இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,
இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் முத்துக்குமார் உயிர்த் தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 15 பேர் ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்தனர்.
இறந்தவர்கள் எல்லோருமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழைகள். எனினும், தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் உயிர்தான் எனக் கருதி, ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த தியாகிகளின் குடும்பத்தார், அரசு அளித்த பணத்தை வாங்க மறுத்தனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும்.
கடந்த 27 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது. இதைக் கேட்க நாதியில்லை. உலகின் 5 வது பெரிய கடற்படையை வைத்துள்ள இந்தியாவால், எல்லை தாண்டும் ஒரு சிறிய நாட்டின் கடற்படையைத் தடுக்க முடியவில்லை என்பதை யாராவது நம்புவார்களா? ஆனால், தமிழர்கள் என்பதால் இவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நமது மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்.
தமிழ் இனத்தைக் காக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் வரும்.
தமிழ் தேசிய இனம் ஒன்றுபட்டால், அதை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இப்போதாவது இந்த அபாயத்தை நாம் உணராவிட்டால், நமக்கு விடிவு வராது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நமக்குள்ளது என்றார். பழ.நெடுமாறன்.



0 Responses to ஈழத்தமிழரைக் காப்பாற்ற 6.5 கோடி தமிழகத் தமிழர்கள் கொதித்தெழ வேண்டும்: பழ.நெடுமாறன்