தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இந்தியா, இலங்கை ஆகியவை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை கடற்படை. இதில் சிக்கி இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் முடிவே இல்லாமல் இலங்கைப் படையின் அரக்கத்தனம் நடந்து வருகிறது.
சமீபத்தில் அடுத்தடுத்து 2 மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சட்டசபைத் தேர்தல் வரும் சமயம் என்பதால் அரசியல் கட்சிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன.
இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத அதிசயமாக துரித கதியில், இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம், எதிர்ப்பு, கண்டிப்பு என்று இறங்கியது,.
மேலும், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.
அதன்படி சென்னை வழியாக நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார் நிரூபமா ராவ். இன்று ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதித்தார். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் நிரூபமா வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த இலங்கைத் தரப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், பிரச்சினைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் மீனவர் சங்கங்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.
எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் செயலாளர் எஸ்.கே.பாண்டியன் கலந்து கொண்டார் என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அதிகாரி ஒருவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக இதுவரை தமிழகஅரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா, இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை தூதர் பிரசாத் காரியவம்சம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சென்னையில் மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்தும் நிரூபமாவிடம் ராஜபக்சே விவாதித்தார். மேலும், இந்தியாவின் நிதியுதவியுடன் நடந்து வரும் திட்டங்கள் குறித்தும் ராஜபக்சேவிடம் நிரூபமா விவாதித்தார்.



0 Responses to தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது: இந்தியா, இலங்கை கூட்டறிக்கை