ஊடகங்களின் மீதான சிறீலங்காவின் அடக்குமுறையும் வன்முறைகளும் போர் நடை பெற்ற காலங்களில் மட்டுமல்ல, போர் முடிவடைந்ததன் பின்னரும் தொடர்கின்றது என்பதற்கு அண்மையில் கொழும்பிலுள்ள ஊடக நிறுவனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது வரையான சாட்சியங்கள் உள்ளன.
போர் நடைபெற்றபோதும், அது முடிவுற்றதாக கூறப்பட்டதன் பின்னரும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிமலராஜன், தராகி சிவராம், லசந்த விக்கரமதுங்க... என பிரபல்யமான ஊடகவியலாளர்கள் உட்பட 35ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சிறீலங்கா இராணுவத்தின் தீவிர கண்காணிப்பு வலயங்களுக்குள் வைத்தே இவர்களில் பலர் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட மிக நீண்ட ஊடகவியலாளர்கள் பட்டியல் உள்ளபோதும் இன்றுவரை இந்தக் கொலைகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் சிறீலங்காவினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், யாரும் இதுதொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவும் இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இதனை அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்மைப்பு என்ற ஊடக கண்காணிப்பு அமைப்பான சி.பி.ஜேயும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்காவின் இந்த நிலைமையைச் சுட்டிக்காட்டியிருந்தது. ‘இலங்கையில் காணாமல் போயிருக்கும் ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்கவோ, அன்றி வன்முறைக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மேலும் அடக்கும் வகையில் ஊடகச் சட்டத்தில் இறுக்கமான நடை
முறைகளை அமுலாக்கம் செய்வது பற்றி ஆலோசித்து வருவதாகவும்’ அந்த அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது.
ஊடகவியலாளர்கள் மீதான சிறீலங்காவின் அடக்குமுறை என்பது அதன் நாட்டு எல்லைக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்த் தேசியத்திற்காக குரல்கொடுக்கும், அதற்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்களை ஒடுக்குவதற்கு அது தனது வன்முறைக் கரங்களை எல்லைகளைத் தாண்டியும் நீட்டியுள்ளது என்பதற்கு ஈழமுரசின் நிறுவனர் கப்டன் கஜன் படுகொலை ஒரு உதாரணம்.
இன்று போர் முடிவடைந்ததாக கூறும் நிலையிலும் உலகெங்கும் இருக்கும் தமிழ்த் தேசிய ஊடகங்களை அடக்கும் நடவடிக்கையில் மகிந்த அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக தங்கள் மீது போர்க் குற்றங்களை, இனப்படுகொலை ஆதாரங்களை வெளிக்கொண்டுவரும் ஊடகங்களை தமது கைகளுக்குள் கொண்டுவர தம்முடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களின் மூலம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சில வெற்றியடைந்தபோதும், தமிழ்த் தேசிய அரங்கில் தீவிரமாக நின்று செயற்படும் அல்லது சிறீலங்காவை போர்க் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் உறுதியுடன் செயற்படும் ஊடகங்களை அதனால் தனது கரங்களுக்கு கொண்டுவர முடியவில்லை.
தனது முயற்சிகள் கைகூடிவராத நிலையில் தற்போது வன்முறையின் ஊடாக அந்த ஊடகங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் அது தீவிரமாக இறங்கியுள்ளது. இணையத்தளம் ஊடாக இனப்படுகொலை, போர்க் குற்றம் தொடர்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஈழம் ஈ நியூஸ் என்ற இணையத்தளத்தை அண்மையில் சைபர் தாக்குதல் மூலம் முடக்கியதுடன், அந்த இணையத்தள உரிமையாளரும் தொலைபேசி ஊடாக கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
அதேபோன்றே கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறை ரீதியிலான அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில் இருந்து அவர்கள் சாதுரியமாக தப்பித்துள்ளபோதிலும், அந்தக் வன்முறைக் கரங்கள் இனியும் நீளாது என்பதற்கில்லை.
எனவே, ஊடகவியலாளர்கள் மீதான சிறீலங்காவின் எல்லைதாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உலக ஊடக அமைப்புக்கள் தங்கள் கரிசனையை வெளிக்கொண்டு வரவேண்டியதும், இதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியதும் சுதந்திர ஊடக உலகிற்கு இன்றைய அவசியமாகின்றது.



0 Responses to இலக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய ஊடகங்கள்: ஈழமுரசு