தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வாக சுதந்திர தமிழீழம் தான் அமையவேண்டும் என்பதை பிரித்தானியா வாழ் தமிழ் வாக்காளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.அதன் தமிழ் வடிவம் வருமாறு:
தமிழீழ விடுதலைப்புலிகளை முறியடித்ததாக கூறிவரும் மகிந்தா ராஜபக்சா இரண்டாவது தடவை அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில தினங்களில் சிறீலங்காவில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதற்கு பிரித்தானியா தமிழ் மக்கள் பெருமளவில் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாள 65,000 பிரித்தானியா தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசிய சபை ஒழுங்குபடுத்தியிருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வாக தனித்தமிழீழமே அமையவேண்டும் என 1976 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில் அந்த தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என கேட்கப்பட்டிருந்தது.
பிரித்தானியா முழுவதும் 65 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றிருந்தன. இந்த வாக்கெடுப்பின் முடிவில் 64,256 (99.33%) வாக்காளர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்தும், 185 (0.29%) பேர் அதனை எதிர்த்தும் வாக்களித்திருந்தனர். 251 (0.39%) வாக்குகள் செல்லுபடியற்றவை.
இதேபோன்ற வாக்கெடுப்புக்கள் பிரான்ஸ், நோர்வே, சுவிற்சலாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் நடைபெற்றிருந்தன.
சுதந்திர தமிழீழம் தான் தேவை என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் தமிழ் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நடைபெற்ற வாக்கெடுப்புக்களை போல பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களும் தமது விருப்பங்களை ஜனநாயக வழிகளில் தெரிவிப்பதற்கு இது ஒரு உந்துசக்தியாகும்.
சிறீலங்காவில் இதனை மேற்கொள்வது கடினமானது ஏனெனில் பிரிவினைகள் தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதை சிறீலங்காவின் சட்டம் தடை செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்பதை பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் தெளிவாக நம்புகின்றனர் என உடனடி நடவடிக்கைக்கு பொறுப்பான குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் வெற்றியீட்டிய மகிந்தா ஒருமைப்பாடு தொடர்பாக அறைகூவல் விடுத்திருந்தார். இந்த தேர்தலில் மகிந்தா 57.8 வீத வாக்குகளையும், பொன்சேகா 40 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். எனினும் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது பாதுகாப்பு படையினரை அகற்றிவிட்டு அரசு தன்னை கொல்ல முயல்வதாகவும் பொன்சேகா தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
எனினும் பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்களை அரசு மறுத்து வருகின்றது. பொன்சேகா இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி தன்னை கொல்ல முயல்வதாக அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (27) பொன்சேகா தங்கியிருந்த ஆடம்பர விடுதியை படையினர் சுற்றிவளைத்திருந்தனர். எனினும் அங்கிருந்து வெளியேறிய எதிர்க்கட்சித்தலைவர் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையிலான இடைவெளியை தெளிவாக காட்டியுள்ளது. மகிந்தா வெற்றிபெற்ற போதும் அவர் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தோல்வி கண்டுள்ளார்.
இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னரே ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக மகிந்தா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் வன்னியில் 7,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. போரில் இடம்பெயர்ந்த 250,000 மக்களை சிறீலங்கா அரசு தடுத்து வைத்திருந்தது. அவர்களில் 100,000 பேர் தற்போதும் முகாம்களில் உள்ளனர். 11,000 பேரை விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் அரசு தடுத்து வைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to சுதந்திர தமிழீழம் தான் தீர்வு என்பதை பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்: த கார்டியன்