Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் எனப் புலிகளின் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் மீண்டும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் எனப் புலிகளின் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் மீண்டும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர் என்று நாடாளுமன்றத்தில் நேற்றுப் பதற்றப்பட்டார் பிரதமர் டி.எம்.ஜயரத்ன.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அவர் இதனை முன்வைத்தார்.

".நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்தக் கூட்டம் அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இராஜதந்திரத் தொடர்பாடல்களின் மூலம் அரசு இதை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் அவற்றுக்குத் துணைபோகும் நாடுகளும் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன'' என்றார் பிரதமர்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. முடிவில் 109 வாக்குகள் வித்தியாசத்தில் அது நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.பிரேரணையை ஆரம்பித்து வைத்துப் பேசினார் பிரதமர்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

போர் முடிவுற்ற நிலையில் அரசு பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.11 ஆயிரத்து 600 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆறாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒரு பிரிவினர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகின்றது.

அனைத்துலக மட்டத்தில் புலிகளுக்கு பணம் வழங்கியும் ஆயுதங்களை வாங்குவதற்கும் உதவி செய்துவந்த புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சுவிட்ஸர்லாந்தில் புலிகளுக்கு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்த பத்துப்பேரை சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுவிஸ் அரசு புலி ஆதரவாளர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்தி உள்ளது. கனடா அரசு புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளையும், சொத்துகளையும் முடக்கி வைத்துள்ளது. இப்படியான நிலையிலும் நாம் வடக்கு, கிழக்கு உட்பட இங்கு வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு ஈடுபாட்டுடன் முயற்சித்து வருகின்றோம்.

ஆனால், அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என புலம்பெயர் தமிழர்களும் புலி ஆதரவாளர்களும் மீண்டும் கோஷங்களை ஆரம்பித்துவிட்டனர். யுத்தம் முடிந்துவிட்ட நிலையிலும் பல பொலிஸ் பிரிவுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

சில குழுக்கள் ஆயுதங்களுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. துரதிர்ஷ்டவசமாக காலநிலை மாற்றத்தினால் வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எமது நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் இப்படியான இடர்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், நாம் பாதிப்பட்டவர்களுக்கு அவசியமான உதவிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சியினர் அரசை விமர்சிப்பதை கைவிட்டு, நாட்டு மக்கள் மத்தியில் உணர்வுகளைத் தூண்டிவிடாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

1 Response to மீண்டும் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் மக்கள் போர்க்குற்றம்

  1. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த கண்கட்டு வித்தைகளைக் கண்டு ஏமாந்து விட்டார்கள் ஈழத்தமிழர்கள். முதலில் தமிழருக்கு சுதந்திரம் வழங்கி அவர்களின் அமைதியான வாழ்விற்கு வழிசமைத்துக் கொடுத்து நிரந்தர அரசியல் தீர்வை விரைவில் முன் வைக்கட்டும். அதன் பின் தமிழர் முடிவெடுக்கட்டும். இனியும் ஏமாற தமிழன் இழிச்ச வாயனல்ல. என்னதான் தீர்வை வைத்தாலும் கொலைவெறியரை நீதியின் முன்னால் நிறுத்தும் வரை தமிழரின் போராட்டம் ஓயாது.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com