Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"நமோ நமோ தாயே" எங்களது இல்லை: ச.ச.முத்து

பதிந்தவர்: ஈழப்பிரியா 21 December 2010

இலங்கைத்தீவில் மனிதஉரிமைகளும்,அனைத்துமக்களின் சம உரிமைகளும் உழைக்கும்மக்களின் வாழ்க்கைத்தரமும் என அனைத்துப்பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இப்போதைக்கு இருக்கும் ஒரேஒரு பிரச்சனை அதன் தேசியகீதம் என்ன மொழியில் பாடப்படவேண்டும் என்பதுதான் என்பதைப்போல சிங்களதேசத்தின் தேசியகீதப்பிரச்சனை ஒருசிலரால் இப்போது அலசப்படுகிறது.

சிங்களதேசத்தின் தேசியக்கொடியை போலவே இந்த தேசியகீதத்தையும் தனது தேசத்தின் தேசியகீதமாக மனதளவிலோ,கருத்தளவிலோகூட ஈழத்தமிழினம் நினைத்துப்பார்த்ததும் இல்லை. நினைத்துப்பார்க்கப்போவதும் இல்லை.அனைத்து உரிமைகளையும் பறித்தெடுத்து,உயிர்களையும் கொத்துக்கொத்தாக பிடுங்கி எடுத்து கூட்டம்கூட்டமாக தடுப்புமுகாம்களில் அடைத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் ஒரு இனம் எப்படித் தான் தம்மை அடக்கி ஆளும் இனத்தின் தேசியகீதத்தை மனமொத்துப்பாடமுடியும். அதன் தேசியகீதம் எந்தமொழியில் இருந்தால்தான் எமக்கென்ன.

சிறீலங்காவின் ஏதோ கூட்டுத்தானத்தின் தலைவராக எவர் வந்தாலும் எமக்கு என்றாவது அதில் ஒரு கவனமும்,ஈர்ப்பும் வந்ததில்லையோ, அதைப்போலவே இந்த தேசியகீதம் பாடும் மொழி பற்றிய சட்டவாக்கமும் எமது மக்களால் ஒரு அறுகம்புல் நுனி அளவுக்குகூட கருத்தில் எடுக்கப்படவில்லை. சிறீலங்கா என்பது இன்னொருதேசம் என்ற எண்ணம் இறுகிஇறுகி உறுதியாகிவிட்டபிறகு அதன் தேசியகீதம்பாடும் மொழிதான் இப்போ முக்கியமா?

இப்போது தமிழர்பகுதியில் பறந்துகொண்டிருக்கும் சிங்கக்கொடிகளின் பின்னால் துப்பாக்கிஏந்திய ராணுவத்தினது பாதுகாப்புதான் நிழலாகநிற்கிறது. அதைவிலத்தி விட்டு ஒருசிறுகணம்கூட அந்த கொடியை அந்த மண்ணில் நிமிர்ந்துபறக்கவைக்க முடியாது என்பது சாதாரணசிங்களமகன் முதற்கொண்டு அனைவருக்கும் தெட்டத்தெளிவாக தெரியும். அந்த அளவுக்கு இலங்கைத்தீவு என்பது இணைக்கவே முடியாத,நிரவமுடியாத அளவுக்கு இரண்டுதேச எண்ணங்களாலேயே நிரம்பி நிற்கிறது.

தேசியகீதத்தை என்ன மொழியில் பாடினாலும், ஏன் தேசிய கொடியில் நந்தி யை போட்டாலும்கூட இந்த எண்ணம் மறையாது. இது வெறுமனே ஒரு துண்டு துணியில் எமது இனத்தை குறிக்கும் படம் போடப்படுவதாலும், தேசியகீதம் எமது மொழியில் நாம் ராகம் இசைத்து பாடுவதாலும் தீரவேதீராது. சுதந்திரம்,விடுதலை என்ற சொற்பதங்களின் அர்த்தம் இவை எல்லாவற்றையும் விட மிகமிக அதிகமானதும். ஆழமானதும்கூட. ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படத்தினை பார்க்கும் உணர்வுதான் இந்த தேசியகீத சட்டவாக்கத்தைப்பற்றிய செய்திகளை பார்க்கும்போது ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை. அவர்களின் தேசியகீதத்துக்கு பின்னும் இத்தகைய நிறைய சேதிகள் கிடக்கின்றது.

சிங்களதேசம் 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் அடைந்தவுடன் காலி முகத்திடலில் சுதந்திரநிகழ்வின்போது தேசியகீதம் எதுவும் இசைக்கப்பட வேயில்லை.அதன் பின்னர் தேசியகீதத்தை தெரிவுசெய்யும் குழு ஒன்று எட்வின் விஜேவர்த்தனா தலைமையில் அமைக்கப்பட்டு அந்தக்குழுதான் 1951ம்ஆண்டு நசம்பர்22 ம்திகதி இப்போதைய தேசியகீதத்தை சிங்களதேசத்தின் தேசியகீதமாக தெரிவுசெய்தார்கள்.

இந்த தேசியகீதம் 1940 களிலேயே ஆனந்த சமரக்கோன் என்பவரால் இயற்றப்பட்டது. ஆனந்தசமரக்கோன் இந்தியாவின் தேசியகீதத்தை எழுதிய ரவீந்திநாத்தாகூரின் சாந்திநிகேதனில் பயின்றவர்.ஜோர்ஜ் வில்பிரட் அல் விஸ் சமரக்கோனாக சாந்திநிகேதன் போனவர் மீண்டு சிங்களம் திரும்பும்போது ஆனந்தசமரக்கோனகவும் அத்துடன்நமோ நமோ தாயேஉடனும் திரும்பினார்1951ல் அவரது பாடலை தேசியகீதமாக்கிய சிங்களதேசம் அதன்பின்னர் 1962ல்தேசியகீதத்தின் சிலவரிகளை மாற்றியபோது தேசியகீதத்தை இயற்றிய ஆனந்தசுமரக்கோன் மிக அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இயற்றியவரையே பலிவாங்கிய துன்பியல்ராகம் நிறைந்த தேசியகீதம் அது. இங்கிலாந்தில் அறுபட்ட மூக்குடன் லங்கா திரும்பிய மகிந்தருக்கு குளிர்விக்க அவசரமாக எடுக்கப்பட்ட முடிவுதான் தேசியகீதம்பாடும் மொழிசம்பந்தமானதீர்மானம்.

ஆனால் எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்த சிங்கள அமைச்சர்களும்பேரினவாத கனவில் மிதக்கும் சிங்கள ஊடகங்களும் கொடுக்கும் விளக்கங்களும், வியாக்கிஞானங்களும் கேலிக்குரியவைகளாக இருக்கின்றன. பலமொழிபேசும் இனங்கள் வாழும் எந்த ஒரு நாட்டிலும் தேசியகீதம் ஒன்றுக்குமேற்பட்டமொழியில் இல்லை என்பது வாதமா கோசமா தெரியவில்லை.எதுவாகினும் கொஞ்சம் புவியியல்,பூகோளஅறிவுகளை உள்வாங்கி எழுப்புவார்களாகஇருந்தால் நன்று.ஏனென்றால் இன்றும் கனடாவிலும், பெல்ஜியத்திலும், பிலிப்பைன்சி லும், சிங்கப்பூரிலும், தென்ஆபிரிக்காவிலும் அதனதன் தேசியகீதங்கள் அங்குள்ள இனமக்களின் மொழிகளில் உள்ளன. அதிலும் தென்ஆபிரிக்காவின் தேசியகீதம் Xhosa,Zulu,Sesotho,Afrikaans,English என்ற மொழிகளின் கலவைகளாக அதன்ஓவ்வொரு மூன்றுவரிகளும் அமைந்துள்ளன. எதுஎப்படி இருந்தபோதிலும் எமக்கென்று ஒரு தேசியம் உண்டு.அதற்கென்று ஒரு நிலம் உண்டு.இப்போது அது முழுதாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் என்றாவது ஒருநாள் அது விடுதலைஆகியே தீரும்.அப்போது எமது மாவீரர்களின்நினைவு சுமந்ததும்,எண்ணற்ற வனப்புமிக்கதுமான எமது தமிழீழதேசத்தின் தேசியகீதத்தை எமது மக்கள் வானதிர பாடுவார்கள்.

நன்றி: ஈழமுரசு:17.12.2010

0 Responses to "நமோ நமோ தாயே" எங்களது இல்லை: ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com