யாழ் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவிற்கு யாழ் ஆயர் கடந்த 11ஆம் நாள் திகதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் இரவுநேர வீதிக் கண்காணிப்புக்களை அதிகரித்திருப்பதால், கடந்த காலங்களில் அதிகரித்துவந்த கொள்ளைகள், கொலைகள், மற்றும் கடத்தல்கள் குறைவடைந்திருப்பதாக இந்தக் கடிதத்தில் நன்றி கூறப்பட்டுள்ளது.
யாழ் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் ஆயரின் கடிதம், மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த சிறீலங்கா படைகள் எடுக்கும் நடவடிக்கைக்கு தமது ஆதரவும், ஒத்துழைப்பும் இருக்கும் எனவும் கூறுகின்றது.
ஆயரின் கடிதத்தை தமது பரப்புரைக்குப் பயன்படுத்தும் சிறீலங்கா படைகளும், அது சார்ந்த ஊடகங்களும், கடந்த 15ஆம் நாள் உதயன் பத்திரிகையில் வெளியான ஆசிரியர் பத்தியில், சிறீலங்கா படையினரது பாதுகாப்பு நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவந்த படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் குறைவடைந்து மக்கள் ஆறுதல் அடைந்திருப்பதாகக் கூறப்பட்டதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
யாழ் குடாநாட்டில் இடம்பெறும் படுகொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் அங்கு ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினராலும், அவர்களுடன் இணைந்தியங்கும் துணைப்படைக் குழுவாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர்களில் ஒருவரான சரவணபவனுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் குடநாட்டு சம்பவங்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் எனத் தெரிந்திருந்தும், யாழ் ஆயர் படைத் தளபதிக்கு அனுப்பியுள்ள இந்தக் கடிதம், உதயனின் கூற்று என்பன பல சர்ச்சைகளையும், கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.



0 Responses to படையினரது பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்போம்: யாழ் ஆயர்