2009ஆம் ஆண்டு பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று ஒன்றரைவருடங்களை தாண்டி நின்றபோதும் அதற்கான சர்வதேச சமூகத்தாலோ, ஐக்கியநாடுகள் சபையினராலோ விசாரணைகளும் ஆரம்பிக்கப்படாத நிலையிருந்து வந்தது ஆனால் தற்போது ஐக்கியநாடுகள் சபையே உத்தியோகபூர்வமாக ஒரு அமைப்பினை உருவாக்கி நேற்றைய தினம் அதற்கான சாட்சியங்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கலாம் என்ற ஓர் ஆறுதல் தகவலை தெரிவித்திருக்கின்றார்கள்.ஆனால் இந்த ஆதாரங்களை வெளியிடுவதன் மூலமாக எமது இழந்த உறவுகளையோ,உடமைகளையோ, இழந்த பூமியையோ நாம் பெற்றுக்கொள்ளப்போவதில்லை இதனூடாக எம் இனத்தின்மீது சிங்களப்பேரினவாதத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைவெறித்தாண்டவத்தையும் இனஅழிப்பு செயற்பாடுகளையும் உலகறியச்செய்வதன் ஊடாக எமது மக்களின் ஆழ்மன அபிலாசைகளையும் அதற்கான ஓர் நிரந்தர முடிவையும் சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற ஓர் ஆறுதலாவது கிடைத்திருக்கின்றது.
இதனை செய்வதற்கு பாதிக்கப்பட்ட சகல தமிழ் மக்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை எமது பிரதிநிதிகளான உங்களிடம் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ளுகின்றோம். எமது பிரதேசத்தில் மீள்குடியமர்வு ஏற்பட்டபின்னரும் சிங்கள இராணுவத்தினரால் இடம் பெறும் விசாரணைகள், கைதுகள், காணாமல் போதல்கள் தொர்ந்த வண்ணமே இருக்கின்றன.
இவ்வாறான ஒரு இக்கட்டான சூழலில் உண்மைகளை வெளியிட முடியாமல் ஒவ்வொரு தமிழரின் குரல்வளைகளும் நெரிக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. இதனை கருத்திலெடுத்து எமது பிரதிநிதிகளான உங்களிடம் நாம் பாரிய பணியினை ஒப்படைக்கின்றோம்.
இந்த சாட்சியங்கள் ஐ.நாவிடம் மார்கழி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தகவல்களை ஈமெயில் வாயிலாகலோ, கடிதங்கள் மூலமாகவோ அனுப்பும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும் என்பதுடன் அதனை சரியான ஒழுங்குமுறையில் மொழியாக்கம் செய்து அனுப்பவேண்டிய பாரிய பொறுப்புமிருப்பதால் வரப்போகின்ற ஒருமாத காலத்திற்காவது உங்களது வெளிநாட்டு பயணங்களையும் கட்சியின் ஏனைய செயற்பாடுகளையும் தவிர்த்து நீங்கள் எல்லோருமாக ஒவ்வொரு பிரதேச ரீதியாக ஒவ்வொருவர் பொறுப்பேற்று எம்மிடம் வாருங்கள், எங்களோடு இருங்கள்.
ஒவ்வொரு தமிழ் மகனும் அனுபவித்த வலிகள், துன்பங்கள், துயரங்களையும் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு ஒரு சரித்திர முக்கியத்துவமான ஓரு வரலாற்று சாட்சியாக எமது பிரதிநிதிகளான உங்கள் மூலமாக ஐ.நா விடம் சமர்ப்பிக்க ஆசைப்படுகின்றோம். அவ் ஆவணம் ஒவ்வொருவர் தனித்தனியாக அனுப்பும் தகவலைவிட ஒரு சாட்சிப்பதிவாக ஒரு தமிழ்மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளிடமிருந்து அனுப்பப்படுவதாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்.
இந்த வரலாற்று கடமையை நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடும் உரிமையோடும் கேட்டு நிற்கின்றோம். இன அழிப்பை ஏற்படுத்திய பேரினவாத அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்னாலேயே துணிச்சலாக சாட்சிசொன்னவர்கள் பெருமளவானோருண்டு ஏனையோர் இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின் அச்சுறுத்தல் காரணமாக சமூகமளிக்கவில்லை என்பதனையும் நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றோம்.
அதைவிட எமது பிரதிநிதிகளான உங்களிடம் அவர்கள் மனம்விட்டு பேசக்கூடிய சாத்தியங்களும் வாய்ப்புக்களும் பெருமளவில் உண்டு அதனை சரியாக பயன்படுத்தி தகவல்களை இரகசியமாக ஆவணப்படுத்தி ஒப்படைக்கும் பாரிய பணியை முன்நின்று செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்போடு இம்மடலை மக்கள் சாட்சியாக ஊடகங்கள் வாயிலாக உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக
வன்னியிலிருந்து சக்கரவர்த்தி
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to எம் அன்பான தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு வன்னியிலிருந்து உரிமை மடல்