அம்பாறையில் கருணா குழுவின் முக்கிய தளபதி இனியபாரதி சிறுவர்களை தனது ஆயுதக்குழுவில் சேர்த்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் விவகார அதிகாரி பாதுகாப்பு சபையின் உபகுழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சிறிலங்கா அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் அவர் பாதுகாப்பு சபையின் உபகுழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப்பிணக்கு தொடர்பாக விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் பற்றிக் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு முழுமையான அறிக்கை ஒன்றை தயார் செய்து ஐ.நா. பாதுகாப்பு சபையின் உபகுழுவிடம் சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:-
மட்டக்களப்பில் நான் தங்கியிருந்த காலப்பகுதியில் அம்பாறை பிரதேசத்தில் கருணா குழுவினரின் தளபதியான இனியபாரதி என்பவர் சிறுவர்களுக்கு ஆட்சேர்ப்பதாக கேள்விப்பட்டேன். அவ்வாறு அவரது ஆயுதக்குழுவில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு, உளநல மற்றும் புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டுவரும் பல சிறுவர்கள், மீண்டும் தாம் அம்பாறைக்கு சென்றால் தாங்கள் இனியபாரதியால் மீண்டும் ஆயுதக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படலாம் என்று என்னிடம் அச்சம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள கருணாவை கொழும்பில் சந்தித்தபோது கேட்டேன். தனது தளபதி இனியபாரதி சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைத்துக்கொள்வது தனக்கு தெரியும் என்றும் அதனை நிறுத்தும்படி இனியபாரதிக்கு தான் கடுமையாக உத்தரவிட்டுள்ளதாகவும் கருணா என்னிடம் கூறினார்.
இது தொடர்பாக சிறிலங்காவின் நீதி அமைச்சரை சந்திக்கும்போது பேசினேன். இனியபாரதி உடனடியாக சிறுவர்களை ஆயுதக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்தாவிடின், அது சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுமையற்ற போக்குக்கு வழிவகுக்கும் என்று அவரிடம் கூறினேன். சிறுவர்களை ஆயுதக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படுவது கண்காணிக்கப்படவேண்டும் - என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to அம்பாறையில் இனியபாரதி சிறுவர்களை ஆயுதக்குழுவில் சேர்ப்பதாக ஐ.நா. அதிகாரி பாதுகாப்பு சபை குழுவுக்கு அறிக்கை