சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தற்போது முன்வைக்கின்ற நிலையில் யுத்த நடவடிக்கை தொடர்பாக எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமே இல்லை என்று ஜனாதிபதி கூறினார். பிலிப்பைன்ஸ் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
30 வருடங்களாக இலங்கையில் நிலவி வந்த கொடூர யுத்தத்தை நாம் வெறும் மூன்று வருடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தோம். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த ஒரு நாடாக இலங்கையை உலக நாடுகள் பார்ப்பதை நான் விரும்புகிறேன்.
யுத்தப் பகுதிகளில் சமாதானம் காணப்படாததால் அப்பகுதிகளில் அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்தன. மக்கள் அபிவிருத்திக்காக ஏங்கித் தவித்தனர். அப்பகுதி மக்கள் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தமையால் அரச படையினர் அவர்களின் பகுதிகளில் நிலைகொண்டிருக்க வேண்டுமென அம்மக்கள் விரும்பினர். மக்கள் கடும் துன்பத்தை அனுபவித் துக்கொண்டிருந்தனர். அங்கு அபிவிருத்தியும் சமாதானமும் அறவே இருக்க வில்லை. அந்தக் காலப்பகுதியில் படையினரின் மனவலிமை குன்றியிருந்தது.
அதிகமான படையினரிடம் ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் காலணிகள் போன்றவை இல்லாமல் இருந்தன.
நாம் அந்தப் படையினருக்குப் பொருத்தமான வகையில் ஆயுதங்களை வழங்கி அவர்களின் அனைத்து நலன்களிலும் அக்கறை செலுத்தினோம். கொல்லப்பட்ட படையினரின் சம்பளங்களை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி அந்தக் குடும்பங்களையும் நாம் கவனித்தோம்.
கடற்படையைப் பலமானதாகக் கட்டியெழுப்பினோம். "சிறிய படகுகள்' கருத்திட்டத்தைப் பயன்படுத்தினோம். பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட நாம் வெளிநாட்டுப் படையினருக்கு அனுமதி வழங்கியிருந்தால், அவர்கள் நாட்டை ஆக்கிரமிப்பர் என்று மக்கள் நினைத்திருப்பர்.
வடக்கு கிழக்கு மக்களும் எமது மக்களே. அவர்கள் வெளிநாட்டவர்கள் அல்லர். இந்த மக்களைக் கொல்லவேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை.
யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு கோரி நாம் புலிகளுக்கு விமானங்களில் இருந்து துண்டுப்பிரசுரங்களைப் போட்டோம். எமது செய்தியைப் புலிகளும், மக்களும் அறியக்கூடியவாறு நாம் சிறிய வானொலிகளையும் அவர்களுக்கு வழங்கினோம்.
அரச படையினர் யுத்த காலத்தில் ஒரு கையில் ஆயுதத்தையும், மறுகையில் மனித உரிமை சாசனத்தையும் ஏந்தியவாறே புலிகளுடன் யுத்தம் செய்தனர். அவர்கள் அப்பாவி மக்களுக்கு எதுவித சேதங்களையும் விளைவிக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தை நாம் கைப்பற்றியவுடன் அங்கு தேர்தலை நடத்தினோம். அவ்வாறு நடத்த வேண்டாம் என்று சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் இருந்தபோதிலும் நாம் தேர்தலை நடத்தினோம்.
நாம் கிழக்கில் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கிழக்கில் இருந்து வடக்குக்குப் படையினர் நகர்ந்தபோது வடக்கு மக்களின் மனங்களைப் படையினரால் இலகுவாக வெல்ல முடிந்தது. அரசு கிழக்கில் மேற்கொண்டிருந்த பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.
எமது படையினர் ஒரு கையில் ஆயுதங்களையும் மறுகையில் மனித உரிமை சாசனத்தையும் ஏந்திக்கொண்டே யுத்தம் செய்தனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்மிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எமது படையினர் அவ்வாறான குற்றங்களில் ஈடுபடவில்லை.
பொதுமக்களுக்கு எதுவித சேதங்களையும் ஏற்படுத்தக்கூடாது என்று நாம் எமது படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். ஆனால், அந்த நிலையில் மக்களுடன் மக்களாக மறைந்திருந்த பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது கஷ்டமாக இருந்தது.
30 வருட யுத்தம் இப்போது முடிந்துவிட்டது.
அந்த 30 வருட பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அதைத் தீர்க்கும் வேலைத்திட்டம் தொடர்கிறது. அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை.
யுத்தத்தின் காயங்களை ஆற்றுவதற்காக நாம் இப்போது தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளோம். இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப்பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். என்றார்.



0 Responses to தங்களது படையினர் ஒரு கையில் துப்பாக்கியுடனும் மறுகையில் மனித உரிமை சாசனத்துடனும் போரிட்டவர்கள்: மகிந்த