Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் 2007 ம் ஆண்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல்கள் கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியிருந்தன.

இந்தத் தகவல்கள் இலங்கை அரசாங்கத்தையும் அதனுடன் இணைந்துள்ள இரண்டு முக்கிய அரசியல்வாதிகளையும் பெரிதும் திணறடித்துவிட்டன.

இந்தத் தகவல்கள் வெளியானதன் பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்றெனிஸை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த ஜீ.எல்.பீரிஸ் இலங்கை அரசாங்கத்தின் கண்டனத்தையும் விசனத்தையும் வெளியிட்டிருந்தார்.

அந்தளவுக்கு அமெரிக்காவின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் இலங்கை அரசுக்கு மிகவும் பாதகமானதாக அமைந்திருந்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழு என இரண்டு ஆயுதக்குழுக்களின் உதவிகளை அரசாங்கம் பெற்றிருந்தது என்பது இதில் பிரதானமான குற்றச்சாட்டு.

இவர்களுக்கு அரசாங்கம் மறைமுகமாக கொடுத்திருந்த ஆதிகாரங்களால் வடக்கு, கிழக்கில் படுகொலைகள், கப்பம் பெறுதல், ஆட்களைக் கடத்துதல், சிறார் படைச்சோ்ப்பு, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் என்று ஏராளமான குற்றச்செயல்கள் இடமபெற்றதாகவும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டிருந்தன.

இது தொடர்பாக மிகவும் விரிவான தகவல்கள் குறிப்புகளை அமெரிக்கத் தூதரகம் பரிமாறியுள்ளது.யாழ்ப்பாணத்தில் எவ்வாறு படுகொலைகள் இடம்பெற்றன என்பதை விரிவாக விளக்கும் வகையில் இந்தப் பரிமாற்றங்கள் அமைந்திருந்தன.

இந்த அறிக்கையில் ஈ.பி.டி.பி.யும், கருணாகுழுவும் ஆயுதக்குழுக்களைப் பேணிவந்தது தொடக்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறுதல் என்று ஏராளமான குற்றச்செயல்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்ததாக இராணுவ அதிகாரிகளே கூறியுள்ளமை, படுகொலைகளின் பின்னர் நடைபெறும் விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே இருப்பது,குற்றவாளிகளை கண்டறிவது வரை விசாரணைகள் செல்லாதிருப்பது எல்லாமே இந்த அறிக்கையில் வெளிப்பட்டன.

2004ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு,கிழக்கில் ஏராளமான படுகொலைகள் இடம்பெற்றன. 2009 ல் போர் முடிவுக்கு வரும் வரை இந்த நிலை தொடர்ந்து வந்தது. யார் கொன்றது எதற்காகக் கொல்லப்பட்டார் என்று தெரியாமலேயே பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

2006ல் யாழ்ப்பாணத்தில் தினமும் ஒன்று முதல் ஐந்து பேர் வரை சுட்டுப் படுகொலை செய்யப்படுவது ஊடகங்களில் வழக்கமான செய்தியாயிற்று. கிரிக்கட் ஸ்கோர் போல அதைக் கணக்குப்பொடும் கலாச்சாரம் அப்போதிருந்தது. படுகொலைகள் நிகழாத நாட்கள் அப்போது அரிதாகவே இருந்தன.

இந்தப் படுகொலைகள் எல்லாவற்றிற்கும் அப்போது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கைகளில் பயங்கரவாதிகள் அல்லது புலிகளே காரணம் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் ஆதரவாளர்களாகவோ அல்லது சமாதான காலத்தில் அவர்களுக்கு உதவியவர்களாகவோ இருந்தனர்.

அதேவேளை மாற்றுக் கருத்துள்ளவர்களும் புலிகளால் கொல்லப்பட்டதும் உண்மை. இதற்குள் கருணா குழு, ஈ.பி.டி.பி. ஆகியவற்றின் உறுப்பினர்களும் அடக்கம். சமாதான காலத்தின் இறுதிக் கட்டத்திலும் போர் நடைபெற்ற காலங்களிலும் தனித்தனியாகவும் கூட்டாகவும் படுகொலை செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பற்றிய எந்த நீதி விசாரணைகளுமே இதுவரை நடைபெற்றதில்லை.

படுகொலை நடந்தவுடன் பொலிஸார் வந்து விசாரிப்பதும் அதன் பின்னர் பிரேத பரிசோதனை, நீதிமன்ற அறிக்கை வரை போவதும் தான் வழக்கம். அதற்கு அப்பால் எந்த விசாரணைகளும் செல்வதில்லை.யாருமே சந்தேகத்தில் கூடக் கைது செய்யப்படுவதும் இல்லை.

இத்தகைய படுகொலைகளில் இருந்த யாழ்ப்பாண ஊடகங்களும், அந்தத்துறை சார்ந்தவர்களும் கூடத் தப்பவில்லை. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் அது பற்றிய செய்திகள் வெளியாகி அனைத்துலக கவனத்தை ஈர்த்தபோதும் விசாரணைகள் வழக்கம் பேலவே இடம்பெற்றன.

ஊடகவியலாளர் நிமலராஜன் 2000 ம் ஆண்டு கொல்லப்பட்ட போதும் சரி அதற்குப் பின்னர் எத்தனையோ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் சரி குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவில்லை. அதுபோன்றே கொல்லப்பட்ட ஏராளமானோர் பற்றிய எந்த நீதி விசாரணைகளுக்கும் இடமளிக்கப்படவில்லை.

இதன் மர்மம் என்னவென்ற பொதுமக்களில் பலரும் அறிந்தே இருந்தனர். ஆனால் அதை வெளிப்படுத்த முடியாத நிலை அவர்களுக்க இருந்தது. இப்போது அமரிக்காவின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் இதன் பின்புலத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்'தபாயவின் உத்தரவின் பேரில் கொலையாளிகள் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் ஒருவரைப் படுகொலை செய்வதற்கு திட்டமிடும் போது அந்த இடத்தில் இருந்து படையினர் தற்காலிகமாக விலகிக்கொள்வது தொடக்கம் பின்னர் அங்கு வந்து விசாரிக்கும் முறை வரைக்கும் இந்த தகவல்களில் உள்ளடங்கியுள்ளன.

பெண்களைப் பலவந்தமாகக் கொண்டுசென்று படையினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு நிர்ப்பந்தித்ததாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு வடக்கில் ஈ.பி.டி.பி. மீதும் கிழக்கில் கருணா குழு மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஆயுதக்குழுக்களை அரசாங்கம் தனது தேவைக்காக எப்படி பயன்படுத்தியது என்பதை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்துக்குக் கொண்டுசென்றன. அவ்வப்போது அமெரிக்கா ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசுக்குக் கூறி வந்ததற்கான காரணம் இப்போது புரிகிறது.

சுமார் இரண்டரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆயுதக்குழுக்களின் மூலம் குற்றச்செயல்களை புரிந்ததாக அமெரிக்காவின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் இப்போது அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள்.

இவர்களைக் காப்பாற்றவேண்டிய காரணத்தினாலும் ஆயுதக்குழுக்களுடன் அரசாங்கம் தொடர்புகளை வைத்திருந்தது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்காகவுமே விழுந்தடித்துக்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவரை அழைத்து விசனம் வெளியிட்டார்.

இது இராஜதந்திர முறைகளை மீறும் வகையில் அனுப்பப்பட்ட குறிப்புகள் என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் இது போன்ற பணியைத்தான் செய்கின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் எல்லா நாடுகளின் மீதும் அதற்கு ஒரு கண் உள்ளது. ஆனால் சிறிய நாடுகளின் தேவை அப்படிப்பட்டதல்ல. ஐரோப்பிய, அமெரிக்க, கிழக்காசிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கூட இதுபோன்ற புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் சார்ந்த தகவல்களைத் திரட்டுகின்றன. அதையே தான் அமெரிக்கத் தூதரகமும் செய்துள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் அக்கறை அதிகமாக உள்ளதால் அதிகமான தகவல்களை அது திரட்டியுள்ளது.

சிறார்கள் படைச்சோ்ப்பு, சட்டத்துக்கு விரோதமான படுகொலைகள், கப்பம் பெறுதல், பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இதனால் தான் அரசாங்கம் அதிகம் கவலை கொண்டுள்ளது.

கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சர்களாக இருக்கின்ற நிலையில் அமெரிக்காவின் பார்வை இலங்கை மீது ஒரு மாதிரியானதாகவே இருக்கும். இத்தகைய தகவல்கள் அவர்களைப்பற்றி எத்தகைய எண்ணப்பாட்டை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

இதனால் தான் சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்பிக்கொள்வதற்கு அரசாங்கம் டக்ளஸ் தேவானந்தா, கருணா பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்படவேண்டும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அரசாங்கம் அத்தகைய விசாரணைகளுக்கு முன்வரப்போவதில்லை.

இதில் அவர்கள் பலிக்கடாக்களாக்கப்படுவதையிட்டு அரசாங்கத்துக்கு கவலை இருக்காது. ஏனென்றால் ஈப்போது அவர்களின் தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்றே சொல்லலாம். எனவே அத்தகைய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயக்கம் காண்பிக்காது.

ஆனால் அவர்களை இயக்கியது யார் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற நெருக்கடி அரசுக்கு இருக்கிறது. அதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் அமெரிக்கத் தூதுவரை அழைத்து விசனத்தை வெளிப்படுத்தியதற்கு அப்பால் செல்ல விரும்பாது.

ஏனென்றால் இதைக் கிளறப் போனால் ஆபத்து வெளிப்படும் என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும்.

0 Responses to ஒட்டுக்குழுக்களை பலிக்கடாக்களாக்குமா அரசாங்கம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com