இவ்வாறு சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும்வகையில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார் ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் முன்னாள் பிரதிநிதியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜெயதிலக்க.
அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சிறிலங்காவுக்கு எதிரான மேற்குலகின் அழுத்தத்தையும் தமிழகத்தின் அழுத்தத்தையும் தடுத்து நிறுத்தும் அணையாக இருந்துகொண்டிருப்பது இந்தியா ஆகும். அந்த கடமையிலிருந்து இந்தியா விலகுமாயின் அணிநேரா நாடுகள்கூட சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை. ஆகவே, இந்தியாவை சிறிலங்கா தன்பக்கம் வைத்துக்கொள்வதற்கு தன்னாலியன்ற அனைத்தையும் செய்யவேண்டும்.
சீனாவின் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இந்தியாவை பகைத்துக்கொள்வதற்கு சிறிலங்கா முயற்சிக்குமாயின் சிறிலங்கா வரலாற்றுப்பிழையை மீண்டும் இழைக்கிறது என்ற அர்த்தம். 1980 களில் அமெரிக்காவுடன் நட்புபாராட்டி இந்தியாவை பகைத்துக்கொண்டது ஜே.ஆர். அரசு. அது எப்படிப்பட்ட வரலாற்றுத்தவறு என்பது பின்னர் இடம்பெற்ற சம்பவங்களே ஆதாரங்களாக கூறும். அதேபோன்று தற்போது சீனாவுக்காக இந்தியாவை பகைத்துக்கொண்டால் சிறிலங்கா மீண்டும் அந்த தவறை இழைக்கிறது என்று அர்த்தமாகும்.
சீனாவை தூரத்தில் வைத்து உதவியை பெற்றுக்கொள்ளும் நாடாக மட்டும் பேணிக்கொண்டால் சிறிலங்காவுக்கு அது சால சிறந்ததாக அமையும். அந்த நாட்டினால் சிறிலங்காவுக்கு சிக்கலான நேரத்தில் உதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கமுடியாது. சூடானுக்கு ஆதரவான நாடுதான் சீனா. ஆனால், சூடானுக்கு எதிரானபோர்க்குற்ற வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அது தொடர்பில் சீனா எந்த எதிர்ப்பினையும் காண்பிக்கவில்லை. இதேநிலைப்பாட்டை, எதிர்காலத்தில் சிறிலங்காவுடன் சீனா கைக்கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
சிறிலங்கா அரசை பொறுத்தவரை அது இன்று, ஈராக் போருக்கு பின்னர் புஷ் அரசு நடந்துகொண்டது போலவே தனது கொள்கைகளுடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது, நேர் சீரான போருக்கு பிந்திய திட்ட முகாமைத்துவம் சிறிலங்காவிடம் இல்லை. போர் முடிவடைந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில், இன்று சிறிலங்கா மதிப்புடன் தன்னை உலக அரங்கில் நிலைப்படுத்திக்கொண்டிருக்கவேண்டிய இடத்தில் அது இல்லை. எல்லோருமே சிறிலங்காவை கைவிட்ட இடத்திலேயே சிறிலங்கா இன்று காணப்படுகிறது.
சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றம் என்ற விடயம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகையில், சிறிலங்காவுக்கு ஆதரவாக பேசுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்று போரிட்ட தரப்புக்கள்கூட தயாராக இல்லை. அது ஏன் என்பதை சிறிலங்கா தன்னை தானே ஆத்ம பரிசோதனை செய்யவேண்டும்.
போர் முடிந்த கையோடு, இந்தியா கூறியதைப்போல 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்ததின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வை வழங்கி சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று உலக நாடுகள் எதுவும் சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவைத்து கேள்வி கேட்டிருக்காது. அப்படிக்கேட்டிருந்தாலும், சிறிலங்கா அரசு தரப்பில் வாதம் செய்வதற்காவது விடயம் இருந்திருக்கும்.
அதனை இனியாவது மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரச தயாராகவேண்டும். இல்லையேல், ஒவ்வொரு செக்கனும் சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் வலையினுள் சிறிலங்கா அரசு விழ நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to சிறிலங்கா இனப்பிரச்சினைக்கு மலிவு விலையில் தீர்வு காண வழி என்ன?