Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களால் சிறீலங்காவில் நிர்வகிக்கப்படும் அசையும், மற்றும் அசையாத சொத்துக்களை விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் என தெரிவித்து கையகப்படுத்திக் கொள்ள சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசு வெளிநாடுகளின் உள்ள தமிழ் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து சிங்கள மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் படியாக கனடாவில் வாழும் தமிழ் மக்களால் கொழும்பில் வாங்கிவிடப்பட்ட 20 இற்கு மேற்பட்ட தொடர்மாடி வீடுகளை கையகப்படுத்தும் பணிகளை சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், நகராட்சி அதிகாரசபையும் இணைந்து மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள தமிழ் மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவரும் இந்த வீடுகள் விடுதலைப்புலிகளின் வீடுகள் என சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கொழும்பு நகராட்சி சபைக்கு தெரிவித்துள்ளது.

இந்த வீடுகளை வைத்திருக்கும் தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாக தாம் வலுவாக நம்புவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொழும்பில் உள்ள தமிழ் மக்களின் சொத்துக்கள் தொடர்பாக விபரங்களை நகராட்சி சபையிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சு தன்வசப்படுத்தியுள்ளது.

மேலும் நகராட்சி சபையின் அனுமதிகளை பெறாது 40 இற்கு மேற்பட்ட தொடர்மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றையும் தன்வசப்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகின்றது. இந்த வீடுகளில் பெரும்பாலானவை தமிழ் மக்களுக்கு சொந்தமானவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் சிறீலங்கா வங்கிகளில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளின் விபரங்களையும், அதில் உள்ள நிதி தொடர்பான விபரங்களையும் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றையும் விடுதலைப்புலிகளின் பணம் என தெரிவித்து கையகப்படுத்த சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள தமது வங்கி கணக்குகளை அதிகளவில் தமிழ் மக்கள் மூடிவருவதுடன், தமது கணக்குகளில் உள்ள பணங்களை மீண்டும் தாம் வாழும் நாட்டுக்கு கொண்டுவரவும் அவர்கள் முயற்சிப்பதாக பிரித்தானியாவின் ரூட்டிங் பகுதியை சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது சொத்துக்களை தான் விற்பனை செய்துள்ளதாகவும், அங்குள்ள வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்தை கடந்த மாதமே தான் மீளப்பெற்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்ற போது தமிழ் மக்களையும், வர்த்தகர்களையும் கடத்தி பெருமளவான நிதியை கப்பமாக பெற்ற அரச தரப்பு அதனை கொண்டு போரை நடத்தி வந்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகமே மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to புலம்பெயர்ந்த தமிழர்களின் சொத்துக்களை அபகரிக்க சிறீலங்கா திட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com