ஒரு காலத்தில் ஆட்சியிலிருந்த அதிபர் ரணசிங்க பிரேமதாசாவினது ஆட்சியினை எதிர்த்து 1992 ஆம் ஆண்டு 275 கிலோ மீற்றர் நீளமான எட்டுநாள் நடைப்பயணத்தினைக் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரைக்கும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்.ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் பிரவேசம் எழுபதுகளிலேயே ஆரம்பித்துவிட்டாலும் ராஜபக்ச தொடர்பான செய்திகள் இதன்போதே பெரிதும் வெளிவந்திருந்தன. பண்டாரநாயக்க குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாட்டினது அதிகாரம் தமது குடும்பத்திடம் வந்துசேரவேண்டும் என்ற ஒரே இலக்கோடு மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வந்தார்.
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் முதன் முறையாக வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச முக்கியமான அரச அதிகாரங்களைத் தனது குடும்பத்தவர்களுக்கு வழங்கியதோடு ஆட்சியதிகாரத்தில் குடும்பத்தின் பங்கு காத்திரமாக இருப்பதை உறுதிப்பத்திக்கொண்டார்.
இரண்டாவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் மகிந்த ராஜபக்சவினது அரசாங்கத்தில், தற்போது சமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபச்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் ஆளும் அரசாங்கத்தில் நேரடிப் பங்கினை வகிக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச
65 வயதான மகிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு முதன் முறையாக நாடாளுமன்றினுள் நுழைந்தார். 2005ஆம் ஆண்டு முதலாவது முறையாகவும் 2010ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, இன்னுமொரு தடவை அதிபராக இருக்கும் வகையில் நாட்டினது அரசியலமைப்பினை மாற்றியமைக்கும் முனைப்புக்களில் தற்போத ஈடுபட்டுவருகிறார்.
பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரவு மற்றும் ஊடகத்துறை ஆகிய முக்கியமான அமைச்சுக்களை அதிபர் ராஜபக்ச தொடர்ந்தும் தன்வசம் வைத்திருக்கிறார்.
சமல் ராஜபக்ச
எட்டுப் பிள்ளைகளைக் கொண்ட மகிந்தவினது குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ச 1985ஆம் ஆண்டு முதல் முறையாகப் நாடாளுமன்றம் சென்றார். மகிந்தவின் ஏனைய சகோதரர்களைப் போல இவர் ஒருபோதும் சர்சைகளுக்குள்ளும் சிக்கல்களுக்குள்ளும் மாட்டியதில்லை. முன்னைய அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரவு அமைச்சராக இருந்த சமல், புதிய நாடாளுமன்றினது சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பசில் ராஜபக்ச
தனது சகோதரன் மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கபட்டதைத் தொடர்ந்தே பசில் சிறிலங்காவினது அரசியலுக்குள் நுழைந்தார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தல் பிரசாரங்களை ஒழுங்கமைப்பதற்காக நாடு திரும்பிய பசில் ஐக்கிய அமெரிக்காவிலேயே வசித்து வந்தார்.
அதிபரின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பசில் பின்னர் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சகோதரன் மகிந்தவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பசில் ராஜபக்சவே அரசாங்கத்தின் முக்கியமான அரசியல் மூலோபாயங்களை வகுப்பதாகக் கூறப்படுகிறது.
வடக்கின் அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பசில் ராஜபக்ச, புதிய அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக உள்ளார். வடக்கின் அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவராக இருக்கும் பசில் ராஜபக்ச, முன்னாள் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து வடக்கின் அபிவிருத்திக்காகவென வெளிநாட்டு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட பணத்தில் பெருத்தொகையினைச் சுருட்டியமை அனைவரும் அறிந்த இரகசியம். வடக்கு மக்கள் இதனை நன்கறிவர்.
கோத்தபாய ராஜபக்ச
சகோதரர் பசிலைப் போலவே கோத்தபாய அமெரிக்காவிலேயே வசித்துவந்தார். மகிந்த ராஜபக்ச அதிபராத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாடு திரும்பிய கோத்தபாயவுக்கு, பசிலுக்கு அடுத்ததாக அதிக அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்ட பாதுகாப்புச் செயலாளர் என்ற பொறுப்புநிலை வழங்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வுபெறும் வரைக்கும் இருபது ஆண்டுகளாக கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா இராணுவத்தில் பணிசெய்திருக்கிறார்.
ஆயுதக் கொள்வனவு மற்றும் இராணுவத்தினருக்கான பொருட்கள் கொள்வனவில் மிகப்பெரும் ஊழல் மோசடியில் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டிருந்தார் எனப் பரவலாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. 'நீலப்படை' என அறியப்பட்ட மகிந்த ராஜபக்சவின் கொலைக் கும்பலை திரைமறைவில் வழிநடத்துபவரும் இவரே.
மகிந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அவர்களுக்கெதிரான நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளை கோத்தபாயவே ஒழுங்குசெய்திருக்கிறார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்தவினது படுகொலை முதல் அண்மையில் இடம்பெற்ற லங்கா ஈ-நியூஸ் இணையத்தின் ஆசிரியர் கடத்தப்பட்டது வரை அனைத்து வகையான சட்டவிரோதச் செயலர்களும் கோத்தபாயவின் மேற்பார்வையிலேயே அரங்கேறியிருக்கிறது.
நாமல் ராஜபக்ச
அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ச தனது 24ஆவது வயதில் நாடாளுமன்றில் நுழைந்திருக்கிறார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட நாமல், தனது பெரிய தந்தையான சமல் ராஜபக்சவினையும் விட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பது இங்கு குறிப்படத்தக்கது.
இவ்வாறாக அதிகாரத்தின் மீதான ராஜபக்சக்களின் பிடி இறுகிச் செல்கிறது. ஆயிரக்கணக்கான சிறுபான்மைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் அவர்களது சொத்துக்கள் எல்லாம் அழிந்துபோவதற்கும் காரணமாக இருந்த ராஜபக்ச குடும்பத்தினால் தமிழர்கள் தொடர்ந்தும் சீரழியப் போகிறார்கள்.
அபிவிருத்தி என்ற பெயரில் வடக்குக் கிழக்கின் வளங்கள் அனைத்தும் சுரண்டப்படுகின்றன.
ஈழநேஷன்.



0 Responses to சிறிலங்காவின் அரசியலில் "ராஜபக்சக்கள்"