சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படுமாயின், நாட்டின் படைகளை வழிநடத்திய தளபதி என்றவகையில் தான் சாட்சியமளிக்க தயார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் - இறுதி நேர போர் குறித்து பல தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுமாயின், நான் நிச்சயம் வந்து சாட்சியமளிக்க தயார். இது விடயத்தில் உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவர் குறித்தும் தயவு தாட்சணியம் பார்க்கப்போவதில்லை.
தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தேசத்துக்கு துரோகமிழைத்த செயலாகாது என்று கூறியுள்ளார்.
தான் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் தற்போதெல்லாம் நன்கு ஓய்வெடுப்பதாகவும் இராணுவத்திருக்கும்போது மூன்று மணி நேரமே உறங்கும் தான் தற்போது எட்டு மணி நேரம் தூங்குவதாகவும் தடுப்புக்காவலில் தான் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதாகவும் தனது எடையும் கணிசமானளவு குறைந்துள்ளதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.



0 Responses to போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தயார்: பொன்சேகா தெரிவிப்பு