அடக்குமுறைகளுக்கும், அநீதியான சட்டங்களுக்கும் தமிழர்கள் முகங்கொடுக்கும் போதெல்லாம். நாம் அதற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம். இச்சந்தர்ப்பங்களில் நாம் வாய்திறக்க முன்னே எமது கருத்துகள் திரிபுபடுத்தப்பட்டு சிங்கள ஊடகங்களில் வெளியாகின்றன. நேர்மையான தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் சவால் இதுவாகும். ஆனால் இதற்கெல்லாம் நான் சளைத்து, எனது பயணத்தை நிறுத்திவிடுவதில்லை.
பாராளுமன்றத்திலே இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நான் பேசாமடந்தையாக இருப்பதில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் திடீரென விழித்தெழுந்து, எந்த சின்னத்திலே, எந்த கட்சியிலே, எந்தத் தொகுதியிலே போட்டியிட்டால் பாராளுமன்றம் போகலாம் என திட்டமிட்டு செயல்படுவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய நூலக மண்டபத்தில் நடைபெற்ற “மன்னர்களை உருவாக்கும் கலை - அரசியல் தொடர்பாடல்” என்ற தலைப்பில் தேர்தல்; கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் எழுதிய நூல் வெளியிட்டு விழாவில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர எம்பி, விஜித ஹேரத் எம்பி ஆகியோருடன் கலந்துகொண்டு சிங்கள மொழியில் உரையாற்றுகையில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அரசியலாளர்களின் கூற்றுகளையும், செயற்பாடுகளையும் மக்களுக்கு கொண்டு செல்வதுதான் அரசியல் தொடர்பாடலாகும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்துவமான அரசியல் தொடர்பாடல் செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் சில தரப்பினருக்கு அரசியல் தொடர்பாடல் என்றால் என்னவென்று தெரியாது. இவர்கள் தங்களுடன் அரசியல் ரீதியாக முரண்படுபவர்களுக்கு எதிராக கருத்து ரீதியாக பதிலளிக்க தெரியாதவர்கள். தமிழ் மக்களை இலக்காக வைத்து மனித உரிமை மீறல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டபொழுது அவற்றுக்கு எதிராக நாம் குரல் கொடுத்து போராடினோம்.
நண்பர் ரவிராஜிற்கு நடந்தது எனக்கும் நடக்கும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எமது கருத்தை வன்முறையால் எதிர்ப்பவர்கள் ஒரு ரகம். இவர்கள்தான் ரவிராஜை கொலை செய்தார்கள். இத்தகைய வன்முறையாளர்கள் தெற்கில் மாத்திரம் அல்ல, வடக்கிலும் இருந்தார்கள். இன்றும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு ரகம் என்றால், இன்னொரு பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்கள் நான் சொல்லாதவற்றை சொன்னதாகவும், செய்யாதவற்றை செய்ததாகவும் எனது பெயரை திட்டமிட்டு களங்கப்படுத்தியவர்கள்.
இலங்கை அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு உதவி செய்யப்போய் நான் சிக்கலில் மாட்டிக்கொண்ட சம்பவம் அன்று நடந்தது. இதில் நான் செய்யாதவற்றை செய்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச சொல்லித் திரிந்தார்.
2001ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐதேக அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டு ஆட்சியை பொறுப்பேற்ற ஜனாதிபதி சந்திரிகா என்னை அழைத்து புலிகளின் தலைமைக்கு தகவலொன்றை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
அத்தகவல் மிகப்பெரிய விடயம் எதுவுமல்ல. முந்தைய அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற சமாதான முயற்சிகளை எமது அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது என்பதை புலிகளின் தலைவருக்கு என் மூலம் தெரிவிக்க ஜனாதிபதி சந்திரிக்கா விரும்பியிருந்தார். ஐ.தே.க. அரசாங்கத்தை புலிகளுடன் பேசுகிறார்கள் என்று கலைத்துவிட்டு, பதவியை பொறுப்பேற்றவுடன் அதே புலிகளுடன் சமாதானம் பேசுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி சந்திரிகா விரும்பினார் என்பதுதான் இதில் உள்ள அடிப்படை அரசியலாகும். சமாதானத்தில் புலிகளுக்கும், சந்திரிகாவிற்கும் நேர்மையான ஆர்வம் இருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது.
ஆனால் இந்த ரணில், சந்திரிகா, பிரபாகரன் ஆகியோரின் அரசியல் தொடர்பாடலிலும், சித்து விளையாட்டுகளிலும் அப்பாவியான நான் நெருக்கடிக்கு உள்ளானேன். ஜனாதிபதி சந்திரிகாவின் செய்தியை புலித்தலைவர் பிரபாகரனுக்கு கொடுப்பதற்கு கிளிநொச்சி சென்ற நான் பிரபாகரனுடன் நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச கூறித்திரிந்தார். போர் முடிந்த பிறகு கடந்த வருடத்தில் தனது நீச்சல் தடாக கதைக்கு ஆதாரமான வீடியோ கைப்பற்றப்பட்டது என்றும் கூறினார். நான் அப்படி அங்கு நீச்சலடிக்கவில்லை.
எனவே அந்த வீடியோ இருந்தால் எனக்கும் காட்டுங்கள். பிரபாகரனுடன் நீச்சல் தடாகத்தில் எப்படியிருக்கிறேன் என்று பார்க்க விரும்புகின்றேன் என விமல் வீரவன்சவிடம் பின்னர் கேட்டேன். இதற்கு அவர் எல்லோரும் இறந்துவிட்டார்கள்தானே என்று சமாளித்துவிட்டார். ஆனால் நான் சாகவில்லைதானே எனக்கு அதைக் காட்டுங்கள் என்று அவரிடம் கேட்டேன். இதுவரை அவர் தன்னிடமிருப்பதாக கூறிய வீடியோவை வெளிப்படுத்தவில்லை.
எனவே தமிழ் கட்சி தலைவர்களாகிய நாங்கள் வாய் மூடிக்கொண்டு, கிடைப்பதை தாழ் பணிந்து வாங்கிக்கொண்டு, மன்னருக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கிக்கொண்டு காலத்தை கடத்தினால் அது சிக்கல் இல்லாத அரசியல் தொடர்பாடலாகும். ஆனால் எனது நண்பர் கீர்த்தி தென்னக்கோன் எழுதியுள்ள, ஜனநாயக மன்னர்களை உருவாக்கும் அரசியல் தொடர்பாடல் அதுவாக இருக்க முடியாது. சிக்கல்களும், துரோகங்களும், என்னைப்பற்றிய பொய் கதைகளும் எனது அரசியல் வாழ்விலே தொடர் கதைகளாக இருந்தாலும் அவைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. கருத்துக்களை கருத்துக்களால் தான் எதிர்கொள்ள வேண்டும். வசனங்களை வசனங்களால் தான் எதிர்கொள்ள வேண்டும். இதுதான் ஜனநாயக அரசியல் தொடர்பாடலாகும்.



0 Responses to புலிகளின் தலைமைக்கு தகவலொன்றை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்: மனோ கணேசன்