Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் கால்நடைகளை இராணுவத்தினர் தமது பால் தேவைக்காகப் பிடித்து கட்டுவதைக் கைவிட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் வன்னிப்பிரதேச ஆயுதப்படைகளின் தளபதியிடமும் முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் வன்னிப்பிரதேசத்தில் உள்ள குளங்களில் வளரும் நன்னீர் மீன்வகைகளை வெளிமாவட்டத்தினர் பிடித்துச் செல்வதற்கு இராணுவத்தினரால் அளிக்கப்பட்டுள்ள அனுமதியையும் இரத்துச் செய்து உள்ளுர் நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு அந்த அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னிமக்களின் வாழ்வாதாரங்களில் பிரதான இடம்பிடிப்பவை விவசாயம் கடற்றொழில் கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழில்களாகும். ஏற்கனவே இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தங்கள் வசம் எஞ்சியிருக்கின்ற கால்நடைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கைச் செலவை ஓரளவிற்காவது சமாளிப்பதற்காகப் பெருமுயற்சி செய்து வருகின்றனர். இப்பொழுது அதற்கும் வழியில்லாத நிலை தோன்றியுள்ளது.

அடையாளக் குறிகளுடன் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளைப் படையினர் தமது இராணுவ வண்டியில் வந்து ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்ட மாடுகளை ஒட்டிசுட்டான் - முல்லைத்தீவு சாலையில் ஒட்டிசுட்டானிலிருந்து சுமார் 600மீ தொலைவிலுள்ள கமநல சேவைகள் திணைக்களத்தின் பின்புறமுள்ள ஒரு இடத்தில் பண்ணை அமைத்து அதில் கொண்டுபோய் கட்டுகின்றனர்.

24 ஆம் திகதி காலையிலும் கூட சுமார் 7.30மணியளவில் ஒரு வீட்டில் கட்டியிருந்த மூன்று எருமைமாடுகளை இராணுவத்தினர் சீருடையில் வந்து அவிழ்த்துச் சென்றுள்ளனர். ஏன் இப்படிச் செய்கின்றீர்கள் என்று உரிமையாளர் கேட்டதற்குத் தங்களது பண்ணைக்கு வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

இராணுவத்தினரின் பால்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காககவே இவ்வாறு மாடுகள் கபளீகரம் செய்யப்படுவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிலர் தமது மாடுகளை அடையாளம் காட்டி விட்டுவிடுங்கள் என்று கேட்டதற்கு முறையாகப் பதில் அளிக்காமல் படையினர் உடனடியாக அந்த மாடுகளை வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு பலமாடுகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

அடுத்ததாக வன்னி நிலப்பரப்பில் ஏராளமான குளங்கள் உள்ளன. இக்குளங்களில் நன்னீர் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன. வன்னி மக்களின் உணவில் நன்னீர் மீனும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. இராணுவத்தினர் இந்த மீன்களைப் பிடிப்பதற்கென்றே வெளிமாவட்டங்களிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே இங்குள்ள குளங்களில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக் குளங்களுக்குச் சொந்தமான அந்த கிராமவாசிகள் தமது தேவைக்குக்கூட மீன்களைப் பிடிக்க முடியாதுள்ளதுடன் சிங்களர்கள் பிடிக்கும் மீன்களைக்கூட இவர்கள் வாங்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. அவர்கள் பிடிக்கும் மீன்கள் முழுவதும் தென்பகுதிகளுக்குக் குளிரூட்டிய வாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனைப்போன்றே நந்திக்கடல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளில் கடலில் இறால் பிடிப்பதற்குத் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் கைவிட்டுச் சென்ற பொருட்களை இவர்கள் எடுத்துச் செல்கின்றனர் என்று காரணம் சொல்லி கடல்மீன்பிடித் தொழிலையும் இப்பொழுது இல்லாமல் செய்துவிட்டனர்.

ஏற்கனவே போர் அவலத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து எமது மக்கள் இடம் பெயர்ந்து ஏதுமற்றவர்களாக அங்கும் இங்கும் அலைக்கழிந்து இவர்களில் ஒருபகுதியினர் ஒருவாறாக தமது இடங்களுக்குச் சென்று தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கிக்கொள்ளலாம் என நினைத்திருக்கையில் இவ்வாறான இடையூறுகள் அவர்களை மேலும் சலிப்படையச் செய்துள்ளன.

எமது மக்கள் விட்டுச் சென்ற வீடுகளில் இருந்து ஏராளமான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன அவர்களின் வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் கால்நடைகளும் இப்பொழுது படையினரால் கபளீகரம் செய்யப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் நல்லதொரு முடிவினைப் பெற்றுத்தருமாறு எமது மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வன்னிமாவட்ட கட்டளைத்தளபதிக்கும் முறையிட்டு நடவடிக்கை எடுக்கும்படிக் கோரியுள்ளேன்.

0 Responses to வன்னியில் ராணுவத்தினர் பொதுமக்களின் கால்நடைகளைப் பிடிப்பதைக் கைவிட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com