பிரித்தானிய தமிழ் மக்கள் இந்த வாரத்தினுள் இரு முக்கிய தேர்தல்களை சந்திக்கின்றார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல்:
நாடு கடந்த தமிழீழ அரசிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறுகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவையும் புலம் பெயர் தேசங்களில் சனநாயக முறையிலும் இராசதந்திர முறையிலும் பற்றுறுதியுடன் முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்,
இந்த பணியில் நாடுகடந்த அரசும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற வகையில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கேற்று மக்கள் தாம் விரும்பும் தகுதியான வேட்பாளரை தெரிவு செய்யவேண்டுமென பேரவை கேட்டுக் கொள்கின்றது.
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல்:
பிரித்தானிய அரசியலில் அண்மைக்காலமாக தமிழர்கள் சார்பான கொள்கைகளில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.
பிரித்தானியாவின் பெரும் கட்சிகளின் தலைவர்கள் உலகத் தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண வைபவத்தில் தோன்றியமையும், பல பாராளுமன்ற விவாதங்களை நிகழ்த்தி ஈழ விவகாரத்தை ஆராய்ந்தமையும், பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றது.
இவ்வாறான நிகழ்வுகளின் பின்னால் தமிழ் மக்களின் நண்பர்கள் பாராளுமன்றத்தில் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள். பிரித்தானிய ஆட்சியாளர்களின் மனத்தினை முழுமையாக வெல்வதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு எமது நண்பர்கள் பாராளுமன்றம் செல்லவேண்டும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
பேரவை கட்சி சார்பின்றி அனைத்து கட்சிகளோடும் இணைந்து பணியாற்றுகின்றது. அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் எமது நண்பர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாவது எமக்கு மிகப்பெரும் பலத்தினை சேர்க்கும். ஆகவே இதுவரை காலமும் எமக்காக குரல் கொடுத்த, எமக்காக இதய சுத்தியோடு உழைத்த அனைவரும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
அத்தோடு தமிழ் மக்களுக்காக உழைக்க திடசங்கல்ப்பம் பூண்டுள்ள புதிய நண்பர்கள் பலர் இப்பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றனர். இவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினால் பிரித்தானிய அரசியலில் தமிழர் சார்பான மேலும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.
நாம் எப்படி தேர்தலில் உதவ முடியும்?
இத்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து எமது நண்பர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளுமாறு பேரவை கேட்டுக் கொள்கின்றது.
அத்தோடு எமது மக்களின் நண்பர்களின் தேர்தல் பிரச்சாரப் பணியில், பேரவையின் அரசியல் பரப்புரை பிரிவின் ஒருங்கிணைப்பில் பேரவையின் அங்கத்தவர்கள் பெருமளவில் பங்கெடுத்து வருகின்றனர். இறுதி நேரப் பிரச்சாரப் பணியில் பெருமளவிலான உதவியினை வேட்பாளர்கள் நாடி நிற்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் இப்பணியில் இணைந்து கொள்ளுமாறு பேரவை கேட்டுக் கொள்கின்றது.
தேர்தல் பணிகளில் உங்களை இணைத்துக் கொள்ள பேரவையோடு தொடர்பு கொள்ளவும் : தொலைபேசி இலக்கம்: 0208 808 0465
இவ்வாறு பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to பிரித்தானிய தமிழர்கள் எதிர்கொள்ளும் தேர்தல்கள் - பிரித்தானியத் தமிழர் பேரவை