Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை மேலும் கட்டியெழுப்பும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒற்றுமையாகவும் நெருக்கமாகவும் செயற்படவுள்ளன என்று நேற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பொதுத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் பேசும் மக்களுடைய நலன் கருதி மிகவும் ஒற்றுமையாக ஒருமித்து இந்தத் தேர்தலை நாங்கள் சந்திப்போம். எமது மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்பதற்கு - அதை உறுதியாக்குவதற்கு - அதை நிலை நிறுத்துவதற்கு எதைச் செய்ய வேண்டியிருக்கின்றதோ அதை நாம் மேற்கொள்வோம்.

"பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித் தனியாகவே போட்டியிடவுள்ளன. சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கை எதனையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்கின்றோம். வடக்கு - கிழக்குத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் ஆகியோர் சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாழவேண்டும் என்பதற்காகவே நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

"இதேவேளை சரத் பொன்சேகாவுக்கும் எனக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் போலியான பிரசாரங்களை முன்வைத்து வருகின்றது. தற்போது நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நிலையானதும் கெளரவமானதுமான சமாதானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கின்றது. இந்தநிலையில், பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான போலியான பிரசாரங்களைக் கூறி அவர்களுக்கிடையில் பிரிவினைகளைத் தோற்றுவிப்பது நாட்டின் சமாதானத்திற்கு ஏற்புடையதாகாது.

"அரசதலைவர் தேர்தலுக்கு முன்னர் இரண்டு தரப்பினர்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், ஒரே விடயமே இரு தரப்பிடமும் முன்வைக்கப்பட்டதே தவிர மாறுபட்ட கோரிக்கைளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இரண்டு தரப்பினரில் சரத் பொன்சேகா எமது கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினார். இதன்போது நாங்கள் தேசத்துரோகமான கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களுக்கான சுதந்திரமான அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலான கோரிக்கைகளையே நாங்கள் முன்வைத்தோம்.எனவே தயவு செய்து போலி பிரசாரங்களை சிங்கள மக்கள் நம்பவேண்டாம்" - என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமது பிரசாரங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களில் அரசதலைவர் தேர்தல் நாளன்று மக்கள் வாக்களிக்க முடியாதவாறு பல்வேறு சதிகளை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இவற்றுக்கு மத்தியிலும் பொதுமக்கள் எமக்கு வாக்களித்தனர்" - என்றார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அரசதலைவர் இணைப்பாளர் இனியபாரதி தாம் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்வது தொடர்பில் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to பொதுத்தேர்தலில் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்பட முடிவு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com