வரும் யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு கனடியத் தமிழ் மக்களும் தயாராகி வருகின்றனர்.தேர்தல் நாளன்றான தேர்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் தேர்தல் ஆணையமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அலுவலகர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
தேர்தல் வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடி அலுவலர்கர்களுக்கான பயிற்சிகள், வாக்குச் சாவடி ஒழுங்கமைப்புகள், மக்களுக்கான அறுவுறுத்தல்களை வழங்குவதற்கான வழிமுறைகள் என பல செயற்பாடுகளில் அவர்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
வட்டுக்கோட்டை மக்கள் வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்தி தேர்ந்த அனுபவமுள்ள தேர்தல் ஆணையமாக மாறியுள்ள தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு இம்முறை செலவீனத்தைக் குறைத்து மேலதிக வாக்குச்சாவடிகளுடன் இத்தேர்தலையும் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் ஒருங்கமைத்து வருவதாக அதன் முதன்மை அலுவலகர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை கனடியத் தமிழர் தேசிய அவை தேர்தலுக்கான செயற்குழு உறுப்பினர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் குறித்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர். கனடிய தமிழர் தேசிய அவை யாப்பிற்கு அமைய குறைந்த பட்சம் 20 சதவீத பெண்கள் மற்றும் இளையோர் பிரிதிநிதித்துவம் அமைய வேண்டும் என அமைய தற்போது 30 சதவீதத்றிகு மேற்பட்ட பெண்கள், இளையோர் தெரிவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது குறித்து அவர்கள் பெரு மகிழ்ச்சி வெளியிட்டனர்.
பெண்கள், இளையோரை முதன்மையாகக் கொண்டு மாற்றம் பெற்ற தமிழர் போராட்டத்தின் தொடர்ச்சியாக கனடியத் தமிழர் தேசிய அவையும் அமைவது மனநிறைவு தருவதாக செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் மூன்று மட்டங்களில் தேசிய, மாகாண, பிராந்திய மட்டங்களில் உறுப்பினர்கள் தெரிவாவது இச்சபை மக்கள் மயப்பட்ட சபையாகவும், மக்கள் தேவைகளை சரியாக கண்டறிந்து செயற்படும் சபையாகவும் இயங்குவதை உறுதிப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
51 வேட்பாளர்கள் அனைத்து மட்டங்களிற்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை மேலும் மகிழ்ச்சி தருகின்றது என்றார்.
குறுகிய காலத்தில் தேசிய சபை குறித்த முழுமையான விபரங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் உள்ள சவால்களை பலர் கோடிட்டுக்காட்டிய அதேவேளை, வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கும் தமிழினத்தின் ஒற்றுமையையும் செயற்பாட்டு வடிவங்களையும் முடக்கிவிட சிங்கள் பேரினவாத அரசு பெரு பணபலம் கொண்டு முனைந்து நின்றாலும், அதனையும் கடந்து ஒற்றுமையாகவும், ஓர்மத்துடனும் நகரும் வேட்கை கனடியத் தமிழ் மக்களிடன் உண்டு எனவும் யூன் 20ஆம் நாள் வரலாறாக கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலில் பங்குபற்றி எழுந்தோம் என்பதை கனடியத் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்துவர் என கனடியத் தமிழ் சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்தனர்.



0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலுக்கு தயாராகும் கனடியத் தமிழ் மக்கள்