Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீரத்தின் அன்னை! - கிரிகாசன்

பதிந்தவர்: ஈழப்பிரியா 22 February 2011

மாமலையை தோள்களிலே சுமந்தவரும் -ஈழ
மன்னவனைத் தன் மடியில் கண்டவரும்
தேமதுர குரலெடுத்து தாலாட்டி -அந்தத்
தெய்வமகன் கையணைத்து சீராட்டி
போமகனே பள்ளிஎன்று விட்டவரும் பின்பு
போர்முடிக்க செல்லவிடை தந்தவரும்
பூமியிலே சோர்ந்து துயில் கொள்ளுவதேன் ஒரு
பூமரத்தைபோல் ஒடிந்து வீழ்ந்ததுமேன்

நானிலத்தை நடுநடுங்க வைத்தவனாம் -பல
நாடுகளைப் பீதியுறச் செய்தவனாம்
தான் நிலத்தை காத்து மண்ணை ஆண்டவனும் ஒரு
தலைவனெனில் என்னவென்று காட்டியவன்
மாநிலத்து மன்னனுக்கு தாயுமிவள் ஒரு
மணிமுடிக்கு அருகில்நிற்கும் அன்னையவள்
ஆ..!நிலத்தில் வீழ்ந்திருக்க அழுகிறதே மனம்
ஆற்றவழி யின்றி நெஞ்சு துடிக்கிறதே

ஐந்துவிரல் அமுது ஊட்ட வளர்த்தவனாம் இந்த
அகிலமெங்கும் கிடுகிடுக்க வைத்தவனாம்
செந்தமிழை பூமியிலே கேட்டவர்கள் இது
சீறி வரும் வேங்கையென்று அஞ்சிடவே
சொந்தபடை நாடு மக்கள் கொண்டவராம் ஒரு
சொல்லினிலே மக்கள் மனம் வென்றவராம்
விந்தைதன்மைப் பெற்றவளே வீரமகள் இன்று
விழிகள் மூடித்துங்குகிறார் வேதனையே

பட்டதுயர் எத்தனைதான் பாருமம்மா உன்
பக்குவமோ எங்களுக்கு இல்லையம்மா
சுட்டழிக்கும் சிங்களதின் பார்வையிலே பெரும்
சொல்லரிய துன்பமுற்றும் ஈழததிலே
விட்டுவிடு இந்தமண்ணில் விதையாவேன் நான்
வீழ்ந்திடினும் எம்மண்ணில் தலைசாய்ப்பேன்
சொட்டு நீரை விட்டுமுயிர் போகையிலே என்
சொந்த மண்ணின் நீர் குடித்து செல்லவென

கட்டிலிலே நீபடுத்துக் கலங்கியதும் ஒரு
கன்றிழந்த தாயெனவே கதறியதும்
விட்டு மறந்தெங்கள் வாழ்வு இல்லையம்மா நின்
வீரமகன் காட்டும்வழி நாம்நடப்போம்
தட்டியினி நீதிகேட்கும் காலமிது இனி
தலையெடுத்து நாம்நடந்து ஈழமதை
கட்டியொரு நாளமைத்து காத்திடுவோம் அன்று
கையெடுத்து உனைவணங்கி தொடர்ந்திடுவோம்

0 Responses to வீரத்தின் அன்னை! - கிரிகாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com