Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு தமது ஒன்றிணைவை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் உரிமைகளை பெறமுடியும் என்பதனை அரச தலைவர் தேர்தல் உணர்த்தியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .எம்.எம்.நௌஷாத் தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்துள்ள அரச தலைவர் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் தேர்தல் முடிவுகளில் திருப்திப்பட்டுக்கொள்ளாவிட்டாலும் இத்தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை களைந்து மீண்டும் இணைந்து செயல்படவைத்துள்ளது. இத்தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றுள்ளோம். இன்றைய அரசாங்கத்தில் காட்டாட்சி செய்து கொண்டிருந்த அனைவரும் நமது ஒற்றுமையின் மூலம் செல்வாக்கற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

தமிழ் பேசும் மக்களாகிய எம்மிடத்தில் துளிர்விட்டுள்ள இவ்வொற்றுமையை நாம் பேணிக்காக்க வேண்டும். இதற்காக விட்டுக்கொடுப்புடன் இரு சமூகங்களும் செயற்படவேண்டும். இதன் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதிகமான ஆசனங்களை பெற்று தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும்.

அரசதலைவர் தேர்தலில் நம்மில் மிகப்பெரும் பகுதியினர் முஸ்லிம் காங்கிரஸினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் வேண்டுகோளையேற்று ஒற்றுமைப்பட்டுள்ளதால் இன்றைய ஆட்சியாளர்களை சிந்திக்கவைத்துள்ளோம். எமது தேவைகளின் அவசியத்தை உணர வைத்துள்ளோம்.

எமது சக்தியின் பெறுமதியையும் பலத்தையும் உணர்ந்துள்ள ஆட்சியாளர்கள் இனி எம்மிடையே வேற்றுமைகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு ஆசைவார்த்தைகளை உபயோகிப்பர். அவற்றில் நாம் மிக கவனமாக இருக்கவேண்டும். ஒற்றுமையே எமது பலம். அதுவே எமது உரிமைகளை பெறுவதற்கான கருவியும் கூட. பேரினவாதிகளை மண்டியிடச் செய்யும் ஆயுதமும் இதுதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

எமது வேண்டுகோளை ஏற்று அன்னம் சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to எதிர்பார்த்த முடிவு இல்லாவிட்டாலும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை உறுதிப்படுத்தியுள்ளோம் - முஸ்லிம் நா.உ நௌஷாத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com