இலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது.இலங்கை தொடர்பான விடயங்களுக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு அறிவித்துள்ள போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்களை தெரிந்து வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தமக்குத் தெரிந்த உண்மைகளை முறைப்பாடுகளாக ஈமெயில் (panelofexpertsregistry@un.org) மூலமாகத் தெரிவிக்க முடியும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு (panelofexpertsregistry@un.org) ஈமெயில் மூலமாகத் தகவல்களைத் தெரிவிக்கும் நபர்கள் தங்களைத் தொடர்புகொள்ளக் கூடிய அனைத்து விபரங்களையும் அந்த ஈமெயில் மூலமாக (panelofexpertsregistry@un.org) நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிபுணர் குழுவானது அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சூக் தருஸ்மான் தலைமைப் பொறுப்பை வகிப்பதுடன், அமெரிக்க சட்டத்தரணியான ஸ்டீவன் ரட்னர், தென்னாபிரிக்காவின் முன்னை நாள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
panelofexpertsregistry@un.org
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு