செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் போலீசாரை காப்பாற்ற சென்ற இன்ஸ்பெக்டர், ஏட்டுக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக 15 அகதிகளை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் 33 அகதிகள் தங்கி உள்ளனர். அவர்களில் முகமது நிக்சன், சேகர், ரமணா ஆகிய 3 அகதிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி அங்குள்ள மரத்தின் மீது ஏரி அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சேவியர் தன்ராஜ், செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், கிழூ பிராஞ்ச்' இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கு சென்று சமரசம் செய்ததை தொடர்ந்து, ஒவ்வொருவராக கீழே இறங்கினார்கள். இந்த போராட்டம் சுமார் 7 மணி நேரம் நீடித்தது.
இதனை அடுத்து, முகாமில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரை 15 அகதிகள் தங்களது அறைக்குள் தள்ளி மூன்று பூட்டுகளை போட்டு பூட்டினர். போலீசார் எவ்வளவு சொல்லியும் அகதிகள் அவர்களை திறந்து விட மறுத்து விட்டனர். எனவே, அறையில் சிக்கிக் கொண்ட போலீசாரை காப்பாற்றுவதற்காக இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், போலீஸ் ஏட்டு முனியாண்டி உள்ளிட்ட போலீசார் ஏணி வழியாக அந்த அறைக்குள் நுழைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அகதிகள் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், ஏட்டு முனியாண்டி ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசாரை தாக்கியதாக பத்மராஜன் (வயது 20), கிருஷ்ணநிதின் (29), முகமது நிக்சன் (25), கிரிதாஸ் (35), அமலன் (30), மோகன் (28), அருள் (21), கங்காதரன் (43), பரமேஸ்வரன் (35), சேகர் (30), பசிதரன் (30), செல்வக்குமார் (33), பாரதிதாசன் (27), ரமணன் (33), பிரதீபன் (34) ஆகிய 15 அகதிகள் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 15 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார், அவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



0 Responses to செங்கல்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 15 பேர் சிறையில் அடைப்பு