இந்த நிகழ்வில் மாமனிதர் சிவராமின் பத்திரிகைத்துறை வாழ்வுக்காலமும், பத்திரிகைத்துறைக்கு அன்னார் ஆற்றிய அளப்பரிய சேவைக்களும் அவரது நண்பர்களினாலும், நலன்விரும்பிகளினாலும் நினனவு கூரப்பட்டன.
சிவராமின் சகோதரர் தர்மரட்ணம் சூரியகுமார், கரோலினா தெற்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் மார்க் விட்டேக்கர், பிரபல மனித உரிமை சட்டத்தரணி லீ கரு, 'தமிழ் கார்டியன்' ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை மற்றும் முன்னாள் பி.பி.சி தமிழோசை தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் ஆகியோர் ஈகச்சுடரேற்றியதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழ்மக்களுக்கு எதிராகவும், அவர்களது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும், இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்த முன்னெடுப்பு பொய்ப்பிரசாரத்தினை உள்ளூரிலும், சர்வதேச ரீதியாகவும் மிகவும் துணிச்சலோடு எதிர்கொண்டு, உண்மைநிலையை தனது ஊடகத்துறை ஆற்றல்மூலம் உலகறியச் செய்தவர் தராகி.
துப்பாக்கி ரவைகளினால் சல்லடையிடப்பட்ட தராகியின் வெற்றுடல், இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் நாடாளுமன்றத்தில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அன்னாரது ஊடகத்துறை சகா ஒருவரினால் அடையாளம் காணப்பட்டது.
இன்று, சுமார் ஐந்துவருடங்கள் கழிந்த நிலையிலும், தராகியைக் கொன்றவர்கள் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என்பதுமட்டுமல்ல, கொலைகாரர்களை நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவுமில்லை.
சிவராமினுடைய படுகொலை என்பது இலங்கையின் ஊடகத்துறைமீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் மிகவும் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. அவரது கொலையின் பின்னர்கூட பல பத்திரிகையாளர்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், கடத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்பட்டுவருகிறார்கள்.










0 Responses to லண்டனில் அனுட்டிக்கப்பட்ட சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் (படங்கள் இணைப்பு)