புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது மே 12 முதல் 18 வரை வலி சுமந்த வாரம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் 1முதல் 18 வரை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பேர் ஈவு இரக்கமற்ற வகையில் கொத்து குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் நாள் முக்கிய தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து 18 ஆம் தேதி வரை ஒவ்வொரு நகரிலும் மாலை 1 மணி நேரம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும் இது குறித்து தமிழ் ஆர்வலர்களுக்கு கடிதம் எழுதுவேன்.
மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய தமிழகத்தில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து தனி தனியாக போராடி வருகிறார்கள் அவ்வாறு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தான் மலேசியாவில் அவதிபடும் தமிழர்களை காப்பற்ற முடியும். இதற்காக தமிழ் தலைவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதப் போகிறேன்.
2010 பிப்ரவரி மாதம் 6,7 தேதிகளில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக கோலாம்பூரில் நடந்த உலக தமிழர் பாதுகாப்பு எழுச்சி முகாம் ஆலோசணைக் கூட்டத்தில் உலக தமிழர் பாதுகாப்பு செயலகம் முறைப்படி அமைக்கப்பட்டது.
உலக தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் நோக்கம் உலக தமிழர்களை தமிழர்களாக ஒருங்கிணைப்பு செய்வது. ஈழத்தமிழர் பிரச்சனை உட்பட தமிழர்களுடைய சமூக, பொருளாதர சிக்கல்கள் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்காக மக்கள் இயக்கம் நடத்துவது, சட்ட தீர்வுக்கான வேலை செய்வதும், 2011 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலத்தில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட உயர்மட்ட குழு 30 பேர் கொண்ட துணைக்குழு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.



0 Responses to மே 12 முதல் 18 வரை வலி சுமந்த வாரம் அனுசரிப்பு: புதிய தமிழகம் கட்சி அறிவிப்பு