மே 18, தமிழர்களால் மறக்க முடியாத பேரவலநாள்!ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று, கோரமாக... கொடூரமாக... கொன்று குவிக்கப்பட்ட நாள்!
எட்டுக்கோடி உலகத் தமிழர்களும் வெட்கித் தலை குனிந்த நாள்!
கடந்த வருடத்தில், நீதி அற்று, ஈழத் தமிழர்கள்மேல் நிகழ்த்தப்பட்ட அந்த மனிதப் பேரவலத்தை கோபத்துடன் உலகம் முழுவதும் பதிவு செய்வோம் வாருங்கள்... என்று எல்லைகளற்ற தமிழ் ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகத் தமிழர்களே!
உண்மை மனிதர்களே!
உங்கள் இதயத்தை ஒரே ஒரு வாரம் ஈழத் தமிழர்களுக்காகத் திறந்து வையுங்கள்.
சிங்கள தேசம் நடாத்தி முடித்த நெருப்புக் குளியலில் தப்பிப் பிழைத்தவர்கள் அடக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, முகாம்களுக்குள்ளும், வீதிகளிலும் வெறித்துப் பார்த்தபடி உள்ளார்கள். அவர்கள் தமிழர்களாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தப் பாவமும் புரிந்ததில்லை.
சிங்களம் நிகழ்த்திய இன வன்முறை அவர்களைக் கோபம் கொள்ள வைத்தது. இந்தியா வழங்கிய ஆயுதங்கள் அவர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கியது. காலம் அவர்களைக் குற்றவாளிகள் ஆக்கிறது. அவர்கள், கேட்பாரே இல்லாமல் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முள்ளிவாய்க்கால் கடற்கரைவரையும் நகர்ந்து வந்தவர்கள் அங்கேயே புதைந்து போனார்கள்.
தப்பிப் பிழைத்தவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள். சிங்களப் படையினரின் சந்தேகத்திற்குள்ளானவர்கள் அங்கிருந்து கடத்தப்பட்டு, அழிக்கப்பட்டார்கள். பாடசாலைகளை நிறைக்கவேண்டிய ஈழத்துப் பிள்ளைகள் சிங்களத்துச் சிறைக்கூடங்களை நிறைத்துள்ளார்கள்.
தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு வாழ்வு மறுக்கப்பட்டது...
வாழும் உரிமை மறுக்கப்பட்டது...
பேசும் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டது...
அவர்கள் மௌனமாக அழுகிறார்கள்.
அவர்களை மீட்கும் வழி தெரியாவிட்டாலும்...
அவர்களுக்காக எங்கள் கரங்களை நீட்டுவோம்!
அவர்களது கண்ணீரைத் துடைத்து விடுவோம்!
வாருங்கள் எம் உறவுகளே!
அந்தப் பாவப்பட்ட மனிதர்களுக்கான எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம்!
நாளைய வரலாறு நம்மை வாழ்த்தட்டும்...
எங்கள் ஈழத்து உறவுகளுக்காக நாமும் போராடினோம் என்று!
எதிர்வரும் 12 மே 2010 புதன்கிழமை முதல், 18 மே 2010 செவ்வாய்க்கிழமை வரை சென்ற வருடத்து மனிதப் பேரவலங்களை நினைவு கூருவோம். அந்த மண்ணில் புதைந்து போன... எரிந்து போன... அந்த மக்களுக்காக அஞ்சலிப்போம்!
வாருங்கள்...
உலகத் தமிழர்களே வாருங்கள்...
உண்மை மனிதர்களே வாருங்கள்...
நாடு, இனம், மதம் என்ற எமது அடையாளங்கள் அனைத்தையும் துறந்து...
மனிதர்களாக, தமிழர்களாக ஈழத் தமிழர்களுக்காக அணி வகுப்போம்!
அந்த ஒரு வார காலத்தை கறுப்பு நாட்களாக நினைவு கூருவோம்!
கறுப்பு ஆடைக்ள் அணிவோம்!
கறுப்புப் பட்டிகள் தரிப்போம்!
கறுப்புக் கொடிகள் ஏற்றுவோம்!
எங்கள் கவலைகளையும், கோபங்களையும் உலகம் முழுவதும் பதிவு செய்வோம்!



0 Responses to மே 18 பேரவலத்தை நினைவு கூரும் கறுப்பு வாரம்: உலகத் தமிழர்களிடம் எ.த.ஊடக அமைப்பு வேண்டுகோள்!