
8) பிராந்திய அவைகள் : ஒவ்வொரு பிராந்தியங்களும் தமக்கென ஓர் அவையைக் கொண்டிருத்தல் வேண்டும். பிராந்திய அவைகள் ரொரன்ரோ கிழக்கு, ரொரன்ரோ மேற்கு, யோர்க் பிரதேசம், பீல் பிரதேசம், டுர்காம் பிரதேசம், ஒட்டாவா, மொன்றியல், வன்கூவர், வினிபெக்ஸ், கல்கரி, எட்மிண்டன், கிச்சினர்-வோட்டலூ-குவெல்வ்-கேம்பிரிச், லண்டன், கலிபக்ஸ் போன்ற பிரதேசங்களில் அமையலாம். மேலும் 500 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் பெரு நகரங்களும், 250க்கு மேற்பட்ட தமிழர் வாழும் சிறு நகரங்களும் இப்பிராந்திய அவைக்குள் உள்வாங்கப்படலாம். மக்கள்; தொகையைப் பொறுத்து 3, 5, அல்லது 7 உறுப்பினர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர்.
9) தேசிய அவையானது பிராந்திய அவைகளுக்கான அதிகாரங்களை வரையறுப்பதுடன், நடைமுறை விதிகளையும் வரையறை செய்யும். மக்கள் அடித்தளத்தில் சனநாயக ரீதியான பங்கேற்பு மற்றும் பிராந்திய மட்டத்தில் கருத்தாடலைப் பேணுதல், தீர்மானங்களை ஆராய்ந்து மேற்கொள்வது ஆகிய செயற்பாடுகளை ஊக்குவித்தல், பிராந்திய ரீதியில் மக்கள் தேவைகளைக் கண்டறிந்து செயற்பாடுகளை முன்னெடுத்தல் பிராந்திய அவைகளின் நோக்காக அமையவேண்டும்.
1 0) தேசியப்பட்டியல் : 12 அங்கத்தவர்கள் தேசிய ரீதிலான வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படல் வேண்டும். இதில் மூவர் பெண்கள், மூவர் இளையோர் பிரிதிநிதிகளுக்கான தெரிவு இவர்களின் தெரிவு கீழ்க்காணும் நோக்கங்களை ஊக்குவிப்பதற்கானதாய் அமையும்: 1) தமிழர் விவகாரங்களைக் கையாளுவதில் கனடா நாடளாவிய ரீதியிலான பார்வையைப் பேணல், 2) கனடா தழுவிய ரீதியில் மக்கள் பங்களிப்பு. ஒருங்கிணைப்பு, 3) வேட்பாளர்கள் எந்தப் பிராந்தியத்தினை சேர்ந்தவர் என்ற வேறுபாடற்ற வகையிலும் திறமையின் அடிப்படையிலும் பங்குபற்றல், 4) பிராந்தியங்களை தாண்டிய வகையிலான ஈடுபாடும் புரிந்துணர்வும்
1 1) சராசரியாக 15 வேட்பாளர்களாவது தேசிய மட்டத்தில் தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
1 2) மக்கட்தொகை பரம்பல் மாதிரி: - ஒவ்வொரு பிராந்தியங்களிலும் முன்மொழியப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பிராந்திய சபைகளுக்காக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, மற்றும் பிராந்திய சபைகளை அமைப்பதற்கு தேவைப்படும் மேலதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பன கனடாவில் உள்ள தமிழ் மக்கள் தொகை பரம்பலிற்கு ஏற்பவும் முன்வரும் வேட்பாளர்களின் தொகைக்கேற்பவும் தேர்தல் குழுவினால் தீர்மானிக்கப்படும். எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பரம்பலில் கணிசமான மாற்றங்களேற்படும் இடத்து இம் முறைமையானது மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
எ) கனடாவில் இயங்கும் தமிழ் அமைப்புக்களின் தெரிவவை (தெரிவவை)
1. பிரதிநிதிகளின் எண்ணிக்கை: - கனடா நாட்டிலிருந்தவாறு க.த.தே.அ க்கான யாப்பை ஏற்றுக்கொண்டு தம்மை தெரிவரவவைக்குள் இணைத்துக் கொள்ளும் அமைப்புக்களில் இருந்து 5 பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவுசெய்யும்.
2. பதவிக்காலம் : - 1 ஆண்டு.
3. வேட்பாளர்கள் : - கனடாவில் சட்டரீதியான வதிவுரிமையுடன் வசிக்கின்றவரும் தேர்தல் வருடத்தில் 18 வயதைப் பூர்த்தி செய்கின்றவருமான எந்தவொரு தமிழரும் வேட்பாளராகலாம். குறித்த வேட்பாளர் க.த.தே.அ க்கான யாப்பில் தமிழ்த் தேசியத்தின் இலக்கை வரையறுக்கின்ற அடிப்படைகளையும் அதற்காக அர்ப்பணிப்போடு கடமையாற்றத் தயாராக இருப்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். தகுதிகாணும் அமைப்புக்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள வேட்பாளர்களில் 5 பேருக்கு வாக்களிக்கலாம். ஒவ்வோர் அமைப்பும் வாக்களிப்பதற்காக ஒரு நபரை (நிறுவனத்தின் தலைவர்) அனுப்பிவைக்க வேண்டும். தகுதிபெறும் அமைப்புக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தகைமைசார் குழுவானது மேற்படி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவதுடன் இரகசிய வாக்கெடுப்பையும் நடாத்த வேண்டும்.
4. வாக்களிக்கத் தகுதியான அமைப்புக்களுக்கான தகைமை அடிப்படைகள் : பின்வரும் தகைமையைக் கொண்ட அமைப்புக்கள் வாக்களிக்கத் தகுதி கொண்டவையாகும்: 1) குறித்த அமைப்பு தனது யாப்பில் க.த.ஆ-2009 இன் மக்களாணையை (சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான கனடா வாழ் ஈழத்தமிழரின் ஆணை) 2010ம் ஆண்டின் இறுதிக்குள் இணைத்துக்கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவேண்டும். 2) குறித்த அமைப்பு தான் இலக்காக கொண்டுள்ள மக்களின் 30 வீதத்தினரையாவது முனைப்புடன் செயற்படும் அங்கத்தவர்களாக கொண்டிருத்தல் வேண்டும்.
5. இந்த தகைமைகள் பங்குபற்றும் எந்தவொரு அமைப்பின் யாப்பின் ஏதேனும் ஒரு சரத்து க.த.தே.அ இன் அடிப்படைக் குறிக்கோள்களை மறுதலிப்பதாக இருக்கக் கூடாது என்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ளது.
05) அங்கத்துவம் : -
அ) கனடா தமிழர் தேசிய அவையின் பிராந்திய ரீதியான சபைகள் அங்கத்தவர்களை இணைத்தல் வேண்டும். நிறைவேற்றுக் குழுவானது வருடாந்த அங்கத்துவ கட்டணத்தை தீர்மானிக்க வேண்டும். யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அங்கத்துவ பணத்தினையும் செலுத்திய ஒருவர் அவையின் அங்கத்தவராவார். முதலாவது காலப்பகுதிக்கு ஆண்டுச் சந்தாப்பணம் 10 கனடிய டொலர்களாக இருத்தல் வேண்டும். 2010 ஆண்டு தேர்தல் தவிர்ந்த ஏனைய தேர்தல்களின் போது வேட்பாளர்களாக நியமிக்கப்படுவதற்கு ஆகக் குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது அவையின் அங்கத்தவராக ஒருவர் இருந்திருத்தல் வேண்டும். யாப்பிற்கான ஆணையை ஏற்றுக் கொண்டு அங்கத்துவப் பணத்தினை செலுத்தும் நபர் எவரும் அவையின் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும.; ஆனால் வாக்களிக்க தகுதியானவர்கள் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியும்.
ஆ) அங்கத்துவம் முடிவுக்கு வருதல்:-
1. அங்கத்தவர் ஒருவரின் இறப்பு
2. அங்கத்தவர் ஒருவர் தன்னிச்சையாக விலகிக் கொள்ளல்.
3. அங்கத்துவப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படல் (அங்கத்துவ பணம் செலுத்தத் தவறும்போது)
4. அவையினால் நீக்கப்படல்.
அங்கத்தவர் ஒருவர் க.த.தே.அ வின் நலன்களுக்குக் குந்தகமாக பாரதூரமான முறையில் செயற்பட்டால் அந்த அங்கத்தவரை நிர்வாகக்குழுவானது அங்கத்துவத்தில் இருந்து நீக்கலாம். நிர்வாகக் குழுவின் அறிவித்தல் கிடைத்து ஒரு மாதத்தினுள் அவ்வாறு நீக்கப்பட்ட அங்கத்தவர் நிர்வாகக் குழுவின் முடிவுக்கு எதிராக க.த.தே.அ யின் தேசிய அவைக்கு மேற்முறையீடு செய்யலாம்.
தேசிய அவையானது விசாரணை ஒன்றின் பின்னர் இறுதி முடிவை எடுக்கும். மேன் முறையீடு செய்வதற்கான காலத்தின்போதும் விசாரணையை எதிர்கொண்டிருக்கும் காலத்திலும் அங்கத்துவம் தடை செய்யப்பட்டிருக்கும். பெரும்பான்மை வாக்குகளின் மூலம் அந்த அங்கத்தவரை நீக்குதல் தொடர்பான முடிவினை தேசிய அவையானது மேற்கொள்ளும்.
06) நிறைவேற்றுக் குழு:
அ) அங்கத்தவர்கள் : - நிறைவேற்றுக் குழு 5 நபர்களை கொண்டிருக்கும்: தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர், பேச்சாளர்.
ஆ) ஆயுட் காலம் : - 1.5 ஆண்டுகள்
இ) பொறுப்புக்கள் : - நிறைவேற்றுக் குழுவானது கனடா தமிழர் தேசிய அவையின் அங்கீகாரத்துடன் சிறப்புக் குழுக்களுக்கான குறுகியகால, நடுத்தரக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை வரைதல், ஒருங்கிணைத்தல், சேர்த்தல் போன்ற பொறுப்புகளை கொண்டுள்ளது. முதலாவது நிறைவேற்றுக் குழுவானது உப குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்துக் கொள்ளும் இவை யாப்பின் இணைப்புக்களாக இலக்கமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
ஈ) தொடர்பாடல் அதிகாரி: - தேவை ஏற்படுமிடத்து நிறைவேற்றுக் குழுவானது கட்சிசார்பு நபர்களை தொடர்பாடல் அதிகாரிகளாக நியமனம் செய்து கனடாவில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளுடனான தொடர்புகளை பேணிக் கொள்ள முடியும்.
07) விசேட குழுக்கள் : -
நிறைவேற்றுக் குழுவானது தமது தேவைகளின் பிரகாரம் விசேட குழுக்களை நியமிக்க வேண்டும். அவ்வாறானதொரு குழு 3 அல்லது 5 அங்கத்தவர்களை கொண்டிருக்கும், அந்த குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். ஒவ்வொரு குழுக்களுக்குமான தலைவர் ஒருவரையும், துறைசார்ந்த தகைமையுள்ள நபர்களையும் தேசிய சபையினது அங்கீகாரத்துடன் அங்கத்தவர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நியமிக்கலாம்.
08) நிதி: -
அ) கனடா தமிழர் தேசிய அவையானது தனது குறிக்கோள்களை விட்டுக் கொடுக்காத வகையில் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபடல் வேண்டும். க.த.தே.அ வின் கட்டமைப்புக்களானது தனது இருப்புக்காக வெளியக மூலங்களில் தங்கியிருக்க முடியாது.
ஆ) க.த.தே.அ வின் அங்கத்தவர் அல்லாத தகுதியான பதிவு செய்யப்பட்ட வெளியக கணக்காய்வாளர் ஒருவர் அவையின் கணக்காய்வாளராக நிறைவேற்றுக் குழுவினால் நியமிக்கப்படல் வேண்டும்.
09) யாப்பு:-
அ) வாக்காளர்கள் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் யாப்பிற்கான தங்களது அங்கீகாரத்தினை தெரிவிப்பதற்காக கனடா தமிழர் தேசிய அவைக்கான முதலாவது தேர்தல்
நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அவைக்கான யாப்பு மூன்று மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு) வெளியிடப்படல் வேண்டும்.
ஆ) ஆரம்ப அவையானது யாப்பினை அங்கீகரித்து உறுதிப்படுத்துதல் வேண்டும்.
இ) யாப்பில் திருத்தங்கள் : - தேசிய சபையின் வேண்டுகோளுக்கு இணங்க யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.
1) திருத்தங்களானது கனடா தமிழர் தேசிய அவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரிக்கப்பட வேண்டும்.
2) திருத்தங்களானது பொதுமக்களின் வாக்குக் கணிப்பிற்கு விடப்படல் வேண்டும்,
3) திருத்தங்களானது ஆகக் குறைந்தது தேர்தல் தொகுதியின் 30 வீதத்துக்குக் குறையாத எண்ணிக்கையுடையோரால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பதுடன் வாக்களிப்பில் பங்குபற்றியோரில் 50 வீதத்துக்குக் குறையாதோரின் ஆணையையும் பெற்றிருத்தல் வேண்டும்.
10) அவையைக் கலைத்தலும் முரண்பாடு தீர்த்தலும்:
அ) க.த.தே.அ வினை கலைப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் அது தொடர்பாக பிரத்தியேகமாக கூட்டப்பட்ட ஒரு விசேட கூட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு ஆதரவுடன் முன்வைக்கப்படலாம். இந்தப் பிரேரணையானது கனடா வாழ் தமிழ் வாக்காளர் தொகுதிகளுக்கு ஆகக் குறைந்தது 3 மாதகால முன்னறிவித்தலுடன் முன்வைக்கப்பட்டு ஒட்டுமொத்தத் தொகுதியின் 30வீதத்திற்கு குறையாத அளவு எண்ணிக்கையுடையோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்படாதவிடத்து கலைப்பு நிறைவேற்றப்படலாம்.
முன்வைக்கப்பட்ட பிரேரணையினை 30 வீதத்திற்கு மேற்பட்ட தொகுதிவாக்காளர்கள் எதிர்க்கநேர்ந்தால் புதிய தேர்தல் ஒன்று குறித்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட தினத்தில்
இருந்து 6 மாதத்தினுள் நடாத்தப்படல் வேண்டும். அவையைக் கலைப்பதற்கான பிரேரணை ஒன்று எதிர்க்கப்படாதவிடத்து நிறைவேற்றுக் குழுவானது ஒரு நபரை-நபர்களை
முடிவுறுத்துனராக நியமித்து அவர்களின் மேற்பார்வையில் க.த.தே.அ வின் சொத்துக்கள் பொறுப்புக்களைத் தீர்த்து கலைப்பை முடிவுக்கு கொண்டுவரல் வேண்டும்.
ஆ) இந்த யாப்பிலுள்ள வாசகங்கள் தொடர்பிலான வியாக்கியானங்கள் தொடர்பான எந்தவொரு முரண்பாடும் கனடா நீதிமன்றின் மூலம் தீர்க்கப்படல் வேண்டும். இதற்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட இடமாக ரொறன்ரோ மாவட்ட நீதிமன்றம் அமையும்.



0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவையின் மக்கள் பார்வைக்கான யாப்பு