யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி படை வீரர்களை கௌரவப்படுத்தவும் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவுமே இந்த வரவு செலவுத்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாறாக நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவிதமான திட்டங்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்குகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
கடந்த 29ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
ஒரு வரவு செலவு திட்டமானது கடந்தகால நிகழ்கால எதிர்கால விடயங்களை கவனத்தில் எடுக்கவேண்டும் ஆனால் இங்கே நிகழ்காலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு தயரிக்கப்பட்ட அதாவது சர்வதேச நாடுகளை சமாளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது.
மேலும் இந்த வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட படை வீரர்களுக்கான உதவித்திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட அல்லது உயிரிழந்த மற்றும் காணாமல்போன தமிழ் மக்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் எந்தவிதமான ஒரு உதவித்திட்டங்களும் இங்கு பரிந்துரைக்கப்படவில்லை. இது வேதனைக்குரிய விடயமாகும்.
அத்துடன் விவசாயிகளுக்கு எந்தவிதமான ஊக்குவிப்பு திட்டங்களும் இங்கு இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாண விவசாயிகள் தங்களது நெல் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் பெரிதும் கஸ்டப்படுகிறார்கள்.
இந்த நிலையில் தங்களது உற்பத்திகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வும் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கான திட்டங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
எனவே இந்த வரவு செலவு திட்டமானது ஒரு குறைமாத பிரசவம் போன்றது ஏனெனில் குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் சில வேளைகளில் தாய் இறக்கவேண்டிய நிலை ஏற்படும் இந்த நிலையில்தான் இந்த வரவு செலவு திட்டமானது அமைந்துள்ளது.
மொத்தத்தில் யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி படை வீரர்களை கௌரவப்படுத்தவும் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவுமே இந்த வரவு செலவுத்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாறாக நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவிதமான திட்டங்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை.
கௌரவ ஜனாதிபதி அவர்கள் சொல்வதைப் போன்று "இனப்பிரச்சினைக்கான தீர்வானது உடன் தயாரிக்கும் நூடில்ஸ்சை போன்றதாகாது" இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அறுபது வருடங்களாக நாம் நூடில்ஸ் தயாரிக்கிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார்.
அடுத்ததாக கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்துவதாலோ அல்லது பாசிக்குடாவில் நட்சத்திர விடுதி அமைப்பதாலோ யாழ்ப்பாணத்தில் உள்ள நாக விகாரைக்கு சென்று வருவதாலோ நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக பொருள்படாது.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான எந்தத் திட்டமும் இல்லை