வவுனியா சிறைச்சாலையில் இருந்து மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைக்காக அழைத்துவரப்பட்டு மீண்டும் வவுனியா கொண்டு செல்லப்பட்ட 06 கைதிகளில் 02 கைதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு அருகாமையில் வைத்து இரவு(15-12-10) தப்பிச்சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 06 கைதிகள் விசாரணைக்காக நேற்று (14-12-10) வவுனியா சிறைச்சாலையில் இருந்து மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின் குறித்த 06 சந்தேக நபர்கள் தொடா்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, குறித்த 06 சந்தேக நபர்களையும் தொடர்ந்து, இம்மாதம் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பின் மீண்டும் இவர்கள் அனைவரும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது சிறைச்சாலைப்பகுதியில் வைத்து 02 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பியவர்கள் வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அழகையா கௌரி ராஜா மற்றும் வவுனியா சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ரவிக்குமார் என வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



0 Responses to வவுனியாவில் இரண்டு கைதிகள் தப்பியோட்டம்