Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் நேற்றுக்காலை ஆர்ப்பாட்டம், மத வழிபாடுகள் என்பன நடத்தப்பட்டன.

சட்டத்தரணிகள், மற்றும் ஜே.வி.பி. , ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் இந்த ஆர்ப்பாட்டத்திலும், மத வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள அரச மரத்தடியில் சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி விசேட பூசை இடம்பெற்றது.

பின்னர் அனேமா பொன்சாகாவின் தலைமையில் பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிட்டி விளக்கேற்றினர். பிக்குமார்களின் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டின் பின்னர் தேங்காயில் கற்பூரம் ஏற்றப்பட்டதுடன் தேங்காய்களும் வீதியில் உடைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றன.

பூசை வழிபாடுகளை அடுத்து ஒன்று கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிக்குமார்கள், சட்டத்தரணிகள், ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது

சட்டத்தை தூசிக்காதே,

அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்து,

ஜனநாயகத்தை உறுதி செய்,

சரத் பொன்சேகாவை விடுதலை செய்

போன்ற கோஷசங்கள் எழுப்பப் பட்டன. இத்தகைய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சரத் பொன்சேகா வான் ஒன்றில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் ஆஜர் படுத்தப்படுவதற்காகவே இவரை சிறைக்காவலர்கள் அழைத்து வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் வானை மறித்து சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோஷம் எழுப்பினர்.

நேற்று பிற்பகல் 1மணி 10 நிமிடம் அளவில் நீதிமன்ற சுற்று வட்டத்தை வந்தடைந்த (பொன்சேகா அழைத்து வரப்பட்ட) வான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் மறிக்கப்பட்டது. வானை மறித்த ஆதரவாளர்கள் அதனை நகர அனுமதிக்கவில்லை. வாகனத்தின் ஜன்னலையும் கதவையும் திறக்க பல ஆதரவாளர்கள் முயற்சித்த போதும் அதற்கு சிறைக்காவலர்களும் பொலிஸாரும் இடமளிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர் ஒருவர் வானுக்கு முன்பக்கமாகச் சென்று கைகளை மேலே தூக்கியவாறு வான் மீது சாய்ந்து போராட்டம் நடத்தினார். ஆதரவாளர்களின் போராட்டத்தினால் 10 நிமிடம் வரையில் பொன்சேகா அழைத்து வரப்பட்ட வான் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டே அங்கிருந்து வான் நீதிமன்றம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திலும், மத வழிபாட்டிலும் அனோமா பொன்சேகாவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, கஜந்த கருணாதிலக்க, தயாசிறி ஜயசேகர, ரோசி சேனாநாயக்க, சுஜீவ சேனசிங்க, விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன் நெத்தி, டிரான் அலஸ், கரு ஜயசூரிய, மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com