Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கி அங்கு சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கு வசதியாக அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் சிறிலங்கா அரசு, சொந்த இடங்களில் தமிழ் மக்களை மீளக்குடிமர்த்துவதற்கு மட்டும் நிதி இல்லை என்று கூறுகிறது. தமிழக அரசு இந்தியாவின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்கவேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சம்பந்தன், சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் இன்று சென்னையில், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அவர்கள் பேசினார்கள். பின்னர் சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல்வர் கருணாநிதியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியிருக்கிறோம். ஏற்கனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அரசியல் தீர்வு ஏற்படும் என்று 2006 இல் பாரத பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் இதுவரையில் அது இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும், அவர்கள் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இலங்கையில் உள்ள நமது மக்களைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், இன்னும் அவரவர் பகுதிகளுக்கு குடியேற்றப்படாமல் இருக்கிறார்கள். அந்தப்பகுதிகளில் எல்லாம் இன்னும் புனரமைப் புப்பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாக இந்திய அரசாங்கம் நிதியுதவி செய்திருக்கிறது. அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனால், வெளியேற்றப்பட்ட நமது மக்கள், ஒரு வருட காலமாகியும் இன்னும் அவரவர் பகுதிகளில் பழைய வாழ்க்கையை ஆரம்பிக்க இயலாத சூழ்நிலையே உள்ளது. ஆனால், வடக்கு கிழக்குப்பிரதேசத்திலும், வன்னி பிரதேசத்திலும் பெரும்பாலான இடங்களை ராணுவ மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சிங்களர்களும் குடி அமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், நமது மக்களுக்குத் தேவையான வீடுகளை கட்டித்தருவதில் இன்னும் பணிகள் மெத்தனமாகவே உள்ளது.

ஒருபுறம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மற்றொரு புறம் நமது மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும். எனவே, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசும், தமிழக முதல்வரும் உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் உறுதியாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

எங்களுடைய கருத்துக்களை மிக கவனமாகக் கேட்டுக்கொண்ட, முதல்வர் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தச்சந்திப்பு எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.

கேள்வி: இலங்கைக்கு இந்திய அரசு சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டு மென்ற தமிழக முதல்வரின் கோரிக்கை குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: இந்திராகாந்தி காலத்திலேயே முதல் அமைச்சர் கருணாநிதி இதுபோன்று விசேஷ தூதரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டார். இப்போதும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அது நல்ல கருத்து.

கேள்வி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: 1983 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கொரு முடிவு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

கேள்வி: இந்திய பிரதமர் இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்த வாக்குறுதி குறித்து?

பதில்: ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தீர்வு இன்னும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியல் தீர்வு ஏற்படாத அதே நேரத்தில், தமிழ் பேசும் மக்கள், அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே மீண்டும் குடியேற தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான் மிக முக்கியமான கோரிக்கையாக இப்போது உள்ளது என்றார்.

0 Responses to சிங்களவர்களுக்கு தமிழர் பகுதியில் வீடு கட்டும் சிறிலங்கா தமிழர்களுக்கு உதவ நிதி இல்லையாம்: கருணாநிதியிடம் த.தே.கூட்டமைப்பு முறையீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com