சிறீலங்காவில் நடைபெற்று முடிந்த அரச தலைவர் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போது தான் இந்தியா நிம்மதிப் பெருமூச்சை விட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் த பொட்டம்லைன் வாரஏடு தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் நடைபெற்று முடிந்த அரச தலைவர் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போது தான் இந்தியா நிம்மதிப் பெருமூச்சை விட்டுள்ளது. மகிந்தாவின் வெற்றியால் அது மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தமது கவலைகளை மகிந்தா புரிந்து கொள்வார் என இந்தியா நம்புகின்றது. சிறீலங்காவில் ஒரு அரசியல் உறுதித்தன்மை ஏற்பட வேண்டும் என அது விரும்புகின்றது. இதற்கு அப்பால் சிறீலங்காவில் அமையும் புதிய அரசுடன் புதிய உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தேவையும் இந்தியாவுக்கு இல்லை என்பதும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிக்கான காரணம். ஏற்கனவே தனது ஆதரவுகளை மகிந்தாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கு புதிய அரசுடன் உறவுகளை ஏற்படுத்துவது மிகவும் சிக்கலான விடயம்.
சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவுக்கும் – சிறீலங்காவுக்கும் இடையில் நல்லுறவுகள் வலுப்பட்டிருந்தன. ஆனால் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களும், இந்திய பிரதமரின் மரணமும் இந்த உறவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவங்களுக்கு பின்னர் சிறீலங்கா தொடர்பான வெளிவிவகார கொள்கைகளில் இந்தியா பல தடவை சிந்தித்த பின்னரே முடிவுகளை எடுப்பதுண்டு.
விடுதலைப்புலிகளுடனான மோதலின் பின்னர் இந்தியா ஒதுங்கிய போது சிறீலங்கா அரசுடன் சீனாவும், பாகிஸ்த்தானும் தமது இராணுவ ஒத்துழைப்புக்களை அதிகரித்திருந்தன. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்கள் புதுடில்லியை அதிகம் அச்சமடைய வைத்திருந்தது.
பொன்சேகாவுக்கு சீனா மற்றும் பாகிஸ்த்தான் இராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு என இந்தியா நம்புகின்றது. எனவே இந்துசமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் ஆளுமையை தக்கவைப்பதற்கு மகிந்தாவின் முக்கியத்துவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டது.
தென்னிலங்கையில் சீனா துறைமுகத்தை அமைத்து வருகையில் இந்தியா வடபகுதியில் தனது ஆளுமையை அதிகரிக்க முயன்று வருகின்றது. வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்களை வலியுறுத்தி வரும் இந்தியா யாழ்ப்பாணத்தில் தனது தூதரக அலுவலகத்தையும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
கல்கத்தாவில் தனது தூதரக அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு சிறீலங்காவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பும் தமது உறவுகளை வலுப்படுத்த முற்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு நிம்மதி: த பொட்டம்லைன்